Friday, November 20, 2009

ஆறோடும் மண்ணில்..!




விவசாய நிலங்கள் குறைந்து வருவதையும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பற்றியும் நண்பர் கதிர் ஆற்றாமையுடன் எழுதிய இந்த இடுகையைப் படித்ததும் இன்று மனை நிலங்களாக மாறியுள்ள எங்கள் ஊரின் வயல்கள் நினைவுக்கு வந்தன.

ஏழு குளத்துப் பாசனம், பி.ஏ.பி வாய்க்கால் நீர், அமராவதி ஆறு, பாலாறு, அமராவதி அணை, திருமூர்த்தி அணை என்று தண்ணீருக்குப் பஞ்சமே இல்லாத ஏரியாவாக இருந்தாலும் ஒரு சில பண்ணையார்களைத் தவிர பெரும்பாலான சிறு விவசாயிகளின் நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கவலைக்கிடமாகவே இருந்தது. ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சி இன்று இவர்கள் வாழ்வையும் அடியோடு மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. பயிர் செய்யாத புஞ்சை நிலங்கள் ஏக்கர் மூன்று லட்சம்,  நெல் மற்றும் கரும்பு வயல்கள் ஏக்கர் ஐந்து லட்சம், தென்னந்தோப்புகள் ஏக்கர் பத்து லட்சம் என கடந்த ஐந்து ஆண்டுகளில் பல லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகியுள்ளனர்.

பள்ளி நண்பன் ஒருவனின் தந்தையும் ஒருகாலத்தில் சிறு விவசாயிதான். கையிலிருந்த இரண்டு ஏக்கர் நிலம், ஒரு சில ஆடு மாடுகளோடு இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் படிக்க வைக்க மிகுந்த சிரமப் பட்டார். மூத்தவன் பள்ளி இறுதி ஆண்டுடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப பாரம் சுமக்க பஞ்சாலைக்குப் போக, இவனை மட்டும் மேற்படிப்பு படிக்க கல்லூரிக்கு அனுப்பினார். நானும் வேறு ஒரு ஊருக்கு படிக்க சென்று விட அதன் பிறகு அவனுடனான தொடர்பு வெகுவாய் குறைந்து போனது. கடந்த முறை ஊருக்கு சென்ற போது கடை வீதியில் அவனை சந்திக்க நேர்ந்தது.

கழுத்தில் மைனர் செயின், கையில் ப்ரேஸ்லெட், கதர் சட்டை, வெள்ளை வேஷ்டி, என்ஃபீல்ட் பைக் என அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்த அவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என யோசித்தபடி கடந்த போது, பின்னால் வந்து தோளைத் தொட்டான்.

"டேய் என்னய தெரியலயாடா ?"

ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து "டேய், நீயா? என்னடா இது ஆளே மாறிட்ட? வீட்டுல அம்மா, அப்பா, அண்ணன், அக்கா எல்லாம் நல்லாருக்காங்களா?"

"எல்லாரும் நல்லாருக்காங்க நீ எப்பிடி இருக்க?"

"எனக்கென்ன? நீ என்ன பண்ணிட்டிருக்க? அப்பா இன்னும் விவசாயம்தான் பாக்கறாரா?"

"விவசாயமா? அதெல்லாம் வுட்டு ரெண்டு வருசமாச்சு. நம்ம காடு ரோட்டுமேல இருந்ததால திருப்பூர்ல இருந்து ஒரு பார்ட்டி சைட் போடறதுக்காக ஏக்கர் இருபத்தஞ்சு லட்சத்துக்கு முடிச்சுட்டாங்க. நானும் அண்ணனும் இங்க டவுன்லதான் பைனான்ஸ் பண்ணிட்டிருக்கோம். ஒரு நாளக்கி ரெண்டாயர்ருவா திரும்புது"

"ம்ம்.. பாத்தாலே தெரியுதுடா.. வீட்டுல எல்லோரையும் கேட்டதா சொல்லு"

"கண்டிப்பா. நானு வசூலுக்கு கெளம்பணும், சாயங்காலமா வூட்டுப் பக்கம் வாடா." என்று பைக்கை உதைத்துக் கிளம்பினான்.

"என்ன பயிரு போட்டாலும் வெலயே கெடக்க மாட்டேங்குது. இனிமே விவசாயத்த நம்பி பொழக்க முடியாது. இந்தக் காட்ட வித்துப் போட்டு ஏதாவது கடயப் போடலாம்" என்று பத்து வருடங்களுக்கு முன்பு கிடைத்த விலைக்கு, இருந்த மூன்று ஏக்கர்களையும் விற்று டீக்கடை போட்டு, புதிய கடைகளின் வரவை சமாளிக்க முடியாமல் நொடிந்துபோன இன்னொரு நண்பனின் அப்பாவும் நினைவுக்கு வந்தார்.

வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள். நேற்று பழைய பாடல்களை யூ ட்யூபில் தேடிக் கொண்டிருந்த போது, 'பழனி' படத்தின் இந்தப் பாடல் அகப்பட்டது. ஒவ்வொரு வரியும் எங்கள் ஊரின் அழிந்து போன வயல்களையும், விவசாயிகளையும், திருவிழாவைப் போன்ற அறுவடை நாட்களையும் கண்மும் கொண்டுவந்து மனதை கனக்க வைத்தது. சற்றே அமைதியான சூழலில் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கும் கிராமத்து நினைவுகள் திரும்பலாம். பாடலின் வரிகள் கீழே..



ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்

போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்...

ஆறோடும்.............

மண்ணிலே தங்கம் உண்டு
மணியும் உண்டு
வைரம் உண்டு

கண்ணிலே காணச் செய்யும்
கைகள் உண்டு
வேர்வை உண்டு

நெஞ்சிலே ஈரம் கொண்டு
பாசம் கொண்டு பசுமை கொண்டு
பஞ்சமும் நோயும் இன்றி
பாராளும் வலிமை உண்டு

சேராத செல்வம் இங்கு சேராதோ
தேனாக நாட்டில் எங்கும் பாயாதோ

ஆறோடும்..........

பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா...
பருவம் கொண்ட பெண்ணைப் போலே
நாணம் என்ன சொல்லம்மா,
நாணம் என்ன சொல்லம்மா....

அண்ணன் தம்பி நால்வருண்டு
என்ன வேண்டும் கேளம்மா..
அறுவடை காலம் உந்தன்
திருமண நாளம்மா...
திருமண நாளம்மா

போராடும்......
ஆரோடும்.....

கை கட்டி சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி செய்வாள்...

தேர் கொண்ட மன்னன் ஏது
பேர் கொண்ட புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி
போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது...

போராடும்.........
ஆறோடும்..........

எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B. ஸ்ரீனிவாஸ், ஏ.எம். ராஜன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

19 comments:

  1. கிராமிய வாசனை பார்த்து ரொம்ப நாளாச்சு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நாகா.... என் நண்பன் ஒருவனும் இதே போல... அப்போதும் கண்கள் ஈரமானது... இப்போது மறுபடி ஒருமுறை... ரொம்ப கனமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. அருமை நாகா.அருமையான பாடல். மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய இடுகை.

    ReplyDelete
  4. பாடல் பதிவு எல்லாத்துக்கும் நன்றிப்பா...

    ReplyDelete
  5. தினமும் நினைக்கும் கருத்து. நிலத்தாயை இப்படி அலட்சியம் செய்து விட்டார்களே.

    முன்பெல்லாம் தெற்கிலிருந்து சென்னை வரும் வழியெல்லாம் பச்சை வளம் கண்ணை நிறைக்கும்.கிராமங்களும், வயலில் வேலை செய்யும் மக்களும் ரயில்வண்டியைப் பார்த்து மகிழ்வாகக் கையசைப்பார்கள்.
    இப்போது....ம்ம்ம்ஹூம் சொல்ல முடியாத வருத்தம்தான் மிஞ்சுகிறது. நல்லதொரு இடுகை நாகா.

    இதே படத்தில் அண்ணன் தம்பி பாசத்துக்கும் ஒரு பாடல் வருமோ. மறந்துவிட்டது.

    ReplyDelete
  6. வருகைகு நன்றி தியா, மகேஷ், வானம்பாடிகள் ஐயா, வசந்த்

    ReplyDelete
  7. //வல்லிசிம்ஹன் said...
    தினமும் நினைக்கும் கருத்து. நிலத்தாயை இப்படி அலட்சியம் செய்து விட்டார்களே.//

    //இதே படத்தில் அண்ணன் தம்பி பாசத்துக்கும் ஒரு பாடல் வருமோ. மறந்துவிட்டது//

    வருகைக்கு நன்றி மேடம்.. அந்தப் பாடல்

    "அண்ணன் என்னடா தம்பி என்னடா
    அவசரமான உலகத்திலே
    ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
    காசில்லாதவன் குடும்பத்திலே"

    கேட்டுப் பாருங்கள் மிகவும் அருமையான வரிகள்.

