Monday, November 2, 2009

சில அதிர்ச்சிகளும் பல ஆச்சரியங்களும்



அடுத்த வினாடியில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் ஏராளம் என்றாலும் வாழ்க்கை எவ்வித எதிர்பார்ப்புமின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆயினும் அவ்வப்போது நினைவுகளில் இளைப்பாறும் பொழுது, சற்றுப் பின் நோக்கினால் அந்த ஆச்சரியங்கள் எப்பொழுதும் மகிழ்வையும், அதிர்ச்சிகள் பல அனுபவங்களையுமே கற்றுக் கொடுத்துள்ளன.

நினைவில் தெரிந்த முதல் வியப்பு எங்கள் வீட்டுக் கோழி இடும் முட்டைகளும் அது பொரிக்கும் குஞ்சுகளும். ஒவ்வொரு முறை அது அடை காக்கும் போதும் முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சுகள் வெளிவருவதைக் காணும் ஆவலில் தினமும் மாலை பள்ளியில் இருந்து வந்து கூடையைத் திறந்து பார்ப்பேன்.

எப்போதும் என்னிடம் அன்பாக இருக்கும் தாய்க்கோழி, குஞ்சுகள் பிறந்த அன்று அனைத்தையும் தன் இறகுகளுக்குள் ஒளித்துக் கொண்டு என்னை முறைத்துப் பார்க்கும். குறைந்தது நான்கு ஐந்து நாட்கள் யாரையும் அதனிடம் நெருங்கவே விடாது.

 சில தினங்களில் அவை அனைத்தும் என் காலடியில் சுற்ற ஆரம்பித்ததும் பஞ்சு போல் மென்மையான கோழிக் குஞ்சுகளை இரண்டு கைகளுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்து நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பேன்.

வெளியே மேயச் சென்றாலும் அவை வீட்டிலிருந்து வெகு தூரம் செல்லாது. பின்னால் உள்ள சோளக்காடுதான் அதிகபட்ச தொலைவு. அம்மா சற்று உரக்கக் கூவினால் எங்கிருந்தாலும் வீட்டு முற்றத்துக்கு அனைத்தும் ஓடோடி வந்து விடும். மாலை ஆறு மணியானால் வெளியே தொட்டியில் உள்ள நீரைப் பருகிவிட்டு தானாகச் சென்று கூட்டில் அடைந்து விடும்.

ஒரு கோடை விடுமுறை நாளில் மதியம் பனிரெண்டு மணியளவில் மிகவும் தளர்ந்து நடந்து வந்தது தாய்க்கோழி. வழியிலேயே இரண்டு குஞ்சுகள் நடக்க முடியாமல் கீழே விழுந்து மரித்தன. உடனிருந்த சில குஞ்சுகளையும் காணவில்லை.  தாய்க்கோழி வேதனையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டே வாயைத் திறந்தபடி மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தது.

அம்மா அதனை மடியில் வைத்து ஒரு கிண்ணத்திலிருந்த தண்ணீரைப் புகட்ட முயற்சித்தார், ஆனால் எல்லா நீரும் வெளியே வடிந்தது. சில நிமிடங்களில் அம்மாவின் மடியிலேயே நூற்றுக்கணக்கான குஞ்சுகளைப் பெற்ற அந்த தாய்க்கோழியின் துடிப்பு அடங்கியது.

மருந்து அடித்திருந்த விதை சோளங்களைத் தின்று ஒட்டுமொத்தமாய் எங்களை விட்டு அந்தக் குடும்பம் பிரிந்ததுதான் என் நினைவில் தெரிந்த முதல் அதிர்ச்சி, துயரம், இழப்பு.

அதன் பின்னர் ஒவ்வொரு கால கட்டங்களிலும் வியந்த, அதிர்ந்த நிகழ்வுகள் பலப்பல.

பள்ளி நாட்களில் ஆசிரியர்களால் பாராட்டப்படும் போது ஏற்படும் மகிழ்வு, காரணமே இல்லாமல் வெறுத்து ஒதுக்கிய சில ஆசிரியர்களால ஏற்படும் அதிர்ச்சிகள்.

