Friday, November 6, 2009

எதிர்காலம் எவர் கையில்?



நம்மில் பலருக்கு சமூக அக்கறை இருந்தாலும், நம்மால் பங்களிக்கக் கூடிய பல நிகழ்வுகளிலும் கூட வெறும் பார்வையாளராய்தான் இருக்கிறோம். அவ்வப்போது அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்த முனைந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இன்மையால் பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு கண்டு பல நேரங்களில் பரிதாபத்தோடும் புலம்பல்களோடும் நிறுத்திக் கொள்கிறோமே தவிர ஆக்கப்பூர்வமான செயல்களில் இறங்குபவர்கள் வெகு குறைவே.

வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது நம் தமிழகத்தில் இந்த வேறுபாடு சற்று குறைவு என்றாலும் அனைவருக்கும் சம உரிமை என்ற இலக்கை அடைய இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. கான்வென்டில் படிக்கும் நம் பிள்ளைகளின் பொதி மூட்டைகளைப் பற்றிக்கூட கவலைப்படாத நாம் என்றாவது வெளி உலகத் தொடர்பே இல்லாத பல குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறோமா?

ஆனால் நம்மைப்போன்று கணினியிலேயே காலைக் கடன்களைக்கூட கழிக்கும் இந்தத் தலைமுறை இளைஞர்களின் மத்தியில் சில செயல் வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரால் உருவாக்கப் பட்ட இயக்கம்தான் குக்கூ குழந்தைகள் வெளி. இதன் அங்கத்தினர் அனைவரும் படித்த, சமூக ப்ரக்ஞையுள்ள பட்டதாரி இளைஞர், இளைஞிகள்.

சமூகம் என்று நாம் சொல்லிக்கொள்ளும் கட்டமைப்பின் தொடர்பு எல்லைக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ள பல அரசு, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கற்பனை சுதந்திரத்தை வெளிக்கொணர,  சிறுவர் உலகத் திரைப்படங்களை திரையிட்டு, அவற்றின் மீது அவர்களுக்குள்ளேயே விவாதிக்க வைக்கின்றனர்.

அது மட்டுமின்றி சுடுமண் சிற்பங்கள் செய்தல், ஓரிகாமி(Origami) என்னும் காகிதம் மூலம் பல உருவங்களை செய்தல், ஓவியம் வரைதல், மரம் நடுதல்/பராமரித்தல், இயற்கை மற்றும் வன உயிரினங்கள் காணுலா(Flora and Fauna Trekking) உட்பட பல பயிற்சிகளை இந்த மாணவர்களுக்கு அளிக்கிறார்கள். அத்துடன் சத்திய சோதனை அங்காடியையும் நிறுவி மாணவர்களிடத்து நேர்மையை ஊக்குவிக்க இருக்கிறார்கள்.



வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் சார் ஆட்சியரகம் இந்த இயக்கத்துடன் இணைந்து ஐந்து பள்ளிகளை தேர்வு செய்து மேற்கண்ட பயிற்சிகளை அளிக்கிறார்கள். இவற்றில் மூன்று பழங்குடியினர் பள்ளி, ஒரு ஆதி திராவிடர் பள்ளி மற்றும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் முகாமிலுள்ள பள்ளி ஆகியவை உள்ளடங்கும்.

மாதம் இரண்டு நாட்கள் வீதம் ஒவ்வொரு பள்ளியிலும் இனித் தொடரும் ஐந்து மாதங்களுக்கு இந்த சிறுவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

முதல் கட்டமாக ஜவ்வாது மலையில் உள்ள நெல்லிவாசல்நாடு கிராமம், வனத்துறை உயர் நிலைப் பள்ளியில் இன்று முதல் (நவம்பர் 6, 7, 8) மூன்று தினங்களுக்கு "திசைகளை தீர்மானிப்பது காற்று" என்ற சிறுவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.  இங்குள்ள குழந்தைகள் அனைவரும் பழங்குடியினர். இவர்களில் பெரும்பாலானவர்களின் பெற்றோர் பெங்களூர் மற்றும் சென்னையில் கட்டிடக் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த நிகழ்வுகளில் தன்னார்வலராக பங்கெடுக்க விரும்பினால் தெரிவியுங்கள், உரியவர்களைத் தொடர்பு கொள்ளச் செய்கிறேன்.

