நீங்கள் திருடி இருக்கிறீர்களா?

on Tuesday, June 30, 2009
வாழ்க்கையில் எப்பொழுதேனும் நீங்கள் திருடியிருக்கிறீர்களா? பிற்பாடு என்றாவது அதை எண்ணி வருந்தி இருக்கிறீர்களா? தினந்தோறும் நடைபெறும் குற்றங்களை செய்தித் தாள்களில் வாசிக்கும்போது மனம் பதைக்கிறீர்களா?

புரையோடிய சமுதாயத்தில் எல்லாவற்றுக்கும் சமரசம் செய்து கொண்டு இப்போது வாழ்கிறீர்களா? அதற்கும் அவ்வப்போது வருந்துகிறீர்களா? உங்கள் நேர்மையை நீங்களே இதுவரை சோதித்தது உண்டா? அல்லது நம் அடுத்த தலைமுறையினராவது நேர்மையுடன் ஒரு நல்ல சமூகத்தில் வாழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படி என்றால் அதற்கான ஒரு சிறு சோதனைக் களம் தான் இந்த 'சத்திய சோதனை அங்காடி'.

விற்பனையாளர் யாரும் இல்லாத ஒரு அங்காடியில் நீங்களே உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குண்டான தொகையை அங்குள்ள மகாத்மாவின் புகைப்படத்தின் முன் 'திறந்துள்ள' பணப்பெட்டியில் வைத்துச் செல்வீர்களா? சரி ஒரு வேளை அந்த அங்காடியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் சிறுவர்கள் என்றால்? அப்படி வைத்த ஒரு சத்திய சோதனையில் அவர்கள் தேறி விட்டார்கள், ஆனால் நாம் தேறுவோமா என்பது சந்தேகம்தான்.

ஆந்திர மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான ஸ்ரீகாகுளத்தில் உள்ள பழங்குடியினருக்கான பள்ளியில் சோதனை முயற்சியாகத் துவங்கப்பட்ட இந்த அங்காடியில் பல மாதங்களுக்குப் பிறகும் இதுவரை ஒரு பொருள் கூட காணாமல் போனதில்லை.

சிறுவர்களின் நற்பண்புகளைச் சோதிக்கும் இதே போன்ற ஒரு 'சத்திய சோதனை அங்காடி' நம் தமிழ் நாட்டிலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'அன்பு அறக்கட்டளை'யின் உதவியால் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடி குறித்து 'தினமணி' நாளிதழில் வெளியான கட்டுரையின் சுட்டி இங்கே.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு நா.கருப்புசாமி அவர்கள் கூறியது போல, அரசுப்பள்ளி மாணவர்களின் பண்பாடு, ஆளுமைத்திறன், ஒழுக்கம் ஆகியவை பல சமயங்களில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஆனால் இந்தச் சிறுவர் சிறுமியர்களின் நேர்மை, என் போன்ற அரசுப்பள்ளி மாணவர்களை நிச்சயம் பெருமிதம் கொள்ளச் செய்யும். குழந்தைகளின் நற்பண்புகளை ஊக்குவிக்கும் இது போன்ற செயல்களை உங்கள் பகுதியிலோ, ஏன் உங்கள் வீட்டிலேயே உங்கள் பிள்ளைகளிடம் செயல்படுத்திப் பாருங்களேன்.


பஹ்ரைன் F1 - 3ம் பாகம்

on Friday, June 26, 2009அரை நாள் அலுவலகம் முடிந்து நண்பன் வீடு வந்து சேரும்போது மதியம் ஒரு மணி ஆகி விட்டிருந்தது. மூன்று மணிக்கு இறுதிப்போட்டி துவங்கிவிடும் என்பதால் மதிய உணவைத் தவிர்த்து விட்டு போக்குவரத்து நெரிசலைக் கடந்து சர்க்யூட்டை சென்றடைந்த போது மணி 2:30. பார்க்கிங் ஏரியாவில் இருந்து எங்கள் கேலரிக்கு ஒரு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். மண்டையைப் பிளந்த வெயிலில் அங்கிருந்த செயற்கை மழையில் நனைந்துவிட்டு ஓட்டமும் நடையுமாக கேலரியை நெருங்கும்பொழுது அனைத்து கார்களும் ஒன்றாய் கிளம்பிய சத்தம் காதைப்பிளந்தது.