படிப்பு மற்றும் விளையாட்டில் செய்த சிறு சிறு சாதனைகளுக்கு நண்பர்கள், உறவினர்களின் பாராட்டுக்கள், பரிசுகள்.

பதின்ம வயதுகளில் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள், குரல் உடைந்து, மீசை முளைத்து, சம வயதொத்த பெண்களை நோக்கும்போது ஏற்பட்ட கிளர்ச்சிகள்.

பள்ளியில் அனைவருக்கும் பிடித்த பரிமளா டீச்சரின் தற்கொலை, தாத்தா, பாட்டி, பெரியப்பா மற்றும் ஒன்று விட்ட அண்ணன் ஆகியோரின் இழப்பு.

கல்லூரி நாட்களில் எங்கிருந்தோ வந்து எதனாலோ என்னைப் பிடித்து இன்று வரை தொடரும் நண்பர்களின் அன்பு, நட்பு.

பணியில் சேர்ந்த முதல் மாத சம்பளம், அதன் நினைவாய் வாங்கிய பொருள். என் உழைப்பில் வாங்கிய ஸ்ப்ளெண்டரை, சென்னை மாநகரத் தெருக்களில் ஓட்டிச் சென்ற நாள்.

இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாழ்வின் சில நிகழ்வுகள் எனினும் இதே காலங்களில் நிகழ்ந்த பல்வேறு சமூக நிகழ்வுகளின் தாக்கங்கள் ஏற்படுத்திய வியப்புகளும், வலிகளும் வேதனைகளும் என ஒவ்வொரு நாளும் வாழ்க்கை அதன் பாடங்களை கற்பித்துக் கொண்டே இருக்கிறது.

உலகின் உயரத்தில் நான் மட்டும் இருப்பது போன்றே கூனிக்குறுகி ஒரு இருண்ட குகையிலும் இருப்பதாய் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். பணி நிமித்தமாய் பல நகரங்களில் தனியனாய் உழன்ற போது அந்த இருண்ட குகையின் வெளிச்சமாய் வந்தது இணையமும், தமிழ் வலைப்பதிவுகளும்.

அதுவரை முகமறியா நட்பில் ஒரு போதும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் இன்று இணைய நண்பர்களால் நிகழ்ந்த பல வாழ்வியல் மாற்றங்கள் என்னை வாழ்வின் அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளதை நிச்சயம் மறுக்க முடியாது.


உறங்க நேரமில்லாக் கடும் பணிச்சுமையின் இடையே கிடைத்த மற்றுமொரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தமிழ்மணத்தின் இந்த அங்கீகாரம்.


ஒரு வாசகனாய் இருந்தபோது கிடைத்த அனுபவங்களும் ஆச்சரியங்களும் ஏனோ எழுதத் துவங்கிய பின்னர் கிட்டவில்லை. இருப்பினும் இதோ மீண்டும் ஒருமுறை வாழ்வின் இருண்ட குகையிலிருந்து உலகின் உயரத்திற்கு மனம் செல்கிறது, உங்களின் அன்பையும் ஆதரவையும் நட்பையும் எதிர்நோக்கி.

31 comments:

  1. கிட்டத்தட்ட கிராமத்தோடு தொடர்புடைய எல்லோருக்குமே இந்த அனுபவங்கள் இருக்கும்.குறிப்பா கோழி அடைகாத்தலின் போது குஞ்சு எத்தனை பொறித்திருக்கிறது, கூமுட்டையிலும் குஞ்சு இருக்குமென்று தூக்கி வீசாமல் ஓரிரு நாட்கள் பார்த்துக்கொண்டே இருப்பது என என்னின் பால்யத்தை அசைபோட வைத்துவிட்டீர்கள்.

    அருமையான நடை நாகா.வாழ்த்துகள்...!