    ReplyDelete
  8. மிக அருமையான இடுகை நாகா. இது போல என் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன் :(

    ReplyDelete
  9. அருமை நண்பர் நாகா ,
    மிக அருமையான மண்வாசனை பறைசாற்றும் இடுகை
    கவிதையும் அருமை
    ஓட்டுக்கள் போட்டாச்சு

    ReplyDelete
  10. எத்தனை முறை இந்தப் பாடலை இன்று பார்த்தேன் என்றே தெரியவில்லை....

    //ஏர் கொண்ட உழவன் இன்றி
    போர் செய்யும் வீரன் ஏது//
    திரும்ப திரும்ப மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது நாகா

    ReplyDelete
  11. நல்ல இடுகை..ஆனா என்ன பண்ண முடியும் வருத்தப்படுவதை தவிர..:(

    ReplyDelete
  12. தம்பிமார்களோடு சிவாஜி பாடும் இந்தப்பாடல் சின்ன வயசில பார்த்திருந்தாலும் மறக்க இயலாத என்னோட ஃபேவரிட்.! நல்ல பதிவு. நன்றி.!

    ReplyDelete
  13. எக்ஸெலண்ட் பாடல், நான்கு ஜெயண்ட்ஸ்.!

    நல்ல அழகான, ஆழமான பாடல் வரிகள். நெஞ்சைத்தொடும் வரிகள்.. என்ன சொல்ல.?

    வாவ், கிரேட்.!

    (இந்தப்படம் ஒரு மொக்கை என்பது வேறு விஷயம்.!)

    ReplyDelete
  14. தேர் கொண்ட மன்னன் ஏது
    பேர் கொண்ட புலவன் ஏது
    ஏர் கொண்ட உழவன் இன்றி
    போர் செய்யும் வீரன் ஏது//
    திரும்ப திரும்ப மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது நாகா

    ReplyDelete
  15. நீங்கள் பதிவு செய்த ஆறு நிமிடத்தில் எதிர்பாரத விதமாக என் பார்வையில் பட்டது. ஆனால் ஏதோ நீங்கள் மறுபடியும் இதில் சேர்க்கும் பொருட்டு மாற்றிக்கொண்டு இருந்து இருப்பீர்கள் போல.

    இதுவரை பார்த்து இராத படம் இது. அத்தனை நெருக்கமாய் ஊர் வாழ்க்கையை உணர்த்துகிறது.

    மற்ற ஊர்களுக்கு எப்படியோ? வாழ்ந்த ஊரில் அரிசி ஆலைகளும், வாழும் ஊரில் ஆய்த்த ஆடைகளுமாய் அத்தனை நிலங்களும் மாற்றம் பெற்று உள்ளது.

    நீங்கள் குறிப்பிட்ட நண்பர்களுக்குத் தெரியும்.

    500 கோடி சம்பாரிக்க கண்விழித்து போராடி கணவான்களை விட இந்த வட்டி மக்களும், இடம் விற்பதற்கு உதவும் தரகர் மக்களையும் அவர்களை வாழ்க்கை முறையையும், அவர்களிடம் சென்று வாழ்க்கை இழந்த இடம் கொடுத்த மக்கள்,இடம் வாங்கிய மக்கள் அத்தனை பேர்களையும் பார்க்க வேண்டுமானால், பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அனைவரும் தவறாமல் வந்து நிற்க வேண்டிய இடம்

    திருப்பூர்.

    ஏற்கனவே சொன்னது தான். பத்து நாட்கள் ஒரு இடத்துக்கு போகாமல் இருந்தால் அந்த இடத்தில் புதிய கட்டிடங்கள் வேலை நடந்து கொண்டு இருக்கும்.

    நீங்கள் பதிவு ஏற்றிய இந்த நேரத்தில் நிதி மந்திரி இறக்குமதிக்கான அரசி ஒப்பந்தம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது உங்கள் நம்பகத்தன்மை.

    நல்லவேளை திருப்பூரில் மின் மயானம் வந்து விட்டது??????????????????????

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி செந்தில், கார்த்தி - ஊருக்கு போயும் ப்ளாக்குதானா?

    ReplyDelete
  17. நன்றி கதிர், வினோத், ஆதி, ஜோதிஜி..

    ReplyDelete
  18. ப்ச்.... ஒரு பக்கம் அங்கலாப்பு, மறுபக்கம் நல்ல இடுகைங்ற பரவசம்.

    ReplyDelete
  19. அருமையான இடுகைங்க,
    நாளை சந்திப்போம்.
    நன்றி, வாழ்க வளமுடன்

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...