துவக்கத்தை தவற விட்ட ஆதங்கத்தோடு அரங்கத்தினுள் நுழைந்த எங்களை எழுந்து நின்று ஆரவாரித்துக்கொண்டிருந்த சில அரபு, வெள்ளை ரசிகர்கள், "டாய் சாவு கிராக்கி, கஸ்மாலம், பன்னாடை, மறைக்காதீங்கடா நவருங்கடா" என்று அவர்கள் மொழியில், ஏதோ ரஜினி படத்தின் அறிமுக காட்சியின் இடையே லேட்டாய் நுழைந்தவர்களைப் பார்த்து சவுண்டு விடுவது போல கூவி வரவேற்றனர். நாங்கள் அரண்டு போய் பம்பிக் குனிந்தபடியே எங்கள் இருக்கைகளை அடைந்தால் அந்த இடத்தை காமிராக்காரர்கள் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களிடம் டிக்கெட்டை காண்பித்து சண்டையிட்டு அமர்வதற்குள் ஒரு Lap முடிந்து விட்டிருந்தது. பேய் பிடித்தாற்போல ஓடும் கார்களைப் பார்த்துக்கொண்டே இருக்கையை நோக்கி நகர்ந்த போது ஒரு கருப்புப் பெண்மணியின் காலை மிதித்து விட்டதால் வெகுண்ட அவர், "பீச்சாங்கய்ய உம்மூஞ்சியில வெக்க" என்பது போல் ஏதோ கத்திக்கொண்டே பின்புறத்தில் விட்ட குத்தில் பொறி கலங்கியிருந்த எனக்கு சுய நினைவு வந்த போது அடுத்த Lapம் முடிந்திருந்தது. பிற்பாடு போட்டி முடிந்தபின் அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டதும், It's OK என்று நட்புடன் ஒரு போட்டோவுக்கும் சம்மதித்தார்.

எங்களை 'வரவேற்ற' ரசிகர்கள்


என் பொறியைக் கலக்கியவர்

இங்கே 'Lap' என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு - F1 போட்டியில் கடக்க வேண்டிய மொத்த தூரம் ஏறக்குறைய ~ 190 மைல் (305 கிமீ). இதில் ஒரு Lap என்பது ஒரு முறை சர்க்யூட்டை சுற்றி வரும் தொலைவு (சுற்றளவு). சுற்றி முடிக்க வேண்டிய Lapகளின் எண்ணிக்கை அந்தந்த சர்க்யூட்டின் நீளத்தைப் பொறுத்தது. பஹ்ரைன் ஓடுதளத்தின் நீளம்/சுற்றளவு 5.41 கிமீ ஆதலால் ஓட்டுனர்கள் மொத்தம் 57 Lapகள் சுற்றி வர வேண்டும்.