    ReplyDelete
  2. //ஒரு வாசகனாய் இருந்தபோது கிடைத்த அனுபவங்களும் ஆச்சரியங்களும் ஏனோ எழுதத் துவங்கிய பின்னர் கிட்டவில்லை. இருப்பினும் இதோ மீண்டும் ஒருமுறை வாழ்வின் இருண்ட குகையிலிருந்து உலகின் உயரத்திற்கு மனம் செல்கிறது, உங்களின் அன்பையும் ஆதரவையும் நட்பையும் எதிர்நோக்கி.//

    உங்கள் நினைவுகள் நெஞ்சை நிரடுகிறது நாகா... கோழிக்குஞ்சுகளை நானும் அவ்வாறே கண்ணுற்றிருக்கிறேன். எழுதுதலை விடவும் படித்தல் சுகமானதுதான்.

    அருமை நண்பா...

    பிரபாகர்.

    ReplyDelete
  3. நாகா, மிகச் சிறந்த பதிவு. அருமையான நடை. வாழ்த்துகள்.

    கோழி இறந்ததற்கான காரணத்தைப் படிப்போர் உணர்வார்கள் என்று நினைக்கிறேன். நேற்று பூச்சிக்கொல்லி இன்று பி.டி. :( நாமும் உடல் நலிவடைந்து வருகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோமா?

    உங்கள் நினைவுகளை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்!!

    ReplyDelete
  4. வாருங்கள் நாகா. வாழ்த்துகள். அருமையாக நனவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. கண்டிப்பாக அன்பும்.. நட்பும்.. எப்பொழுதும் உனக்கு உண்டு மச்சி!!
    ஆனா, காசு மட்டும் கேட்காதே! :-)

    இப்ப வேலை பளு குறைந்து விட்டதா? நிறைய பதிவுகளை எதிர் பார்க்கிறேன்... ரஜினி படம் மாதிரி மாசத்துக்கு ஒன்னு போடாம, வாரத்துக்கு ஒன்னு போடு மாமே!!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கதாநாயகனுக்கு.

    ReplyDelete
  7. மிகப் பிடித்திருந்தது சொல்லிய விதமும் வார்த்தைகளும்.

    ReplyDelete
  8. கோழி பற்றிய உணர்வுப்பூர்வமான பகிர்வு... கிராமங்களில் வளர்ப்பு விலங்குகளும் குடும்பத்தில் ஒரு அங்கமே...

    நட்சத்திரமாய் மின்ன நாகாவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. தமிழ்மணம் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வாழ்த்துகள் நாகா. பணியின் சுமை கூடியிருக்கும் நேரத்திலும் நட்சரத்திர பதிவுகள் தொடர்ச்சியாக வரும் என நம்புகிறோம்.

    வார்த்தைகளை காட்சிகளாக விரிய வைத்தது உங்களின் இந்த பதிவு. நன்றி. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  11. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா... அருமையா பதிவு

    ReplyDelete
  12. //ஒரு வாசகனாய் இருந்தபோது கிடைத்த அனுபவங்களும் ஆச்சரியங்களும் ஏனோ எழுதத் துவங்கிய பின்னர் கிட்டவில்லை//

    நாமும் உடல் நலிவடைந்து வருகிறோம்//

    தமிழ்மணம் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்..//

    அதுவரை முகமறியா நட்பில் ஒரு போதும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் இன்று இணைய நண்பர்களால் நிகழ்ந்த பல வாழ்வியல் மாற்றங்கள் என்னை வாழ்வின் அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளதை நிச்சயம் மறுக்க முடியாது.

    இது போல் ஒவ்வொன்றாக வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் புரியவைக்கும். புரிய வைக்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது முயற்சிக்கவாவது வேண்டும்.

    அந்த வகையில் தமிழ் மணம் உருவாக்கி உள்ள இந்த எல்லை கடந்த வீச்சு என்பது மலர்களின் மகரந்த காற்று போல் தான் வாழ்க்கையில் சுவை கூட்டுகிறது.

    மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியாய் இருக்கிறது நாகா.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள். இயல்பான உங்கள் நடையிலே தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  14. நல்ல பதிவு நாகா...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. உடுமலையாருக்கு வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  16. //ஒரு வாசகனாய் இருந்தபோது கிடைத்த அனுபவங்களும் ஆச்சரியங்களும் ஏனோ எழுதத் துவங்கிய பின்னர் கிட்டவில்லை. இருப்பினும் இதோ மீண்டும் ஒருமுறை வாழ்வின் இருண்ட குகையிலிருந்து உலகின் உயரத்திற்கு மனம் செல்கிறது, உங்களின் அன்பையும் ஆதரவையும் நட்பையும் எதிர்நோக்கி.
    //

    ஒருவேளை எதிர்பார்ப்புகள் காரணமாக இருக்கலாம்.

