Thursday, April 22, 2010

எரிமலையும் மனக்குமுறலும்


ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய தினம் 'Munich'லிருந்து 'Stuttgart' சென்றிருக்க வேண்டியது, ஆனால் இன்னமும் துபாயிலேயே அள்ளிக் கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இப்போது ஜெர்மனியில் நடைபெறவிருந்த Training அடுத்த மாதம் சிங்கப்பூருக்கு மாற்றலாகி விட்டது. 

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கை செல்லவிருக்கும் மகிழ்ச்சியில் தினமும் தேதியைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். பழைய அலுவலக நண்பர்கள், பள்ளியில் உடன்பயின்ற காட்டான், அன்பு நண்பர் ப்ரபாகர், எங்க ஊர்காரர் மகேஷ் எனப் பலரையும் காண மே 15 வரை காத்திருக்க வேண்டும். 2005 - 2006ம் ஆண்டுகளில் அங்கிருந்த நாட்களை என் பணிக் காலத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம்.  

பாயா லேபார் வீட்டின் வரவேற்பறையில் உற்சாகம் பொங்கிய வெள்ளிக்கிழமை இரவுகள், யிஷூன் GVயில் முதல் நாள் முதல் காட்சிக்கு 'திருப்பதி' படத்திற்கு நண்பர்களை அழைத்துச் சென்று அனைவரிடமும் தர்ம அடிவாங்கியது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கம்யூனிட்டி ஹால்களில் ஆடிய ஷட்டில் மற்றும் டேபிள் டென்னிஸ் மேட்சுகள், Chai Chee டெக் பார்க்கின் ஒவ்வொரு தெருக்களும், லிட்டில் இண்டியாவையும் நினைத்தால் ஏதோ உடுமலைப்பேட்டைக்கே போவதைப் போன்ற உவகையுடன் ஆவலாய் காத்திருக்கிறேன், அடுத்த மாதத்திற்கு.

கொஞ்சம் நாட்டு நடப்புக்கு வருவோம். இவ்வளவு நாட்களும் கண்ணாமூச்சி ஆடிய நித்தியை கைது செய்து விட்டார்களாம். முன்னர் அவன் கூட்டத்தில் கலந்து கொள்ளப் பல நெருங்கிய நண்பர்கள் அழைத்தும் மறுத்துத் திட்டியிருக்கிறேன் . ஆனால் அந்த வீடியோ வந்த பிறகுதான் அவனது பிரச்சங்கங்களை யூ ட்யூபில் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது, சாருவைப் பார்த்து எழுதக் கற்றுக்கொண்டது போல் நித்தியைப் பார்த்துப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். 

நடிகர் கமலஹாசன் சொன்னது போல, உண்மையான நாத்திகர்கள் நித்தியைப் போன்ற சாமியார்கள்தான். இவனும் கல்கியும் என்றாவது உதை வாங்குவார்கள் என்று எண்ணினேன், பகுத்தறிவு சாமியார்களான சன் டிவியின் உதவியால் இவ்வளவு சீக்கிரம் மாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இன்னமும் இந்த பங்காரு மட்டும்தான் எதிலும் சிக்காமல் எஸ்கேப்பாகி வருகிறான், அவனுக்கு எப்போது ஆப்பு என்று தெரியவில்லை.

சில நிகழ்வுகள் நாமெல்லாம் மனிதப் பிறவிகளா என்று எண்ண வைக்கிறது. எப்போது இந்த மொழியை காதலிக்கத் துவங்கினேன் என்று நினைவில்லை. ஆனால் இப்போதோ, இது மனிதாபிமானம் அற்றவர்களுக்கும் தாய்மொழி என்பதால் வெட்கமாக இருக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று பயின்றது இந்த மொழியில்தான். ஆனால் அன்புடன்.... என்று ஆரம்பித்து அருவெறுப்பாய் சிலர் எழுதுவதும் இந்த மொழியில்தான். இதயமில்லா அந்த முதியவரின் இடுகைக்கு சக மனிதனாய் என் கடும் கண்டனங்களைப் பதிக்கிறேன்.


Monday, November 30, 2009

இந்தியாவில் சில நாட்கள்..




நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் சில தினங்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, வழக்கம் போல் பல நிபந்தனைகளுடன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டும், இருபது முப்பது பேர்களை இன்டர்வியூ செய்து இரண்டு அல்லது மூன்று பேர்களை எங்கள் அணிக்கு தேர்வு செய்ய வேண்டும், ஏதேனும் பிரச்சினை என்றால் எந்த நேரமும் லாகின் செய்ய வேண்டும் போன்று பல விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் வர முடிந்தது.

ரிலையன்ஸ் டேட்டா கார்ட் வாங்கலாமென்று இருக்கிறேன். யாராவது உபயோகித்துக் கொண்டிருந்தால் அதன் பெர்ஃபார்மன்ஸ், பேக்கேஜ்கள் பற்றி தெரிவியுங்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு திருமணங்கள், உறவினர் வீடுகள் என்று இங்குமங்கும் அலைய வேண்டியுள்ளதால் அதுவரை, அவ்வப்போது நண்பர் உடுமலை டாட் காம் சிதம்பரம் அவர்களின் புத்தகக் கடையில் இருந்தபடி இணையத் தொடர்பிலிருக்க முயற்சிக்கிறேன்.

பதிவர்களையும், வாசகர்களையும்(???) சந்திக்க மிகவும் ஆவலாயிருப்பதால், வந்ததும் நேற்று முதல் வேலையாக ஒரு ஏர்செல் அலைபேசி எண்ணை எடுத்து விட்டேன் (+91)-9715106693.  முடிந்தால் அழையுங்கள்.


சென்னையில் பதிவர்கள் சிலரை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தேன், நண்பர் ஜோ, கார்த்திகேயன் மற்றும் ஷண்முகப்ரியன் ஐயா ஆகியோர் மட்டுமே சம்மதித்திருக்கின்றனர். நண்பர் ப்ரபாகர் பல பிரபல பதிவர்களையும் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தருவதாக வாக்களித்துள்ளதால் அவர்களையும் சந்திப்பதில் ஏதும் பிரச்சினை இருக்காது என்று எண்ணுகிறேன்.