இரண்டாவது 'Lap'ன் போது


சீரான வேகத்தில் சென்ற ஒவ்வொரு கார்களின் இடையே குறிப்பிட்ட இடைவெளி விழுந்த பின் கூட்டத்தினர் மெதுவாக அடங்கி இருக்கயில் அமர்ந்தபடியே காணத்துவங்கினர். ஒரு பக்கம் வெயில் கொளுத்தினாலும் காதுகளை கிழித்துக் கொண்டிருந்த அந்த ஒலியால் அனைவரும் உற்சாகமாகவே இருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கடக்கும் கார்களைப் பார்க்க கழுத்தைத் திருப்பி திருப்பி ஏற்பட்ட வலியினைப் போக்க ஆங்காங்கே அமர்ந்திருந்த கன்னிகளையும் பார்த்து எங்கள் கழுத்துக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டி இருந்தது. பறக்கும் கார்களில் எந்தக் கார் முன்னணியில் உள்ளது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் எதிரே இருந்த பெரிய திரையில் சர்க்யூட்டின் பல்வேறு முனைகளில் செல்லும் கார்களையும், Pit Stopல் டயர் மாற்றுவதையும், வீரர்களின் நிலைகளையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டிருந்தனர்.ஒவ்வொரு அணியின் கார்கள் கடந்து செல்லும் போதும் அந்தந்த அணியின் ரசிகர்கள் இடிமுழக்கம் போல் கரவொலி எழுப்பினர். எங்களுக்கு எந்த அணியை ஆதரிப்பது என்று குழப்பம் ஏற்பட்டதால், அருகில் இருந்த சிவப்பு ஆடை அணிந்த பெண்கள், 'Ferrari' அணியின் கார் எங்கள் அரங்கத்தை கடந்த போதெல்லாம் போட்ட 'ஓ'வுடன் இணைந்து நாங்களும் விசிலடித்தோம். ஒன்றரை மணி நேரத்தில் அனைத்து வீரர்களும் 57 Lapகளையும் நிறைவு செய்ததும் போட்டி முடிவுக்கு வந்தது. ஹூம், நாங்கள் சப்போர்ட் செய்ததாலோ என்னவோ Ferrariயின் Raikkonen ஆறாவது இடத்தைத்தான் பிடித்தார். முதல் இடத்தை Brawn-Mercedes அணியை சேர்ந்த ப்ரிட்டனின் 'Jenson Button' பிடித்தார்.இந்த சீஸனில் முன்னணியில் இருப்பவரும் இவரே. போட்டியில் கடைசியாக வந்துகொண்டிருந்த நம் மல்லையாவின் இரண்டு 'Force India' கார்களை இரண்டு மூன்று Lapகள் முன்சென்ற கார்களெல்லாம் முந்திச்சென்றது காமெடியாக இருந்தது.

எங்கள் 'Ferrari' ஆதரவாளர்கள்

இரண்டு மணி நேரத்தில் பரிசளிப்பு உட்பட எல்லாம் முடிந்து எங்கள் அரங்கிலிருந்து வெளியேறி 'Main Stand' அருகில் வரும்போது அங்கே பல்வேறு கொண்டாட்டங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாங்களும் ஆங்காங்கே ஆடிக்கொண்டிருந்தவர்களின் நடுவில் புகுந்து 'குத்து' போட்டு ரகளை செய்ததைப் பார்த்த சில அழகிகள் எங்களோடு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆவலோடு துரத்த ஆரம்பித்தனர். எவ்வளவு நேரம் தான் அவர்களிடமிருந்து தப்பி ஓடுவது, போனால் போகட்டும் என்று அவ்ர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அணைத்தபடி சில போஸ்கள் கொடுத்தோம்.


இது போதாதென்று பஹ்ரைன் நாட்டு காவல்துறையும் எங்கள் வண்டியையும் ஓட்டுங்கள் என்று அழைத்தது. நமக்கு தான் இளகிய மனமாயிற்றே, அங்கிருந்த PATROL வாகனத்தில் அமர்ந்து அவர்களையும் மகிழ்வித்தோம். அருகில் நடந்த ஆப்பிரிக்க பழங்குடியினரின் நடனத்துடன் கூடிய இசையைக் கேட்டு எவ்வளவு முயன்றும் கட்டுப்படாமல் எங்கள் உடல் ஆடும்போது அருகிலிருந்த ஒட்டகச்சிவிங்கி மனிதர்களும் 'பீப்பீ' வாசித்தபடியே எங்கள் குத்தாட்டத்தை உற்சாகப்படுத்தினர். அப்போது தோன்றியது, இது போன்ற பல நாட்டவர் பங்கு பெறும் நிகழ்வுகளில் ஏன் நம் ஊர் குத்துப் பாடல்களைப் போட்டு 'ஆடுங்கடா என்ன சுத்தி' என எல்லோரையும் ஆட வைக்கக் கூடாது என்று.

