நன்றியுடன் சில நினைவுகள்


இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தில் வார நாட்கள் பூனாவிலும் வார இறுதிகள் மும்பையிலும் என ஓய்வின்றிப் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில்தான் இணையக் குழுமங்களின் அறிமுகம் கிட்டியது. விமான் நகர் விடுதியில் தனிமையான மாலை நேரங்களில் எனக்கிருந்த துணை சில புத்தகங்களும், மடிக்கணினியும் அதிலிருந்த இணைய இணைப்புமே.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கியிருந்த கிழக்குப் பதிப்பகத்தின் 'சே குவாரா - வாழ்வும் மரணமும்' புத்தகத்தை அப்போதுதான் வாசித்து முடித்திருந்தேன். 'சே' தொடர்பாய் சில ஆவணங்களை உறுதிப் படுத்த இணையத்தில் தேடிய போது பல இணையக் குழுமங்களும் அவைகளில் உலகளாவிய மனித குலத்தின் உரிமைகள், தேடல்கள் குறித்தான விவாதங்களும் என்னைக் கவர்ந்ததால் யாஹூவின் சே குழுமத்தில் இணைந்து என்னுடைய கருத்துக்களையும் பதிப்பிக்கத் துவங்கினேன்.

தென்னமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், பாலஸ்தீனியர்கள், கொரியர்கள் என முகம் தெரியாத பல நாட்டு மனிதர்களின் உள்நாட்டு அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற விவாதங்களை தினமும் விழி விரியப் பார்த்து பகிர்ந்து கொண்டிருந்த போது பல இந்தியர்களும், தமிழர்களும் இன்று பிரபலமாய் இருக்கும் ஒரு பெண் பதிவரும் அதே குழுமத்தில் இணைத்திருந்து அறிவுபூர்வமான கருத்துக்களை பரிமாறியது என்னை வியப்பிலாழ்த்தியது.

அதன் பின்னர் அந்தக் குழுமத்தில் சில இணைய விஷமிகளின் கைவரிசையைத் தொடர்ந்து குவிந்து கொண்டிருந்த ஸ்பாம் மின்னஞ்சல்களிலிருந்து தப்பிக்க அதிலிலிருந்து வெளியேறினேன். சில தினங்களுக்குப் பின் பணியிட மாற்றம், புதிய ப்ராஜெக்டுகள் என்று இணையக் குழுமங்களை மறந்திருந்த வேளையில், மீண்டும் இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு துவக்கத்தில் மற்றுமொரு தருணத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது தமிழ்மணத்தின் அறிமுகம் கிட்டியது.

சினிமா, அரசியல், சமூகம் என பல துறைகளில் தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் வலைப்பதிவுகளாய் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது என்னை மிகவும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியதால் வெறி பிடித்தாற் போல வலைப்பதிவுகளை வாசிக்கத் துவங்கியனேன். அப்போது சில உடன்பாடில்லாத பதிவுகளில் என்னுடைய பின்னூட்டங்கள் நிராகரிக்கப்பட்டமை, சில பின்னூட்டங்களுக்கு பதிலின்மை என ஏனோ விமர்சனங்கள் புறக்கணிக்கப் படுவதாய் தோன்றியது.

ஒரு வேளை பிரபலங்கள் பதிலளிக்க மாட்டார்களா அல்லது சகிப்புத்தன்மை வலையுலகில் குறைவா என்று தெரியாமல் ஏற்பட்ட குழப்பமான மனநிலையில் சரியாக இரண்டு ஆண்டுகள் முன்பு இதே நவம்பர் மாதம் "எண்ணங்களில்.. " என்ற வலைப்பூவினைத் துவங்கி ஏதேனும் கிறுக்கலாம் என்று எண்ணிய வேளையில் மீண்டும் ஒரு பணியிட மாற்றம்.