கோவை, பொள்ளாச்சி, உடுமலை என்று வந்த வழியெங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது - மீண்டும் தொழில்கள களைகட்டி விட்டனவா என்று கேட்டால், முகூர்த்த நாள் என்றனர். தோட்டங்களில் வேலை செய்ய ஆட்களே கிடைப்பதில்லையாம், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினமும் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும் நூறு ரூபாய் சம்பளமாம் எனவே யாரும் எட்டு மணி நேரம் காட்டில் வெயிலில் வேலை செய்யத் தயாராய் இல்லை. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் பலவும் உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை வரை வந்து ஆட்களை பஸ்களில் ஏற்றிச் சென்று Pick and Drop கொடுக்கிறார்களாம்.

இளைஞர்கள் கைகளிலெல்லாம் சைனா மொபைல் போன்கள், ஊரில் திரும்பிய பக்கமெல்லாம் இலவச திட்டங்கள் என மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே தெரிகிறது. எனவே நண்பர்களே, நீங்களும் மகிழ்ச்சியாக இருந்தால் என்னை அழைக்கும் முன்னர் எதற்கும் ஒரு முறை யோசியுங்கள் :)

Wednesday, November 25, 2009

சா(வு)க் கடலை நோக்கி..!




இறந்த கடல் அல்லது செத்த கடல் அல்லது சாக்கடல் என்றழைக்கப்படும் இந்த ஏரிதான் இஸ்ரேலையும் (பாலஸ்தீனம் மேற்குக் கரை) ஜோர்டானையும் பிரிக்கிறது. பள்ளி நாட்களில் புவியியல் புத்தகங்களில் படித்திருப்பீர்கள், உலகின் மிகவும் தாழ்வான இடமான இங்குள்ள நீரின் உவர்ப்பால் எந்த உயிரினமும் வாழ முடியாது, இதன் அடர்த்தியால் எவராலும் இதனுள் மூழ்க முடியாது. மனித வாழ்வின் மூன்று மிகப்பெரிய மதங்களின் வரலாற்றில் இந்த ஏரிக்கும் இதன் ஒரே நீர் வரத்தான ஜோர்டான் நதிக்கும் மிக முக்கியப் பங்குண்டு.

காலை ஏழு மணிக்குத்தான் விமானம் என்றாலும் நேரத்தில் எழ முடியுமா என்று சிறிது சந்தேகமாகத்தான் இருந்தது. இரண்டு காரணங்கள் - கடந்த சில மாதங்களாகவே 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பதால் காலை பத்து மணிக்கு எழுந்து ராக்கோழியாக இரவு ஒரு மணி வரை விழித்துப் பழகி விட்டது. இரண்டாவது காரணம் அம்மணியை நேற்று முந்தினம்தான் ஊருக்கு அனுப்பியிருந்தேன்.

எதிர்பார்த்தது போலவே நான்கு மணியிலிருந்து கூவிக் கொண்டிருந்த அலாரத்தை ஸ்னூஸ் போட்டு போட்டு திடீரென எதற்காக அடிக்கிறது என்று யோசித்த போது மணி ஐந்தரை. அவசரமாக காலைக் கடன்களை முடித்து ஐந்து ஐம்பதுக்கு வெளியே வந்து டாக்சியைப் பிடித்தேன். நல்ல வேளையாக அம்மணி இரண்டு நாட்களுக்கு முன்னமே எச்சரித்து பெட்டியை எல்லாம் பேக் செய்திருந்ததால் அந்த வேலை மிச்சம். போக்குவரத்து குறைவான அதிகாலையில் துபாய் இன்னமும் அழகாக இருந்தது, ஆனால் நானிருந்த பரபரப்பில் ரசிக்க நேரமில்லை.

பத்தானிய டாக்சி டிரைவர் நூற்றி நாற்பதில் அழுத்தி பத்தே நிமிடங்களில் துபாய் விமான நிலையத்தின் முதல் டெர்மினலில் விட்டார்.

செக்யூரிட்டி செக்கிங் முடிந்து வரும்போது ராயல் ஜோர்டான் விமான கவுன்டரில் கடையை மூடுவது தூரத்திலேயே தெரிந்தது. ஓடோடிச் சென்று பெட்டியை எடை இயந்திரத்தில் வைத்து பாஸ்போர்ட்டை நீட்டினேன்.

"ஓ நோ.. வி ஆர் க்ளோஸிங். ஒய் ஆர் யு லேட்" என்று கொஞ்சியது கவுன்டரிலிருந்த பாப்பா.

"ஹெவி ட்ராஃபிக்" அமீரகத்தில் எங்கு செல்ல தாமதமாகி விட்டாலும் சொல்லும் காரணம்.

"இன் த மார்னிங்?" என்று முறைத்துக் கொண்டே "யூ ஆர் லக்கி டுடே ஃப்ளைட் இஸ் தர்ட்டி மினிட்ஸ் டிலேய்ட்" என்றாள்

ஆஹா, பந்து இப்ப நம்ம பக்கம். "யுவர் ஏர்லைன்ஸ் இஸ் ஆல்வேஸ் லேட்" என்று சிரித்தேன். என்ன நக்கலா என்பது போல் அவளும் சிரித்துக் கொண்டே ஜன்னல் சீட்டில் துண்டு போட்டுக் கொடுத்தாள்.

மேலும் ஒரு அரை மணி நேரம் தாமதமாக எட்டு மணிக்கு விமானம் கிளம்பியது. வார நாளாதலால் உள்ளே வெகு சில பயணிகளே இருந்தனர். பொழுதை ஓட்ட, எதிரிலிருந்த சின்னத்திரையில் இருந்த ஆங்கிலப் படங்களை தேடினேன். க்ளாஸிக்கல் பிரிவில் "லாரன்ஸ் ஆஃப் அரேபியா" இருந்தது.