எங்கள் நடனத்திற்கு 'பீப்பீ' வாசித்தவர்கள்

'இதுதாண்டா போலீஸ்'

ஒரு வழியாய் ஆடிக்களைத்து வெளியே வரும்போது, அங்கிருந்த எமனின் வாகனம் போன்ற பைக் ஒன்று எங்களை 'வா வா' என்று அழைத்தது. எமன் வருவதற்குள் அதன் மேலும் ஏறி சில புகைப்படங்களை எடுத்தோம். அடுத்த நாள் அலுவலகம் செல்தி எல்லோர் மனதிலும் லேசாகப் படர, இரவு விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதால், கூட்டம் கலையும் முன்னே எங்கள் காரை எடுத்துக் கிளம்பினோம். அன்றைய இரவு பதினொரு மணி வாக்கில் எங்களோடு F1 நினைவுகளையும் சுமந்துகொண்டு துபாய் நோக்கிப் பறந்தது Emirates விமானம்.

குறிப்பு :- ஒவ்வொரு F1 போட்டியின் முடிவிலும் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் அயற்ச்சியால் 4-5 கிலோ உடல் எடை குறையுமாம். ஆனால் மூன்று நாட்களும் உண்டு உறங்கியிருந்ததால் 4-5 கிலோ எடை எங்களுக்கு ஏறி விட்டிருந்தது.

திரு.'இராகவன் நைஜீரியா' - அமீரகப் பதிவர்கள்

on Monday, June 22, 2009


பின்னூட்டக் கொள்ளுப்பட்டாசு வைக்கவே நடுநடுங்கிய வலை வாசகர்களின் மத்தியில் ஏவுகணைகளையே எளிதாக எறிந்தவர், பதிவுலகின் பனைமரங்கள் முதல் இன்று முளைத்த என் போன்ற காளான்கள் வரை அனைவரின் அன்பை மட்டுமே சம்பாதித்தவர், 'ஆசானே' என்று வயதில் இளைய பதிவர்களையும் உயர்வாய் விளிக்கும் பண்பாளர், தமிழ் வலைப்பூச் செடிகளின் பின்னூட்ட உரம், உலகெங்குமுள்ள முகமறியா பதிவுச் சகோதர சகோதரிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நைஜீரியப் பாசப்புயல், சென்னையைத் தாக்கச்செல்லும் வழியில் நேற்று முன்தினம் அமீரகத்தில் சற்று இளைப்பாறியது. புயலின் பேச்சிலும் அன்பிலும் கட்டுண்டிருந்த அமீரகப் பதிவர்களின் சில மணித்துளிகள் இங்கே.


அலுவல் முடிந்து, அவர் மையம் கொண்டிருந்த 'Pearl Residence' 107ம் எண் அறையில் நுழைந்ததுமே எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இராகவன் நைஜீரியா என்ற அவர் பெயர், பதிவு மற்றும் பின்னூட்டங்களை வைத்து சாருஹாசன் போன்ற ஒரு 50 வயது உருவத்தை கற்பனை செய்திருந்த எங்களுக்கு, 'பதினாறு வயதினிலே' டாக்டர் போன்று அட்டகாசமாய் காட்சியளித்தார் எங்கள் ஆசான். உடனே 'இவர் புகைப்படத்தை, Profileல் போட்டாலே ஓராயிரம் என்ன, ஒரு லட்சம் Followers உறுதி' என்று எல்லோர் மனத்திலும் ஒரே மாதிரியான எண்ணம் ஓடியது.

கண்ணா, நான், அபு அஃப்ஸர், கலையரசன்

"எப்படி சார் இவ்வளோ இளமையா இருக்கீங்க" என்று எப்போதோ புறமுதுகிட்டு வாங்கிய பூரிக்கட்டையின் அடியால் இன்னனும் வலித்துக் கொண்டிருந்த முதுகை தடவியபடியே கேட்டார் குசும்பன். "எவ்வளோ கஷ்டம் வந்தாலும் வாழ்கையை சந்தோஷமா அனுபவிப்பேன்" என்று கண்ணாவின் இளந்தொந்தியைப் பார்த்து சிரித்தபடியே பதிலளித்தார் ஆசான்.


ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டே, பதிவுகளின் காப்புரிமை பற்றி ஆரம்பித்த விவாதம் பல்வேறு கோணங்களில் ஒரு பதிவர் சந்திப்பைப் போன்றே தொடர்ந்தது. இடையிடையே அண்ணியாரின் விருந்தோம்பலில் நனைந்தபடி திரு. ஆசாத் மற்றும் திரு. சுந்தரராமனின் அனுபவப் பகிர்வுகள், கலையரசன், குசும்பனின் கலாட்டாக்களுமாய் நகர்ந்த சந்திப்பு, செல்பேசி மூலம் தங்கமணிகள் விட்ட அலாரத்தால் இறுதிக் கட்டத்தை எட்டியது.

குசும்பன், கண்ணா, ப்ரதீப்

கடந்த பதிவர் சந்திப்பில் வடை மட்டுமே கொண்டுவந்த திரு. சுந்தரராமன், இந்த முறை புயலின் வருகையை ஒட்டி, வடையுடன் இட்லியையும் வரவழைத்திருந்தார். அபு அஃப்ஸரும் ப்ரதீப்பும் அனைவருக்கும் பரிமாறிய அந்தச் சிற்றுண்டியுனூடே, துபாயில் திரு. ஆசாத் அவர்கள் தலைமையில் துவங்கப்போகும் ஆயிரமாவது வலைத்தமிழ் சங்கத்திற்கு நம் விழா நாயகன் நன்கொடையளித்து கௌரவ ஆலோசகராகவும் இருக்க ஒப்புக்கொண்டதுடன் ஒரு இனிய மாலை நிறைவுக்கு வந்தது.

கலையரசன், திரு. இராகவன், திரு. சுந்தரராமன்

சற்று முன் கிடைத்த செய்தி :- ஞாயிறு நள்ளிரவு வாக்கில் அமீரகக் கரையைப் பாதுகாப்பாக கடந்த புயல், தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் மையம் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

இன்க்ரிடிபிள் இண்டியா - புகைப்படங்களுடன்..

on Saturday, June 20, 2009

ஏற்கனவே நம் 'Incredible India'வின் புகைப்படங்களை மின்னஞ்சல் மூலமாகவோ வேறு தளங்கள் அல்லது பதிவுகள் மூலமாகவோ பார்த்திருந்தால், இது உங்களுக்கான பதிவு அல்ல, ஏனெனில் எனக்கு நேற்றுதான் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். கமெண்ட் மட்டும் என்னோடது :)
'மின்வெட்டி வீராசாமி' அழுதுகொண்டே - "அங்க மட்டும் எப்பிடிடா மின்வெட்டு இருக்கமாட்டேங்குது?"'பாலமன் ஆப்பையா' - " நல்லா படிக்கறாங்கய்யா பாடத்த"


'சீரியல் பாக்கலன்னா நாங்க எல்லாம் செத்துருவோம்.. செத்துருவோம்.. செத்துருவோம்(echo) '

தமிழ்'குடிமகன்' - "நம்ம டாஸ்மாக்ல எப்படா 'கரடிக்குட்டி ஃப்ரை' சைட் டிஷ் கிடைக்கும்?"


'லல்லு' - "ஆ தேக்கோ, நாம மினிஸ்டரா இல்லைன்னா ஒரு பயலும் ஒழுங்கா வேலை பாக்க மாட்டேங்கறானே"


இதுக்கு எவ்வளோ யோசிச்சாலும் டீசண்டான கமெண்ட் வரமாட்டேங்குது - 'பைப்பு, பம்புன்னு ஜெயமோகன் மாதிரியே தோணுது'

கல்லை மட்டும் கண்டேன்...

எங்கள் கோவை மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நீர் நிலைகள், ஓடைகள் அல்லது வாய்க்கால்களின் அருகே கட்டாயம் ஒரு ஆலமரம் அல்லது அரச மரத்தின் அடியில் இவர் குடியிருப்பார்.