இப்போது புதிய பொறுப்புகள், பல சவாலான அசைன்மென்டுகள் என மீண்டும் பணியில் மூழ்கி வலைப்பூவைத் துவங்கியதையே மறந்து போனேன். ஆனால் வாசிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அமீரகத்திற்கு வந்த பின்னர் பிரபல பதிவர்களான ஆசிப் அண்ணாச்சி, பினாத்தல் சுரேஷ், அய்யனார், அபி அப்பா, குசும்பன், சென்ஷி ஆகிய பலரையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினாலும் ஏதோ ஒரு விதமான கூச்சம் பல நாட்களாக தடுத்துக் கொண்டே இருந்தது.

வேலை குறைவாக இருந்த கடந்த ஜூன் மாதத்தில் கராமாவில் பதிவர் சந்திப்பு என்ற இடுகையைப் பார்த்து நண்பர், பதிவர் கலையரசனின் தொலைபேசியில் அழைத்து வாசகர்களும் கலந்து கொள்ளலாமா என்று கேட்டவுடன் அவரும் சம்மதிக்க, பல பிரபலங்களை ஒன்றாய் சந்திக்கும் மகிழ்வில் கிளம்பியதுதான் என் வலை வாழ்வின் திருப்புமுனை.

அந்த சந்திப்பின்போது அய்யனார் மற்றும் சுந்தரராமன் சார் இருவரும் நீங்கள் ஏன் எழுதக் கூடாது என்று ஊக்குவிக்க, 'எண்ணங்களில்..' 'ஒரு ஊரில்..' எனப் பெயர் மாற்றம் பெற்று திரட்டிகளில் இணையத் துவங்கியது.

ஆரம்ப நாட்களில் அமீரகப் பதிவர்களின் தொடர் ஊக்குவிப்பு, எப்போது சந்தித்தாலும் என் பதிவுகளை அக்கறையாய் விசாரிக்கும் ஆசாத்ஜி, தினமும் ஒரு முறையேனும் அலைபேசியில் உரையாடிவிடும் நண்பர் செந்தில்வேலனின் நட்பு, சென்ஷி, வினோத் கௌதம், 'என் பக்கம்' ப்ரதீப், கார்த்திகேயன் (அறிவுத்தேடல்) மற்றும் கலையரசன் (வடலூரான்) போன்றோரின் தொடர் பின்னூட்டங்கள்,  ஆகியவைதான் கடினமான பணிச்சுமையிலும் வலையில் எழுத மூலக் காரணம்.

அதன் பின்னர் நண்பர்கள், பதிவர்கள் ஜோ ஆனந்த், ப்ரபாபகர், ஈரோடு கதிர் அண்ணன், திருப்பூர் ஜோதிஜி ஆகியோரின் அன்பு, எங்கள் ஊர்க்காரர்கள் 'பழமைபேசி ' மணி அண்ணன், 'துக்ளக்' மகேஷ் ஆகியோரின் தொடர்பு  என வலையுலகம் என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது.

தமிழ்மணத்தின் நட்சத்திர வாரம் முடிவடையும் இன்னாளில், பிரபலம் என்று எவரும் இல்லை எல்லோரும் பதிவர்கள் என்ற ஒரே குடும்பம்தான் என அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து நெகிழவைத்த ஆசிப் அண்ணாச்சிக்கும், வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவினருக்கும், நட்சத்திர வாரத்தில் பின்னூட்டங்கள் மற்றும் தமிழ்மணம், தமிழிஷில் ஓட்டுக்களைப் பதித்த அனைத்து நண்பர்களுக்கும், இளமை விகடனுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

Comments

 1. இந்த வாரத்தில் நீங்கள் நிஜமாய் அளித்த இடுகைகள் யாவும் மிக அருமை நாகா. தொடருங்கள் உங்கள் பயணத்தை இதே போல் என்றும்....

  பிரபாகர்.

  ReplyDelete
 2. கடைசி நாளல எழுத சரக்கு இல்லையென்றாலும் எப்படியே நன்றினு போட்டே ஒரு பதிவு போட்டுட்டுயீங்க...அருமையான பதிவுகள் நாகா...

  ReplyDelete
 3. நன்றி உங்களுக்கு தான் ....இவ்வளவு நல்லா எழுதுறீங்களே . நன்றி

  ReplyDelete
 4. //என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது.//

  எங்களுக்கும் அப்படியே...