பலமுறை இத்திரைப்படத்தை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், விகடனில் செழியன் எழுதிய உலக சினிமா தொடரிலும் இதன் விமர்சனத்தை படித்திருக்கிறேன். அத்துடன் விமானம் செல்லும் பாதையும் அரபிப் படைகள் பயணம் செய்ததும் ஒன்றே என்பதால் ஆர்வமாகப் பார்க்கத் துவங்கினேன்.



செல்லும் வழியில்

அமீரகத்திலிருந்து வட மேற்கில் மிக நீண்ட பாலைவனம், அதன் நடுவே செல்லும் ரயில் பாதை, வாடி ரம் (Wadi Rum) மலைத் தொடர்கள் என வரலாற்றின் முக்கிய இடங்களை மேலிருந்து காணக் காண மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் உள்ளத்தில் மாறி மாறிக் குடிகொண்டது.

நான்கு மணி நேரப் பயணத்தில் மூன்று மணி நேரம் லாரன்ஸுடனே ஜோர்டானின் ஒரே கடற்கரை நகரமான அகாபாவை கைப்பற்ற பாலைவனத்தில் நெடும் பயணம் மேற்கொண்டேன். உள்ளூர் நேரப்படி சரியாக பத்து மணிக்கு அம்மானின் "ராணி ஆலியா" விமான நிலையத்தில் தரை இறங்கியது எங்கள் விமானம்.

கடவுச்சீட்டு கன்ட்ரோல் அதிகாரி இந்தியரா? இங்கு என்ன வேலை? எங்கு தங்குகிறீர்கள்? எத்தனை நாட்கள்? என்று குடைந்து விட்டு "அருகிலிருக்கும் காவல் நிலையத்தை ஒரு வாரத்துக்குள் தொடர்பு கொள்ளவும்" என சீல் வைத்துக் கொடுத்தார்.

"ஹூம் நம்ம மூஞ்சியப் பாத்தாலே எல்லோருக்கும் சந்தேகம் வந்துருமே" என்று எண்ணியபடியே வெளியே வந்து விமான நிலைய டாக்ஸியைப் பிடித்தேன்.


டிரைவர் ஒரு பாலஸ்தீனியர், குதறிக் குதறி ஆங்கிலம் பேசினார். மெதுவாக அவரிடம் "சாவப்போக சாரி சாவுக்கடலுக்குப் போக எவ்வளோ நைனா?" என்று கேட்டேன்.


'Dead Sea'யின் முன்பு


"போக வர நூறு ஜே.டி. அங்கே ஒரு இரண்டு மணி நேரம் வெயிட்டிங்குடன் சேர்த்து" என்றார்

கணக்குப் போட்டுப் பார்த்தால் இந்திய ரூபாயில் ஏழாயிரத்து ஐநூறுக்கு அருகில் வந்து தலையை லேசாக சுற்றியது. பேரம் பேசுமாறு ஏற்கனவே பலரும் கூறியிருந்ததால் ஐம்பதிலிருந்து ஆரம்பித்தேன்.

அவரும் உடன் பல டிஸ்கவுன்டுகளை அள்ளி விட்டார். டெட் ஸீ உடன் ஜேர்டான் நதியையும் காட்டுகிறேன், ஏசுநாதர் ஞானஸ்நானம் (Place where Jesus baptized by John on the banks of Jordan River) பெற்ற இடத்தையும் காட்டுகிறேன் என்றார்.

அப்படியென்றால் எழுபது என்றேன். சரி, செய்ன்ட் மோசஸின் நினைவிடமுள்ள நீபோ மலைக்கும் (Mount Nebo) அழைத்துச் செல்கிறேன், நூறு கொடுங்கள் என்றார்.

ஒரே நாளில் இத்தனை இடமா என்று பேராசையில் எண்பதுக்கு பேரம் படிந்ததும் "நேராக ஹோட்டலுக்கு செல்லுங்கள் மூட்டையை அங்கே வைத்துவிட்டு பத்தே நிமிடத்தில் கிளம்பிவிடலாம்" என்றேன்

அறையில் எல்லாவற்றையும் எறிந்து விட்டு அலுவலகத்துக்கு அழைத்து தகவல் சொல்லியாகி விட்டது. திட்டப்படி மறுநாள்தான் மீட்டிங் என்பதால் வெளியே சுற்றுவதற்காகவே இன்றைய காலை விமானத்தை பதிவு செய்திருந்தேன்.

மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. ஒரு டவலுடன் காமிராவையும் பைனாகுலரையும் எடுத்துக் கொண்டு அவசரமாக கீழே வந்து ரிசப்ஷனில் "டெட் சீ செல்கிறேன்" என்று சொன்னதும் "பாஸ்போர்டை மறக்காமல் எடுத்து செல்லுங்கள், அங்கங்கு ராணுவ சோதனையகங்கள் இருக்கும்" என்று கிலி ஏற்படுத்தினார்கள்.




சாவுக்கடலில் மிதக்கும்போது

1994ல் இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து தற்போது எல்லையில் அவ்வளவு பதற்றமில்லை என்றாலும் ராணுவ கேம்ப்கள் அனைத்தும் அந்த வழியில்தான் இருக்கிறது. எனவே தனியே செல்வதற்கு சற்றே அச்சமாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் காணப் போகும் இடங்களின் புவியியல் அதிசயம் மற்றும் சரித்திர முக்கியத்துவம் ஆகியவற்றை எண்ணியபடி உற்சாகமாக கிளம்பினேன்.

Friday, November 20, 2009

ஆறோடும் மண்ணில்..!




விவசாய நிலங்கள் குறைந்து வருவதையும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பற்றியும் நண்பர் கதிர் ஆற்றாமையுடன் எழுதிய இந்த இடுகையைப் படித்ததும் இன்று மனை நிலங்களாக மாறியுள்ள எங்கள் ஊரின் வயல்கள் நினைவுக்கு வந்தன.