வேலைக்குச் செல்வோர், வீட்டிலிருப்போர், பள்ளி செல்லும் பிள்ளைகள் என அனைவருக்கும் இவர் ஏதேனும் ஒரு வகையில் மிகுந்த நெருக்கம். எனக்கும் எங்கள் ஊர் PAP வாய்க்காலின் அருகே அமர்ந்துள்ள இந்த பிள்ளையார் மிகவும் நெருங்கிய தோழனாக இருந்தார். பள்ளி நாட்களில் பரீட்சைக்கு செல்லும் முன் இவர்தான் எங்களை ஆசீர்வதிப்பார், பாஸ் ஆனால் கொழுக்கட்டை, பொங்கல் போன்ற நிபந்தனைகளோடு.

கோடைக்கால விடுமுறை வந்தால் பிள்ளையார் உட்பட எங்கள் அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் கிளம்பி விடும். கோயில் மேடையைச் சுற்றி கட்டம் போட்டு குண்டு, எதிரே உள்ள 41/2 அடி வாய்க்காலில் நீச்சல், தொட்டு விளையாட்டு, பாலத்தின் மேலிருந்து டைவ் என நாள் முழுதும் எங்கள் ஆட்டத்தில் பங்கு பெறாத ஒரு நண்பனைப் போல் உடனிருப்பார்.

மார்கழி மாதமும், வினாயகர் சதுர்த்தியின் போதும் இவர் தான் எங்கள் ஊரின் ஹீரோ. அதிகாலயிலேயே ஊரிலிருந்த அக்காக்களெல்லாம் இவர் கோவில் முன்பு போட்டி போட்டுக்கொண்டு வண்ணக்கோலங்கள், சாணிப்புள்ளார், அதன் மேல் பூசணிப்பூ, எருக்கம்பூ மாலை என்று அமர்க்களப்படுத்தி இவரை மகிழ்விப்பார்கள்.

வினாயகர் சதுர்த்தியின் போது, 2 - 3 நாட்கள் பகல் முழுதும் குழாய் ஸ்பீக்கர்கள் "பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்" என்று இவர் புகழை விடாமல் பாடிக்கொண்டே இருக்கும். மாலை நேரங்களில் யாரேனும் பெரியவர்கள் கோவிலின் அருகே இருந்த சிறிய மைதானத்தில் போடப்பட்ட பந்தலில் மைக் வைத்து அவர் பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்களும் அவ்வப்போது அவர் சொல்லும் கதைகளுக்காகவும் அவர் ஓய்வெடுக்கும் இடைவெளியில் 'ஹலோ, ஹலோ மைக் டெஸ்டிங் 123' சொல்லவும் போட்டி போட்டுக்கொண்டு தரையில் முதல் வரிசையில் அமர்வோம். அப்போது ஒரு முறை ஒரு பெரியவர் சொன்ன கதை இது.

நாத்திகன் (அப்படித்தான் அவர் சொன்னார்) ஒருவன் தன் நாயை அழைத்துக்கொண்டு நாள்தோறும் வாய்க்கால் மேட்டிற்கு வாக்கிங் வருவானாம். தினமும் அங்கு பூசை செய்து கொண்டிருந்த சாமியாரை நோக்கி ஒரு நாள் 'உங்கள் பிள்ளையாரை விட என் நாய்தான் சிறந்தது' என்று வம்புக்கு இழுத்தானாம். சாமியாரோ நம் தலைவர் தான் சிறந்தவர் என்று வாதிட, நாத்திகனும், "சரி ஒரு போட்டி வைத்துக்கொள்வோம், என் நாயை தூக்கி நான் இந்த வாய்க்கலில் போடுகிறேன், நீ உன் பிள்ளையாரத் தூக்கிப் போடு. யார் மேலே நீந்தி வருகிறார்களோ அவரே பெரியவர்" என்று சொன்னானாம்.

