நீங்கள் திருடி இருக்கிறீர்களா?

on Tuesday, June 30, 2009
வாழ்க்கையில் எப்பொழுதேனும் நீங்கள் திருடியிருக்கிறீர்களா? பிற்பாடு என்றாவது அதை எண்ணி வருந்தி இருக்கிறீர்களா? தினந்தோறும் நடைபெறும் குற்றங்களை செய்தித் தாள்களில் வாசிக்கும்போது மனம் பதைக்கிறீர்களா?

புரையோடிய சமுதாயத்தில் எல்லாவற்றுக்கும் சமரசம் செய்து கொண்டு இப்போது வாழ்கிறீர்களா? அதற்கும் அவ்வப்போது வருந்துகிறீர்களா? உங்கள் நேர்மையை நீங்களே இதுவரை சோதித்தது உண்டா? அல்லது நம் அடுத்த தலைமுறையினராவது நேர்மையுடன் ஒரு நல்ல சமூகத்தில் வாழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படி என்றால் அதற்கான ஒரு சிறு சோதனைக் களம் தான் இந்த 'சத்திய சோதனை அங்காடி'.

விற்பனையாளர் யாரும் இல்லாத ஒரு அங்காடியில் நீங்களே உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குண்டான தொகையை அங்குள்ள மகாத்மாவின் புகைப்படத்தின் முன் 'திறந்துள்ள' பணப்பெட்டியில் வைத்துச் செல்வீர்களா? சரி ஒரு வேளை அந்த அங்காடியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் சிறுவர்கள் என்றால்? அப்படி வைத்த ஒரு சத்திய சோதனையில் அவர்கள் தேறி விட்டார்கள், ஆனால் நாம் தேறுவோமா என்பது சந்தேகம்தான்.

ஆந்திர மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான ஸ்ரீகாகுளத்தில் உள்ள பழங்குடியினருக்கான பள்ளியில் சோதனை முயற்சியாகத் துவங்கப்பட்ட இந்த அங்காடியில் பல மாதங்களுக்குப் பிறகும் இதுவரை ஒரு பொருள் கூட காணாமல் போனதில்லை.

சிறுவர்களின் நற்பண்புகளைச் சோதிக்கும் இதே போன்ற ஒரு 'சத்திய சோதனை அங்காடி' நம் தமிழ் நாட்டிலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'அன்பு அறக்கட்டளை'யின் உதவியால் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடி குறித்து 'தினமணி' நாளிதழில் வெளியான கட்டுரையின் சுட்டி இங்கே.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு நா.கருப்புசாமி அவர்கள் கூறியது போல, அரசுப்பள்ளி மாணவர்களின் பண்பாடு, ஆளுமைத்திறன், ஒழுக்கம் ஆகியவை பல சமயங்களில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஆனால் இந்தச் சிறுவர் சிறுமியர்களின் நேர்மை, என் போன்ற அரசுப்பள்ளி மாணவர்களை நிச்சயம் பெருமிதம் கொள்ளச் செய்யும். குழந்தைகளின் நற்பண்புகளை ஊக்குவிக்கும் இது போன்ற செயல்களை உங்கள் பகுதியிலோ, ஏன் உங்கள் வீட்டிலேயே உங்கள் பிள்ளைகளிடம் செயல்படுத்திப் பாருங்களேன்.


22 comments:

செந்தழல் ரவி said...

நல்ல அறிமுகம்..

நாகா said...

நன்றி செந்தழல்..

sarathy said...

வியப்பளிக்கும் செய்திதான்...
தலைப்பு டெரரா இருக்கு.

ஒருமுறை சௌதி வந்து பாருங்களேன்...
பஹ்ரைனை விட இங்கு பொழுதுபோக்குகள் ஏராளம்.

யாம்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...

எட்வின் said...

நல்ல செய்தி தான். பகிர்வுக்கு நன்றி

கதிர் said...

//அரசுப்பள்ளி மாணவர்களின் பண்பாடு, ஆளுமைத்திறன், ஒழுக்கம் ஆகியவை பல சமயங்களில் குறைத்து மதிப்பிடப்படுகிறது.//

கசப்பான உண்மை

ச.செந்தில்வேலன் said...

நல்ல துவக்கம்.. சிந்திக்க வைக்கும் பதிவு.. ஊத்துக்குளி பள்ளிக்கு வாழ்த்துகள்..

நாகா said...

நன்றி சாரதி.. சவுதி அனுப்பினால் வேலையை விட்டு நின்று விடுவேன் என்ற நிபந்தனையுடன் தான் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

நாகா said...

வருகைக்கு நன்றி எட்வின்

நாகா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர்

நாகா said...

நன்றி செந்தில்

வினோத்கெளதம் said...

ரொம்ப நல்ல விஷயம்..
ஆச்சரியமான செய்தி..
ஆரோக்கியமான ஒரு சூழ்நிலையை இனி வரும் தலைமுறையிடம் இந்த விஷயம் ஏற்ப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்..

வினோத்கெளதம் said...

//ஒருமுறை சௌதி வந்து பாருங்களேன்...
பஹ்ரைனை விட இங்கு பொழுதுபோக்குகள் ஏராளம்.

யாம்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...//

சாரதிக்கு குசும்பு ஜாஸ்தி..:))

அன்புடன் அருணா said...

ஏற்கெனவே படித்திருக்கிறேன்....மீண்டும் படிக்கக் கிடைத்தது....அருமை...பூங்கொத்து!!

நாகா said...

நன்றி வினோத்..

நாகா said...

நன்றி அருணா அவர்களே...

கலையரசன் said...

பயனுள்ள பதிவு, நிறைய எழுதுங்கள் நாகா!
வாழ்த்துக்கள்!!

அபுஅஃப்ஸர் said...

எதார்த்தம் வரிகளில்

தொடருங்கள்

நாகா said...

நன்றி kalai, abu

Anonymous said...

Thats really a great work..

நாகா said...

வருகைக்கு நன்றி அனானி..

Joe said...

நல்ல இடுகை நண்பா!

ஜப்பானில் நான் இருந்த சமயங்களில் ஒரு YEN என்றாலும், ஆயிரம் YEN என்றாலும், கீழே தவற விட்டால் மற்றவர்கள் எடுத்து தந்ததுண்டு. சிறு வயது முதல், பிறர் பணத்துக்கு ஆசைப்படக் கூடாது, எப்போதும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படுகிறது.

நம்மூர் குழந்தைகளுக்கு இது போல சொல்லித் தருவது பாராட்டுக்குரியது.
நீங்கள் சொன்னது போல, என் குழந்தைக்கும் இவற்றை கற்றுத் தருவேன்.

நாகா said...

உண்மை ஜோ, கிழக்காசிய நாடுகளிலும், சில மேற்கு நாடுகளிலும் மக்களின் நேர்மையைப் பார்த்து நான் வெட்கியதுண்டு. உங்கள் மகனுக்கு என் அன்பு முத்தங்கள்.

Post a Comment