ஏழு குளத்துப் பாசனம், பி.ஏ.பி வாய்க்கால் நீர், அமராவதி ஆறு, பாலாறு, அமராவதி அணை, திருமூர்த்தி அணை என்று தண்ணீருக்குப் பஞ்சமே இல்லாத ஏரியாவாக இருந்தாலும் ஒரு சில பண்ணையார்களைத் தவிர பெரும்பாலான சிறு விவசாயிகளின் நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கவலைக்கிடமாகவே இருந்தது. ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சி இன்று இவர்கள் வாழ்வையும் அடியோடு மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. பயிர் செய்யாத புஞ்சை நிலங்கள் ஏக்கர் மூன்று லட்சம்,  நெல் மற்றும் கரும்பு வயல்கள் ஏக்கர் ஐந்து லட்சம், தென்னந்தோப்புகள் ஏக்கர் பத்து லட்சம் என கடந்த ஐந்து ஆண்டுகளில் பல லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகியுள்ளனர்.

பள்ளி நண்பன் ஒருவனின் தந்தையும் ஒருகாலத்தில் சிறு விவசாயிதான். கையிலிருந்த இரண்டு ஏக்கர் நிலம், ஒரு சில ஆடு மாடுகளோடு இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் படிக்க வைக்க மிகுந்த சிரமப் பட்டார். மூத்தவன் பள்ளி இறுதி ஆண்டுடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப பாரம் சுமக்க பஞ்சாலைக்குப் போக, இவனை மட்டும் மேற்படிப்பு படிக்க கல்லூரிக்கு அனுப்பினார். நானும் வேறு ஒரு ஊருக்கு படிக்க சென்று விட அதன் பிறகு அவனுடனான தொடர்பு வெகுவாய் குறைந்து போனது. கடந்த முறை ஊருக்கு சென்ற போது கடை வீதியில் அவனை சந்திக்க நேர்ந்தது.

கழுத்தில் மைனர் செயின், கையில் ப்ரேஸ்லெட், கதர் சட்டை, வெள்ளை வேஷ்டி, என்ஃபீல்ட் பைக் என அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்த அவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என யோசித்தபடி கடந்த போது, பின்னால் வந்து தோளைத் தொட்டான்.

"டேய் என்னய தெரியலயாடா ?"

ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து "டேய், நீயா? என்னடா இது ஆளே மாறிட்ட? வீட்டுல அம்மா, அப்பா, அண்ணன், அக்கா எல்லாம் நல்லாருக்காங்களா?"

"எல்லாரும் நல்லாருக்காங்க நீ எப்பிடி இருக்க?"

"எனக்கென்ன? நீ என்ன பண்ணிட்டிருக்க? அப்பா இன்னும் விவசாயம்தான் பாக்கறாரா?"

"விவசாயமா? அதெல்லாம் வுட்டு ரெண்டு வருசமாச்சு. நம்ம காடு ரோட்டுமேல இருந்ததால திருப்பூர்ல இருந்து ஒரு பார்ட்டி சைட் போடறதுக்காக ஏக்கர் இருபத்தஞ்சு லட்சத்துக்கு முடிச்சுட்டாங்க. நானும் அண்ணனும் இங்க டவுன்லதான் பைனான்ஸ் பண்ணிட்டிருக்கோம். ஒரு நாளக்கி ரெண்டாயர்ருவா திரும்புது"

"ம்ம்.. பாத்தாலே தெரியுதுடா.. வீட்டுல எல்லோரையும் கேட்டதா சொல்லு"

"கண்டிப்பா. நானு வசூலுக்கு கெளம்பணும், சாயங்காலமா வூட்டுப் பக்கம் வாடா." என்று பைக்கை உதைத்துக் கிளம்பினான்.

"என்ன பயிரு போட்டாலும் வெலயே கெடக்க மாட்டேங்குது. இனிமே விவசாயத்த நம்பி பொழக்க முடியாது. இந்தக் காட்ட வித்துப் போட்டு ஏதாவது கடயப் போடலாம்" என்று பத்து வருடங்களுக்கு முன்பு கிடைத்த விலைக்கு, இருந்த மூன்று ஏக்கர்களையும் விற்று டீக்கடை போட்டு, புதிய கடைகளின் வரவை சமாளிக்க முடியாமல் நொடிந்துபோன இன்னொரு நண்பனின் அப்பாவும் நினைவுக்கு வந்தார்.

வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள். நேற்று பழைய பாடல்களை யூ ட்யூபில் தேடிக் கொண்டிருந்த போது, 'பழனி' படத்தின் இந்தப் பாடல் அகப்பட்டது. ஒவ்வொரு வரியும் எங்கள் ஊரின் அழிந்து போன வயல்களையும், விவசாயிகளையும், திருவிழாவைப் போன்ற அறுவடை நாட்களையும் கண்மும் கொண்டுவந்து மனதை கனக்க வைத்தது. சற்றே அமைதியான சூழலில் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கும் கிராமத்து நினைவுகள் திரும்பலாம். பாடலின் வரிகள் கீழே..



ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்

போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்...

ஆறோடும்.............

மண்ணிலே தங்கம் உண்டு
மணியும் உண்டு
வைரம் உண்டு

கண்ணிலே காணச் செய்யும்
கைகள் உண்டு
வேர்வை உண்டு

நெஞ்சிலே ஈரம் கொண்டு
பாசம் கொண்டு பசுமை கொண்டு
பஞ்சமும் நோயும் இன்றி
பாராளும் வலிமை உண்டு

சேராத செல்வம் இங்கு சேராதோ
தேனாக நாட்டில் எங்கும் பாயாதோ

ஆறோடும்..........

பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா...
பருவம் கொண்ட பெண்ணைப் போலே
நாணம் என்ன சொல்லம்மா,
நாணம் என்ன சொல்லம்மா....

