KFC - கொக்கரக்கோ கும்மாங்கோ

on Saturday, September 19, 2009

கடந்த வாரம் ஒரு நாள் காலை வீட்டில் அவசரத்தில் குதறிய இரண்டு தோசைகளுடன் மதிய உணவை மறந்து அலுவலகத்தில் பொட்டி தட்டிக் கொண்டிருந்தேன். மூன்று மணியளவில் லேசாகக் கிள்ள ஆரம்பித்த பசி நான்கு - ஐந்து மணியளவில் வயிற்றில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு வீடு வந்த போது மணி ஆறு.

குப்பை உணவு (Junk Food) தின்று நீண்ட நாட்களாகி விட்டபடியால் அருகிலிருந்த KFC (Kentaucky Fried Chicken)க்கு வெளியே காத்திருக்க ஆரம்பித்தேன் (நோன்பு காலமாகையால் இங்கு ஆறரை மணிக்கு முன்பு எந்தக் கடையும் திறக்க மாட்டார்கள்). சிறிது நேரத்தில் என்னோடு பத்து பதினைந்து பிலிப்பைன்ஸ் நாட்டவரும் இணைந்து கொண்டனர். 'Tagalog'ல் ஏதோ பேசிக் கொண்டிருந்த அவர்கள், கடை திறந்ததும் 'ஓ' வென மகிழ்ச்சியில் பெரும் கூச்சல் எழுப்பிக் கொண்டு உள்ளே நுழைந்து வரிசையில் முன்பு நின்று கொண்டனர்.

கடும் பசியில் முதலில் வந்து கடைசியில் வரிசையில் நின்ற போது ஏனோ எங்கள் பள்ளியில் புதன்கிழமை முட்டையுடன் போடும் சத்துணவுக்காக வரிசையில் அடித்துப் பிடித்து நின்றதெல்லாம் நினைவில் வந்து தொலைத்தது.

ஒரு வழியாக என் முறை வந்த போது அங்கிருந்த 'Finger Lickin' ஐட்டங்களில் ஒன்றான 'Zinger Meal'ஐ உள்ளே தள்ளிய பின்தான் சற்று உயிர் வந்தது.

என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் 'Junk Food'ன் ருசியே தனிதான். அதனால்தானோ என்னவோ குழந்தைகளுக்கு இவற்றின் மேல் அலாதிப் பிரியம் போலும்.

சரி சரித்திரத்துக்கு வருவோம். KFC நம்ம லாலேட்டன் போல் அமெரிக்க ராணுவத்தில் கர்னலாக இருந்த திரு 'ஹார்லேண்ட் சாண்டர்ஸ்' என்பவரால் தொடங்கப்பட்டு இன்று உலகமெங்கும் கிளை பரப்பி நிற்கிறது.

இந்த கையை நக்க வைக்கும் (Finger Lickin) வறுகோழி, பதினொரு மூலிகைகள் மற்றும் பல மசாலாக்களின் கலவையால் செய்யப்பட்டது (அப்படித்தான் சொல்றாங்கோ).

இதன் செய்முறை, அந்த மசாலாக்களின் அளவு, பதினொரு மூலிகைகளின் பெயர் ஆகியவைதான் KFCன் வியாபார ரகசியம்.

அந்த விபரங்கள் பென்சிலால் ஒரு பேப்பரில் எழுதி சாண்டர்ஸால் கையொப்பம் இடப்பட்டு, சிறு குப்பிகளில் அடைக்கப் பட்ட அந்த பதினொரு மூலிகைகளுடன் ஒரு ரகசிய கேபினெட்டில் கணினிப் பூட்டால்(Computerized Lock) பூட்டி வைத்திருக்கிறார்கள்.

அதன் கடவுச்சொல்KFCல் உள்ள இருவரிடம் மட்டும்தான் இருக்கும், பாதி வார்த்தை ஒருவரிடம் மீதி வார்த்தை மற்றொருவரிடம். ஆனால் அந்த இருவர் யாரென்ற விபரம் வெளியாள் ஒருவருக்கும் தெரியாது.

இதெல்லாம் உங்களுக்கு நக்கலாத் தெரிஞ்சா, விக்கிபீடியாலயே போய் இங்க சரி பாத்துக்கோங்க.

எல்லாம் சரி, இந்த ராணுவ ரகசியமெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா? கென்டகி வறுகோழியைப் புசித்து விட்டு கடையில் வெட்டியாக அமர்ந்து அரட்டையடிக்க கூச்சமாக இருந்த யாரோ ஒருவரின் Creativityயை நேற்று பார்த்தேன் அதனால்தான். நீங்களும் வீட்டில் சிக்கன் தின்று விட்டு சும்மா இருந்தால் கீழே உள்ள தலைவர்களை செய்து பாருங்களேன்.


வீர தளபதி


இளைய தளபதி


புரட்சி தளபதி


சின்ன தளபதி

கடந்த மாதம்..

on Saturday, September 5, 2009


எட்டு மாதங்களாக இழுத்துக் கொண்டிருந்த Projectஐ ஒரு வழியாய் முடித்து 'Sign Off' வாங்கி இரண்டு நாட்கள் முன்னர்தான் பஹ்ரைனிலிருந்து ஊர் திரும்பினேன். ஆனால் மழை விட்டும் தொடரும் தூவானம் போல இங்கு வந்த பின்னரும் ஏகப்பட்ட பிரச்சினைகள். மீண்டும் இங்கிருந்து VPN மூலம் ஒவ்வொன்றுக்கும் தீர்வு கொடுத்து மக்களை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போது என்றாகிவிட்டது.