குறிப்பு :- ஒருங்கிணைப்பாளர்களின் அனுமதி பெறுவதற்கு சிறிது தாமதமானதால் முன் கூட்டியே இந்த இடுகையை பதிக்க முடியவில்லை. அடுத்த நிகழ்வுக்கு சில தினங்களுக்கு முன்னமே பதிவிடுகிறேன், அந்தந்த பகுதியிலுள்ள தன்னார்வலர்களும் இணைந்து கொள்ளுங்களேன்.

18 comments:

  1. மகிழ்ச்சியளிக்கும் செய்தி...குக்கூவிற்கும் அதன்பின் இயங்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  2. அருமை... அவர்கட்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. நல்ல தகவல் நாகா. அறியத்தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நாகா. இதுபோல் விஷயங்களை செய்ய நெடுநாளாய் ஆசை. எதிலும் நீங்கள் உதாரணமாய் இருக்கிறீர்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  5. //ஆனால் நம்மைப்போன்று கணினியிலேயே காலைக் கடன்களைக்கூட கழிக்கும் இந்தத் தலைமுறை இளைஞர்களின் மத்தியில் சில செயல் வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.//

    அவ்வ்வ்.. இப்பிடியுமா இருக்காய்ங்க...

    வாழ்த்துக்கள் நாகா...

    ReplyDelete
  6. நல்ல அவசியமான பதிவு....அரிய தகவல்கள்


    வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  7. நல்லது நாகா....

    மகிழ்ச்சி

    நீங்கள் வரும்போது நாம் சந்திப்போம்

    ReplyDelete
  8. Naga,
    I may be going to Puzhal camp with Britto tomorrow afternoon.

    I hope your readers / friends volunteer to help the kids in the village near javvaadhu malai.

    All the best!

    ReplyDelete
  9. அன்புள்ள ஜோ,

    சென்று வாருங்கள் கடந்த முறை போல் ஏதேனும் உதவி தேவைப்படின் தெரிவியுங்கள். I can assure you CPK camp is in safe hands now and hats off to all your efforts.

    ReplyDelete
  10. நல்ல மனங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமையான அர்த்தமுள்ள பதிவு நாகா. தகுந்த நேரத்தில் இடப்பட்ட பதிவு.

    ReplyDelete
  12. நாகா, சினிமா நடிகைகளின்/நடிகர்களின் கிசுகிசு என்ற பெயரில் போட்டிப்போட்டுக்கொண்டு எழுதும் பத்திரிக்கைகள் இது மாதிரி விசயங்களை கண்டுக்காமல் விட்டது என்னமோ வருத்தமளிக்கிறது உண்மைதான்.. அரிய தகவல் உங்கள் இடுக்கையில்..

    //வெளி உலகத் தொடர்பே இல்லாத பல குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறோமா?
    //

    யோசிக்க வைக்கும் கேள்வி

    ReplyDelete
  13. மிகச்சிறந்த பதிவு நண்பா...! தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  14. fantastic work keep it up. all the best.

    ReplyDelete
  15. கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே. இன்றுடன் சிறுவர் சந்திப்பு வெற்றிகரமாய் நிறைவுற்றது, விரைவில் புகைப்படங்களுடன் இடுகை இடுகின்றேன்.

    ReplyDelete
  16. மகிழ்ச்சியளிக்கும் செய்தி...குக்கூவிற்கும் அதன்பின் இயங்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பூங்கொத்துக்களுடன் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  17. சளி / காய்ச்சலினால் இரண்டு நாட்கள் எங்கும் செல்ல முடியவில்லை. அது போதாதென்று சென்னையில் கன மழை வேறு.

    குக்கூ & உங்கள் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும் போது நானும் அவர்களுடன் செல்ல முயல்கிறேன். (இரண்டு வாரங்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்க முடியுமா?)

    சென்னையில் வேலை தேடி வந்துவிட்டால் இது போன்ற நிகழ்வுகளுக்கு செல்ல வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை பிரதீப் பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். (இன்னும் துபாயில் தான் இருக்கிறாரோ?)

    ReplyDelete
  18. Nalla irukkuda... Meanwhile, while using movie names also provide a link to idmb. will be good for people to watch it if they like.

    3D

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...