அண்ணன் தம்பி நால்வருண்டு
என்ன வேண்டும் கேளம்மா..
அறுவடை காலம் உந்தன்
திருமண நாளம்மா...
திருமண நாளம்மா

போராடும்......
ஆரோடும்.....

கை கட்டி சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி செய்வாள்...

தேர் கொண்ட மன்னன் ஏது
பேர் கொண்ட புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி
போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது...

போராடும்.........
ஆறோடும்..........

எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B. ஸ்ரீனிவாஸ், ஏ.எம். ராஜன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

Monday, November 9, 2009

ஜெயகாந்தன், நெடுமாறன், நக்கீரன், அஜீத்குமார்



சில தினங்களுக்கு பதிவுலகிலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என்று எண்ணிய வேளையில் நண்பர் செந்தில்வேலன் தமிழகத்தின் பிடித்த, பிடிக்காத தொடர்பதிவுக்கு அழைத்தது மீதமிருந்ததால் அந்தக் கடமையையும் முடித்து விடுகிறேன்.

ஒரு துறையில் ஒரே ஒருவரைத்தான் பிடிக்கும்/பிடிக்காது என்று தேர்வு செய்ய முடியவில்லை, என்வே தொடரின் விதியை மீறி சிலவற்றில் இரண்டு மூன்று என உண்டு.


1) எழுத்தாளர்கள்

பிடித்தவர் - ஜெயகாந்தன். விளிம்பு நிலை மனிதர்களைக் கண்டவுடன் எனக்கு எழுந்த வெறுப்பை கருணையாக மாற்றியது சிங்கத்தின் எழுத்துக்கள்தான். பள்ளி இறுதி மட்டும் கல்லூரி நாட்களிலேயே தீவிரமாக வாசித்திருந்தால் ஒருவேளை என் வாழ்வு தடம் மாறியிருக்கும். ஆனால் அரசியல்வாதிகளின் மீதான வெறுப்பையும் தாண்டி இன்னமும் கொஞ்சமாவது சமூக அக்கறை உள்ளத்தில் இருக்கிறதென்றால் அதற்கு முழுக்காரணம் அவர்தான்.

பிடிக்காதவர் - ஜெயமோகன். என்ன காரணமென்று தெரியவில்லை, ஜெமோவின் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு. கல்லூரி நாட்களில் வாங்கிய 'சங்க சித்திரங்கள்'தான் நான் வாசித்த அவரின் ஒரே புத்தகம் ஆனால் பல முறை முயன்றும் சில பக்கங்களுக்கு மேல் புரட்ட முடியாமல் அப்படியே அட்டாலியில் வீசி விட்டேன். விஷ்ணுபுரத்தை பலரும் சிலாகித்தாலும் மீண்டும் ஒருமுறை அவரை வாசிக்க நேரமும் பொறுமையும் இல்லை.

2) நடிகர்கள்

பிடித்தவர் - அஜீத்குமார்.  இவர் என்ன நடிக்கிறார் என்று கேட்காதீர்கள், நிஜ வாழ்விலும் நடிக்கத் தெரியாதவர். இவரின் உதவியால் மேலே வந்த இயக்குனர்கள், வெளியே தெரியாமல் செய்யும் பல உதவிகள் என அவரின் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இவ்வளவு தோல்விப்படங்கள் கொடுத்த எந்த நடிகரும் இவர்போல் திரையுலகில் நிலைத்ததில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் துவளாத இவரின் தன்னம்பிக்கை பல நேரங்களில் எனக்கு உற்சாக டானிக்.

பிடிக்காதவர்கள் - காதல் படத்தில் விருச்சிககாந்த் திரைப்பட வாய்ப்பு கேட்கும்போது சொல்வார், "இல்ல சார், மொதல்ல ஹீரோ, அப்புறம் கொஞ்சம் அரசியல், அப்புறம் சி.எம், அப்புறம் டெல்லி". இதேபோல் இன்று நடிக்க ஆரம்பிக்கும் முன்னரே கோட்டைக்கு ஆசைப்படும் தமிழ் சினிமாவின் தளபதிகள் எவரையும் பிடிக்காது.

3) மாவட்ட ஆட்சியர்

பிடித்தவர் - ககன்தீப்சிங் பேடி. "இந்த மாநிலத்தில் பணியில் இணைந்தபோதே நானும் தமிழனாகி விட்டேன்" என்றவர். சுனாமியின் போது கடலூர் மாவட்டத்தில் இவர் ஆற்றிய பணியை யாராலும் மறக்க முடியாது என நினைக்கிறேன். ராதாகிருஷ்ணனையும் பிடிக்கும் என்றாலும் மீடியா வெளிச்சம் எப்போதும் அவர் மீதே இருந்தது. இதே போல் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு, சுப்ரியா சாஹூ(முன்னாள் உதகை ஆட்சியர், தற்போது செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குனர் - டெல்லி) ஆகியோரையும் பிடிக்கும்.

பிடிக்காதவர் - கலைவாணன். ஒரு காலத்தில் எங்கள் கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தார். பல ஊழல் வழக்குகளில் சிக்கி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.


4) காவல்துறை அதிகாரி

பிடித்தவர் - சைலேந்திர பாபு. எண்பதுகளின் இறுதியில் வட மாவட்ட கலவரங்களின் போதும், வட சென்னை ஆணையராக இருந்த போதும் இவர் ஆற்றிய சேவைகளை அந்த துறை நண்பர்கள் கூறிய போது வியந்தேன். அதேபோல் அந்தப் பகுதி மக்களும் அவரை மறக்க மாட்டர்கள் என எண்ணுகிறேன். ஆட்சி மாற்றத்தால் தற்போது புகளூர் காகித ஆலை புலனாய்வுத்துறை ஐஜியாக டம்மியாக்கப் பட்டுவிட்டாலும் பல சிவில் சர்வீஸ் மாணவர்களின் ரோல் மாடல் இவர்தான். இவரல்லாமல் விஜயகுமார், ஜாங்கிட், மற்றும் நேர்மையான அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளையும் பிடிக்கும்

பிடிக்காதவர் - வால்டர் தேவாரம்.