அமெரிக்காவின் மிகப்பெரும் எக்ஸ்பிரஸ் வங்கி என்றுதான் பெயர், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் 'Regional Attitude'ஆல் இங்குள்ள வெள்ளையர்களும் சோம்பேறிகளாகி, பொறுப்புகளைத் தட்டிக்கழித்து, கிடைத்தவன் மேல் குற்றம் சாட்டி, அப்பப்பா, இந்த மென்பொருள் துறையில் பணிபுரிந்தால் இன்னும் 4-5 வருடங்களில் கிழவனாகி விடுவேனென்று எண்ணுகிறேன்.


கடந்த ஒரு மாதமாகப் பல நிகழ்வுகள், வலையுலகிலும் - வெளியுலகிலும். ஆனால் 'Cast Away Tom Hanks' போன்று ஏதோ மனித நடமாட்டமில்லாத தீவிலிருந்தது போலே என் வாழ்வும் தினமும் வெறும் 4-5 மணி நேரத் தூக்கத்துடன் Planning, Presentation, Conference, Bug Fixing என்று ஓடிக்கொண்டே இருந்ததால் வலையுலக நண்பர்கள் உட்பட பலரிடம் சரியாக உரையாட, மின்னஞ்சல் செய்ய இயலவில்லை. அவ்வாறு நான் இழந்த சில நிகழ்வுகள், நட்புகள் பற்றி ஒரு சிறு விளக்கமும், மன்னிப்பும் கீழே.


1) நண்பர் ப்ரபாகரின் வாழ்வில் மற்றுமொரு மகிழ்வான தருணம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிகழ்ந்தது. அவரை வாழ்த்தலாமென்று Meetingன் நடுவே கிடைத்த இடைவெளியில் அலைபேசியில் அழைத்தால், அது 'Switch Off' செய்யப் பட்டிருந்தது. அதன் பிறகு இன்று வரை அவரிடம் பேசும் வாய்ப்பு கிட்டவில்லை. அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதிலில்லை. ஒரு வேளை இதைப் படித்தால், என்னை மன்னியுங்கள் ப்ரபாகர்.

2) மற்றொரு பெரிய வருத்தம் - அமீரகத்தில் அண்ணாச்சி தலைமையில் நடந்த இஃப்தார் விருந்தில் பங்கு பெறும் வாய்ப்பை இழந்தது. நண்பர்களின் பதிவுகளையும் புகைப்படங்களையும் பார்த்து ஆதங்கப் படத்தான் முடிந்தது. ஆரோக்கியமான விவாதங்களுடன் தொடரும் அமீரகப் பதிவர் வலைக் குழுவில் வரும் பல இடுகைகள் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது - தொடருங்கள் நண்பர்களே.

3) நண்பர், அன்பர், பதிவர், எல்லாவற்றுக்கும் மேல் நல்ல மனிதர், 'ஜோ ஆனந்த்' வெற்றிகரமாக சதமடித்து விட்டார். அத்தோடு சரக்கையும் விட்டுவிட்டார் என்று அறிந்ததும் இன்பமும் துன்பமும் சரி சமமாய் என் உள்ளத்தில் குடிகொண்டது. நூறுக்கு வாழ்த்துக்கள் ஜோ - Life Goes On...


4) நண்பர், அண்ணன், ஈரோடு கதிர் - கடந்த ஓராண்டாக மனதைப் பிசைந்த அவரின் பல மௌனங்கள் கசிந்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாகத்தான் அவரின் வலைப்பூ நன்கு பிரபலமாகியுள்ளது. அவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதே போன்று மேலும் தரமான படைப்புகளை அண்ணன் தொடர்ந்து தர வேண்டுமென்பது என் அன்பான வேண்டுகோள்.


5) அன்பர் 'தேவியர் இல்லம், திருப்பூர்' ஜோதிஜி - வலைப்பதிவுகள் மூலம் பெற்ற வெகு சில நல்ல நண்பர்கள், மனிதர்களில் ஒருவர். இவரின் வாசிப்பனுபவமும், தேர்ந்த எழுத்து நடையும், திட்டமிட்ட வாழ்க்கை முறையும் என்னப் பல முறை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. 'அது ஒரு கனாக்காலம்' சுந்தர் அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டு, பின்னூட்டங்கள், மின்னஞ்சல்களில் தொடர்ந்த விவாதங்களால் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இடையில் பல முறை நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றபோதும் சரியாக உங்களிடம் உரையாட இயலவில்லை. இனித் தொடர்ந்து தொடர்பிலிருக்க முயல்கிறேன், நீங்கள் இன்னும் நிறைய ரகசியங்களைத் தொடருங்கள் சார்.


6) நண்பர் செந்தில்வேலன் - அரை சதம் அடித்துவிட்ட இவரிடம் விகடன் நிறுவனமே, 'முதலில் உங்கள் இடுகைகளை எங்களுக்கு அனுப்பிவிட்டு உங்கள் வலைப்பூவில் பதிவிடுங்கள்' என்று அன்புக்கட்டளை இட்டதை அறிந்து ஒரே ஊர்க்காரன், நெருங்கிய நண்பன் என்ற முறையில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். தொடரட்டும் உங்கள் வலைச் சமூக சேவை.

தொடர்ந்து பின்னூட்டங்கள் மற்றும் விமர்சனங்களால் என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இனி வாரம் ஒரு இடுகையாவது எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். பார்க்கலாம், காலம் என்ன எண்ணுகிறதென்று.

-நாகா
05/09/2009