    நினைவுகளை அசைப்போடும் நட்சத்திர இடுகைகள் சிறப்பான தொடக்கமாக இருக்கிறது

    ReplyDelete
  17. தன்னுடைய குஞ்சைக்காக்க ஒரு பருந்துடன் போராடிய ஒரு பெட்டைக்கோழியின் வீரம் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.

    ஓட்டு போடவேண்டிய பதிவு.

    ReplyDelete
  18. எனக்கு இதை படித்தும் நடிகர்கள் சில பேர் தான் திரும்பி வந்த பாதை / நினைவுகளை அனந்த விகடனில் எழுதி இருந்தார்கள் அது தான்
    ஞாபகம் வந்தது .

    அதில் சேரன், டைரக்டர் பாலா , பிரகாஷ் ராஜ் எழதியது நன்றாக இருந்தது என்று என் எண்ணம்.

    டைரக்டர் பாலா எப்படி தான் ஒரு ஆட்டுக்குட்டியை மிகவும் நேசித்ததை அழகாக சொல்லிஇருப்பார், தினமும் புல், சில சமயம் கீரை , ...தினமும் அதன் கூட பேச்சு, பள்ளியில் நடந்தது , அது இதுன்னு ரொம்ப பிர்யமாக இருந்தார்... ஒரு நாள் வீட்டில் நிறைய பெரியவர்கள், விருந்தினர்கள் எல்லாரும் வந்து , பெரிய விருந்து நடை பெற்றது ... சின்ன பையன் பாலாவும், பள்ளியில் இருந்து வந்து விருந்து சாப்பிட்டார், அம்மாவிடம் ... அந்த ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்ட பொழுது ... அதை தான் சாப்ட்டுடியே என்று சொன்னார்கள்... அவ்வளவு தான் .... அது மிக ஆழமாக தாக்கியது பாலாவை... அன்று விட்டது மாமிசம் சாப்பிடுவதை ...

    மீண்டும் நட்ச்சத்திர பதிவர் நாகவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நாடோடி இலக்கியன், ப்ரபாகர், செந்தில், சென்ஷி, ஆதவன், வானம்பாடிகள் ஐயா

    ReplyDelete
  20. நன்றி கலை, நர்சிம், கதிர், ஜோதிஜி, சுந்தர், இஸ்மத்ஜி, கோவியார், செல்வராஜ், மகேஷ், திகழ், செந்தழல் ரவி, ப்ரியமுடன் வசந்த்,. நெகிழ்வாய் உணர்கிறேன் உங்கள் வரவேற்பில்

    ReplyDelete
  21. நட்சத்திர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்..இன்னும் நிறையா எழுதுங்க ..

    ReplyDelete
  23. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தீபா, வினோத்..

    ReplyDelete
  24. நல்ல பதிவு தல...வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  25. நட்சத்திர வாழ்த்துக்கள்! நல்ல பதிவு.

    சிறுவயதில் எங்கள் வீட்டுக் கோழிக்குஞ்சு கிணற்றில் விழுந்தபோது வாழியை விட்டு அப்பா அதை வெளியே எடுத்துக் காப்பாற்றியதும் நாங்கள் அடைந்த சந்தோசமும் ஞாபகத்திற்கு வந்தது.

    "ஒட்டுமொத்தமாய் எங்களை விட்டு அந்தக் குடும்பம் பிரிந்ததுதான் என் நினைவில் தெரிந்த முதல் அதிர்ச்சி"

    இதைப் படித்த எங்களுக்கும் கவலை கொள்ள வைத்தது.

    ReplyDelete
  26. பதிவுலகையும் தாண்டி நீங்கள் பல உயரங்களைத் தொட, எனது வாழ்த்துக்கள் நாகா!

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள்! நல்ல பதிவு.

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...