5) கல்வித் தந்தைகள்

பிடித்தவர்கள் - பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மற்றும் பூ.சா. கோவிந்தசாமி நாயுடு அவர்களின் PSG குழுமம். பொறியியல் கல்வி என்றாலே கோவை மாவட்டம்தான் என்று பெயரெடுக்க இந்த இரு பெரியவர்கள்தான் காரணம். வெறும் கல்லூரிகளை மட்டும் திறக்காமல் ஒருங்கிணைந்த தொழிற்சாலைகளையும் நிறுவி வேலைவாய்ப்பையும் பெருக்கிய இந்த இரு பெரும் குழுமங்களால்தான் பல தடைகளையும் தாண்டி கோவை மாவட்டம் இன்னும் தாக்குப் பிடிக்கிறது.

பிடிக்காதவர்கள் - கல்வியை வியாபாரமாக்கிய ஜேப்பியார், எஸ் ஆர் எம் குழுமத்தின் பச்சமுத்து மற்றும் காளான்களாய் முளைத்துள்ள பல பொறியியல் கல்வித் தந்தைகளும்.

6) விஞ்ஞானிகள்

பிடித்தவர்கள் - முன்னாள் இந்திய அணுசக்தி கழகத் தலைவர், பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்த டாக்டர் ஆர். சிதம்பரம் மற்றும் தற்போதைய ப்ரம்மோஸ் செயல் திட்ட இயக்குனர் திரு. சிவதாணுப் பிள்ளை. அப்துல்கலாமுடன் இணைந்து தமிழரின் பெருமையை உலகறியச் செய்ததில் இந்த இருவருக்கும் பெரும் பங்கு உண்டு.

பிடிக்காதவர் - மயில்சாமி அண்ணாதுரை. எங்கள் ஊர்காரர்தான் என்றாலும் சற்றே மீடியா மோகம் பிடித்தவர் என்று தோன்றுகிறது.

7) அரசியல் தலைவர்கள்

பிடித்தவர்கள் - நெடுமாறன் ஐயா உள்பட ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் எல்லா தலைவர்களையும் மதிக்கிறேன. சம காலத்தில் அரசியலில் இறங்கியவர்கள் அனைவரும் பெரிய அளவில் செட்டிலாகிவிட இன்னமும் பொதுவாழ்வில் எளிமையை கடைபிடிக்கும் அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களையும் பிடிக்கும்.

பிடிக்காதவர்கள் - ஜெயலலிதா, ராமதாஸ்.

8) ஆன்மீகத் தலைவர்கள்

 பொதுவாகவே இந்தக் கூட்டத்தை எனக்குப் பிடிக்காது. ஆனால் அவ்வப்போது செய்யும் பொதுத் தொண்டுகளால் மனதைக் கவர்ந்த தமிழர் Art of Living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மறைந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பிடிக்காதவர்கள் - பெரிய லிஸ்டே உண்டு, குறிப்பாக கல்கி சாமியார் மற்றும் மேல்மருவத்தூர்காரர்.

9) பத்திரிகையாளர்கள்

பிடித்தவர்கள் - நக்கீரன் ராஜகோபால், மாலன் மற்றும் பா. ராகவன்.

பிடிக்காதவர்கள் - ஹிந்து ராம் மற்றும் அந்துமணி. இவர்கள் இருவரையும் சில வருடங்கள் முன்பு வரை மிகவும் மதித்தேன். ஆனால் கடந்த காலங்களில் இவர்களின் மற்றொரு முகம் வெளியே தெரிய ஆரம்பித்தபோது உடைந்து போனேன். ஹூம், அறிவாளிகள் எல்லோருக்கும் மனிதாபிமானமும் இருக்கும் என்று எண்ணியது எவ்வளவு முட்டாள்தனம்.

10) ஊர் / மனிதர்கள்

பிடித்தது - உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கொங்கு நாட்டின் அனைத்து ஊர்களும். பசுமை நிறைந்த எங்கள் ஏரியா என்பதால் மட்டுமல்ல, கடும் உழைப்பாளிகளும், சக மனிதனை மதிக்கும் பண்பு நிறைந்தவர்களும் நிறையப் பேர் இருப்பதால்.

பிடிக்காதது - சென்னை. காரணம் மேலே சொன்னதுதான். அறிமுகமில்லாதவர்களை, வயதானவர்களைக் கூட ஒருமையில் அழைக்கும் பண்பு. ஒவ்வொரு வார்த்தைக்கும் 'ங்க' போட்டலும் பதில் 'இன்னா?' என்றுதான் பெரும்பாலும் வரும். தற்போது எங்கள் திருப்பூரும் சென்னைபோல் மாறிவருகிறது என கேட்கும் போது வேதனையாய் இருக்கிறது.

எனக்குத் தெரிந்த அனைத்துப் பதிவர்களையும் வேறு பலர் அழைத்து விட்டதால் நண்பர் ஜோ ஆனந்த் மற்றும் ஆரூரன் விசுவநாதன் ஆகிய இருவரை மட்டும் தொடர அழைக்கிறேன், ஏற்பார்கள என்ற நம்பிக்கையில்.

அவசியம் ஏற்பட்டால் ஒழிய இன்னும் சில தினங்களுக்கு பதிவெழுதும் உத்தேசமில்லை.  அடுத்த வாரம் ஜோர்டான் பயணம் அதற்கடுத்த வாரம் இந்தியா என தொடர்ந்து எஞ்சியுள்ள பணிகள் மலைபோல் கண்முன் நிற்கின்றன, பார்ப்போம்.