  நாகா... நன்றியெல்லாம் எங்களுக்கு வேண்டாம்,
  தொடர்ந்து எழுதுவேன் என்ற உறுதியை மட்டும் கொடுத்துவிட்டு விடைபெறுங்கள்...

  உங்கள் குடும்பம் சிறக்க, எல்லா வளமும் இனிதே கிடைக்க........ மனம் திறந்த நல்வாழ்த்துகள் நண்பா.....

  ReplyDelete
 5. நாகா நான் தாங்களை சந்தித்தபோது நீங்கள் வாசிப்பவராக மட்டுமே இருந்தீர், நானும் ஏன் எழுதக்கூடது என்று கேட்டிருக்கிறேன்.

  இது வரை எழுதிய அனைத்து இடுக்கைகளுமே அருமை

  தொடருங்க..

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. சிறப்பான வாரம்.., வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அருமையான வாரமாக இருந்தது....தங்களின் பகிர்வுகள்! தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete
 8. ஒரு வேளை பிரபலங்கள் பதிலளிக்க மாட்டார்களா அல்லது சகிப்புத்தன்மை வலையுலகில் குறைவா என்று தெரியாம......

  இந்த எழுத்துக்கள் தான் இன்று வரையிலும் பதில் தெரியாத கேள்வியாக கேலியாக என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டுருக்கிறது.

  பதில் அளிக்க விருப்பமின்மை, நேரமின்மை,எழுதும் மென்பொருள் குழப்பம் இத்தனையும் மீறி ஓட்டுப்பட்டை என்பது வளர்க்கும் என்பதும் தெரியும் என்றாலும்?

  வாரம் முடிந்தால் என்ன? வரமாய் பெற்ற தவம் உங்கள் வருகை, என்னை வளர்த்தெடுத்த விதம், திட்டி திருத்தியமை, திகட்டாமல் சொல்லிக் கொடுத்தமை,

  சுந்தர் ராமன் உருவாக்கியது. நீங்கள் உணர்வுட்டியது. தொடர்ந்து வந்து இன்று பல்லாயிரக்கணக்கான மைல்கள் குறைந்து தினந்தோறும் குதுகலமாய் என்னை ஆக்ரமித்துக்கொண்டு இருக்கிறது.

  வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களையும் வளர்த்து விட வேண்டும். இரண்டுக்கும் நடுவில் நிற்பவர்கள்.

  அதனால் என்ன? உங்கள் இருவர் பார்வையில் வளர்ந்த தேவியர் இல்லம் திருப்பூர் இன்று.

  நாளை இதுபோல மற்றொருவரும் வளர்ந்து வரக்கூடும்.

  எங்கள் குடும்பத்தின் வாழ்த்துக்கள் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வழித்தோன்றல்களுக்கும்.

  நன்றி நாகா.

  ReplyDelete
 9. தமிழ்மணப் பிரபலமே வருக! ஒரு வாரம் கலக்கிட்டீங்க!

  தொடர்ந்து எழுதி மேலும் பிரபலம் ஆக வாழ்த்துக்கள். (அடப் போங்கய்யா, நீங்களும் உங்க பதிவுலகப் பிரபல்யமும்னு திட்டக் கூடாது!)

  பூனாவில் விமான் நகரில் இருந்தீங்களா? நானும் அங்க தானே 2002 செப்டம்பர் - 2005 மார்ச் வரைக்கும் இருந்தேன்?

  ReplyDelete
 10. செந்தில், சென்ஷி, வானம்பாடிகள் ஐயா, சிதம்பரம், சுந்தர் சார், கதிர், அபு, சுரேஷ், சந்தனமுல்லை, ஆதி, ஜோதிஜி அனைவருக்கும் நன்றி..

  ReplyDelete
 11. ஜோ, ஜஸ்ட் மிஸ்ஸுங்கறது இதுதானோ???

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் நண்பரே....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆறோடும் மண்ணில்..!

சா(வு)க் கடலை நோக்கி..!

ஜெயகாந்தன், நெடுமாறன், நக்கீரன், அஜீத்குமார்