Sunday, November 8, 2009

நன்றியுடன் சில நினைவுகள்


இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தில் வார நாட்கள் பூனாவிலும் வார இறுதிகள் மும்பையிலும் என ஓய்வின்றிப் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில்தான் இணையக் குழுமங்களின் அறிமுகம் கிட்டியது. விமான் நகர் விடுதியில் தனிமையான மாலை நேரங்களில் எனக்கிருந்த துணை சில புத்தகங்களும், மடிக்கணினியும் அதிலிருந்த இணைய இணைப்புமே.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கியிருந்த கிழக்குப் பதிப்பகத்தின் 'சே குவாரா - வாழ்வும் மரணமும்' புத்தகத்தை அப்போதுதான் வாசித்து முடித்திருந்தேன். 'சே' தொடர்பாய் சில ஆவணங்களை உறுதிப் படுத்த இணையத்தில் தேடிய போது பல இணையக் குழுமங்களும் அவைகளில் உலகளாவிய மனித குலத்தின் உரிமைகள், தேடல்கள் குறித்தான விவாதங்களும் என்னைக் கவர்ந்ததால் யாஹூவின் சே குழுமத்தில் இணைந்து என்னுடைய கருத்துக்களையும் பதிப்பிக்கத் துவங்கினேன்.

தென்னமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், பாலஸ்தீனியர்கள், கொரியர்கள் என முகம் தெரியாத பல நாட்டு மனிதர்களின் உள்நாட்டு அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற விவாதங்களை தினமும் விழி விரியப் பார்த்து பகிர்ந்து கொண்டிருந்த போது பல இந்தியர்களும், தமிழர்களும் இன்று பிரபலமாய் இருக்கும் ஒரு பெண் பதிவரும் அதே குழுமத்தில் இணைத்திருந்து அறிவுபூர்வமான கருத்துக்களை பரிமாறியது என்னை வியப்பிலாழ்த்தியது.

அதன் பின்னர் அந்தக் குழுமத்தில் சில இணைய விஷமிகளின் கைவரிசையைத் தொடர்ந்து குவிந்து கொண்டிருந்த ஸ்பாம் மின்னஞ்சல்களிலிருந்து தப்பிக்க அதிலிலிருந்து வெளியேறினேன். சில தினங்களுக்குப் பின் பணியிட மாற்றம், புதிய ப்ராஜெக்டுகள் என்று இணையக் குழுமங்களை மறந்திருந்த வேளையில், மீண்டும் இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு துவக்கத்தில் மற்றுமொரு தருணத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது தமிழ்மணத்தின் அறிமுகம் கிட்டியது.

சினிமா, அரசியல், சமூகம் என பல துறைகளில் தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் வலைப்பதிவுகளாய் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது என்னை மிகவும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியதால் வெறி பிடித்தாற் போல வலைப்பதிவுகளை வாசிக்கத் துவங்கியனேன். அப்போது சில உடன்பாடில்லாத பதிவுகளில் என்னுடைய பின்னூட்டங்கள் நிராகரிக்கப்பட்டமை, சில பின்னூட்டங்களுக்கு பதிலின்மை என ஏனோ விமர்சனங்கள் புறக்கணிக்கப் படுவதாய் தோன்றியது.

ஒரு வேளை பிரபலங்கள் பதிலளிக்க மாட்டார்களா அல்லது சகிப்புத்தன்மை வலையுலகில் குறைவா என்று தெரியாமல் ஏற்பட்ட குழப்பமான மனநிலையில் சரியாக இரண்டு ஆண்டுகள் முன்பு இதே நவம்பர் மாதம் "எண்ணங்களில்.. " என்ற வலைப்பூவினைத் துவங்கி ஏதேனும் கிறுக்கலாம் என்று எண்ணிய வேளையில் மீண்டும் ஒரு பணியிட மாற்றம்.

இப்போது புதிய பொறுப்புகள், பல சவாலான அசைன்மென்டுகள் என மீண்டும் பணியில் மூழ்கி வலைப்பூவைத் துவங்கியதையே மறந்து போனேன். ஆனால் வாசிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அமீரகத்திற்கு வந்த பின்னர் பிரபல பதிவர்களான ஆசிப் அண்ணாச்சி, பினாத்தல் சுரேஷ், அய்யனார், அபி அப்பா, குசும்பன், சென்ஷி ஆகிய பலரையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினாலும் ஏதோ ஒரு விதமான கூச்சம் பல நாட்களாக தடுத்துக் கொண்டே இருந்தது.

வேலை குறைவாக இருந்த கடந்த ஜூன் மாதத்தில் கராமாவில் பதிவர் சந்திப்பு என்ற இடுகையைப் பார்த்து நண்பர், பதிவர் கலையரசனின் தொலைபேசியில் அழைத்து வாசகர்களும் கலந்து கொள்ளலாமா என்று கேட்டவுடன் அவரும் சம்மதிக்க, பல பிரபலங்களை ஒன்றாய் சந்திக்கும் மகிழ்வில் கிளம்பியதுதான் என் வலை வாழ்வின் திருப்புமுனை.

அந்த சந்திப்பின்போது அய்யனார் மற்றும் சுந்தரராமன் சார் இருவரும் நீங்கள் ஏன் எழுதக் கூடாது என்று ஊக்குவிக்க, 'எண்ணங்களில்..' 'ஒரு ஊரில்..' எனப் பெயர் மாற்றம் பெற்று திரட்டிகளில் இணையத் துவங்கியது.

ஆரம்ப நாட்களில் அமீரகப் பதிவர்களின் தொடர் ஊக்குவிப்பு, எப்போது சந்தித்தாலும் என் பதிவுகளை அக்கறையாய் விசாரிக்கும் ஆசாத்ஜி, தினமும் ஒரு முறையேனும் அலைபேசியில் உரையாடிவிடும் நண்பர் செந்தில்வேலனின் நட்பு, சென்ஷி, வினோத் கௌதம், 'என் பக்கம்' ப்ரதீப், கார்த்திகேயன் (அறிவுத்தேடல்) மற்றும் கலையரசன் (வடலூரான்) போன்றோரின் தொடர் பின்னூட்டங்கள்,  ஆகியவைதான் கடினமான பணிச்சுமையிலும் வலையில் எழுத மூலக் காரணம்.

அதன் பின்னர் நண்பர்கள், பதிவர்கள் ஜோ ஆனந்த், ப்ரபாபகர், ஈரோடு கதிர் அண்ணன், திருப்பூர் ஜோதிஜி ஆகியோரின் அன்பு, எங்கள் ஊர்க்காரர்கள் 'பழமைபேசி ' மணி அண்ணன், 'துக்ளக்' மகேஷ் ஆகியோரின் தொடர்பு  என வலையுலகம் என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது.

தமிழ்மணத்தின் நட்சத்திர வாரம் முடிவடையும் இன்னாளில், பிரபலம் என்று எவரும் இல்லை எல்லோரும் பதிவர்கள் என்ற ஒரே குடும்பம்தான் என அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து நெகிழவைத்த ஆசிப் அண்ணாச்சிக்கும், வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவினருக்கும், நட்சத்திர வாரத்தில் பின்னூட்டங்கள் மற்றும் தமிழ்மணம், தமிழிஷில் ஓட்டுக்களைப் பதித்த அனைத்து நண்பர்களுக்கும், இளமை விகடனுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

Friday, November 6, 2009

எதிர்காலம் எவர் கையில்?



நம்மில் பலருக்கு சமூக அக்கறை இருந்தாலும், நம்மால் பங்களிக்கக் கூடிய பல நிகழ்வுகளிலும் கூட வெறும் பார்வையாளராய்தான் இருக்கிறோம். அவ்வப்போது அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்த முனைந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இன்மையால் பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு கண்டு பல நேரங்களில் பரிதாபத்தோடும் புலம்பல்களோடும் நிறுத்திக் கொள்கிறோமே தவிர ஆக்கப்பூர்வமான செயல்களில் இறங்குபவர்கள் வெகு குறைவே.

வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது நம் தமிழகத்தில் இந்த வேறுபாடு சற்று குறைவு என்றாலும் அனைவருக்கும் சம உரிமை என்ற இலக்கை அடைய இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. கான்வென்டில் படிக்கும் நம் பிள்ளைகளின் பொதி மூட்டைகளைப் பற்றிக்கூட கவலைப்படாத நாம் என்றாவது வெளி உலகத் தொடர்பே இல்லாத பல குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறோமா?

ஆனால் நம்மைப்போன்று கணினியிலேயே காலைக் கடன்களைக்கூட கழிக்கும் இந்தத் தலைமுறை இளைஞர்களின் மத்தியில் சில செயல் வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரால் உருவாக்கப் பட்ட இயக்கம்தான் குக்கூ குழந்தைகள் வெளி. இதன் அங்கத்தினர் அனைவரும் படித்த, சமூக ப்ரக்ஞையுள்ள பட்டதாரி இளைஞர், இளைஞிகள்.

சமூகம் என்று நாம் சொல்லிக்கொள்ளும் கட்டமைப்பின் தொடர்பு எல்லைக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ள பல அரசு, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கற்பனை சுதந்திரத்தை வெளிக்கொணர,  சிறுவர் உலகத் திரைப்படங்களை திரையிட்டு, அவற்றின் மீது அவர்களுக்குள்ளேயே விவாதிக்க வைக்கின்றனர்.

அது மட்டுமின்றி சுடுமண் சிற்பங்கள் செய்தல், ஓரிகாமி(Origami) என்னும் காகிதம் மூலம் பல உருவங்களை செய்தல், ஓவியம் வரைதல், மரம் நடுதல்/பராமரித்தல், இயற்கை மற்றும் வன உயிரினங்கள் காணுலா(Flora and Fauna Trekking) உட்பட பல பயிற்சிகளை இந்த மாணவர்களுக்கு அளிக்கிறார்கள். அத்துடன் சத்திய சோதனை அங்காடியையும் நிறுவி மாணவர்களிடத்து நேர்மையை ஊக்குவிக்க இருக்கிறார்கள்.



வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் சார் ஆட்சியரகம் இந்த இயக்கத்துடன் இணைந்து ஐந்து பள்ளிகளை தேர்வு செய்து மேற்கண்ட பயிற்சிகளை அளிக்கிறார்கள். இவற்றில் மூன்று பழங்குடியினர் பள்ளி, ஒரு ஆதி திராவிடர் பள்ளி மற்றும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் முகாமிலுள்ள பள்ளி ஆகியவை உள்ளடங்கும்.

மாதம் இரண்டு நாட்கள் வீதம் ஒவ்வொரு பள்ளியிலும் இனித் தொடரும் ஐந்து மாதங்களுக்கு இந்த சிறுவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

முதல் கட்டமாக ஜவ்வாது மலையில் உள்ள நெல்லிவாசல்நாடு கிராமம், வனத்துறை உயர் நிலைப் பள்ளியில் இன்று முதல் (நவம்பர் 6, 7, 8) மூன்று தினங்களுக்கு "திசைகளை தீர்மானிப்பது காற்று" என்ற சிறுவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.  இங்குள்ள குழந்தைகள் அனைவரும் பழங்குடியினர். இவர்களில் பெரும்பாலானவர்களின் பெற்றோர் பெங்களூர் மற்றும் சென்னையில் கட்டிடக் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த நிகழ்வுகளில் தன்னார்வலராக பங்கெடுக்க விரும்பினால் தெரிவியுங்கள், உரியவர்களைத் தொடர்பு கொள்ளச் செய்கிறேன்.

குறிப்பு :- ஒருங்கிணைப்பாளர்களின் அனுமதி பெறுவதற்கு சிறிது தாமதமானதால் முன் கூட்டியே இந்த இடுகையை பதிக்க முடியவில்லை. அடுத்த நிகழ்வுக்கு சில தினங்களுக்கு முன்னமே பதிவிடுகிறேன், அந்தந்த பகுதியிலுள்ள தன்னார்வலர்களும் இணைந்து கொள்ளுங்களேன்.

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...