அதற்கு நம் சாமியாரோ, "நீ உன் நாயை தூக்கி என் பிள்ளையார் மேல் போடு, நான் என் பிள்ளையாரை தூக்கி உன் நாய் மேலே போடுகிறேன். யாருக்கு அடிபடவில்லையோ, அவர்தான் சிறந்தவர்" என்று அவர் சொன்னதாய்க் கேட்ட கூட்டம், கைதட்டி ஆர்ப்பரித்தது. என் மனத்திலும் பிள்ளையாரின் இமேஜ் பயங்கரமாக உயர்ந்தது. 'கல்லால் அடித்தால் எந்த உயிரினத்திற்கும் வலிக்கும்' என்ற உண்மை அப்போது எனக்கு உறைக்க மறுத்து பிள்ளையாரின் மகிமை பெரிதாகத் தெரிந்தது.

ஆனால்,

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ்மூன்றுந் தா"

என்று வேண்டிய என் இன மக்கள் கொத்துக் கொத்தாய் மடிந்த போதும் வெறும் பாலுக்கும் தேனுக்கும் காத்திருக்கும் இந்தப் பிள்ளையார் கல் மட்டுமல்ல, அதன் உறவுக் கற்கள் எவற்றைக் கண்டாலும் இப்போது எரிச்சல் தான் வருகிறது. 'நம்பினோர்க்கு கடவுள், நம்பாதவர்க்கு கல்' என்றால், நம்பியவர் நம்பாதவர் என அனைவருக்கும் மரணம் தான் இவர்/இது கொடுக்கும் பரிசு போலும்.

குறிப்பு :- 'அதை' நம்பிய ஒருவனின் ஆதங்கமே தவிர, எவர் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதற்கல்ல இந்தப்பதிவு.

பஹ்ரைன் F1 - இரண்டாம் பாகம்

on Thursday, June 18, 2009


பஹ்ரைன் நாட்டு சிறுபான்மை மக்கள் அரசுக்கு எதிராகப் போராடும் விதம் சற்றே வித்தியாசமானது. நள்ளிரவில் அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த பகல்களில், முக்கியமான சாலைகளின் நடுவில் டயர்களை அடுக்கி தீப்பற்ற வைத்து விடுவர். பல மணி நேரங்கள் எரியும் இந்த டயர்களால், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுப்புற மாசு ஏற்படுகிறது.


சனியன்றும் அப்படித்தான், முந்தைய இரவு சரக்கின் சீற்றம் தணிந்த பின் மாலை 'F1 Circuit'ஐ பார்த்து விட்டு, அருகில் இருக்கும் ஒரு கடற்கரைக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு வெளியே கிளம்பினோம். எங்கள் துரதிர்ஷ்டம், மதிய நேரம் வாகன நடமாட்டம் குறைந்த இடைவெளியில் யாரோ சிலர் அருகில் இருந்த முக்கிய சாலை ஒன்றில் டயர்களை கொளுத்தி விட்டிருந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். மெதுவாக சாலையில் ஊர்ந்து செல்லும்போதே இரண்டு நாட்களும் நாங்கள் F1ஐ பற்றி சேகரித்த சில தகவல்கள் உங்களுக்காக.

பார்வையாளர்களில் ஒரு பகுதி

எங்கள் அருகே இருந்த பார்வையாளர்கள்

FIA எனப்படும் 'Fédération Internationale de l'Automobile'னால் நிர்வகிக்கப்படும் ஃபார்முலா ஒன் உலப்போட்டிகள், 1950ம் ஆண்டு முதல் இதற்கெனத் தனியே அமைக்கப்பட்ட 'F1 Circuit' ஓடு தளங்களில் நடைபெறுகின்றன. அணிக்கு இரண்டு கார்கள் வீதம் மொத்தம் பத்து அணிகளை சேர்ந்த 20 ஓட்டுனர்கள் பங்கு பெறும் இப்போட்டி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை நடைபெறும். உலகில் மொத்தமுள்ள 38 'Circuit'களில் தேர்வு செய்யப்பட்ட 17ல் (இந்த ஆண்டு) வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு அன்று முறையே சோதனை ஓட்டம், தகுதிச் சுற்று மற்றும் இறுதிப்போட்டி என்று நடைபெறும். எங்கு, எப்போது, எத்தனை சுற்றுக்கள் என அனைத்தும் 'FIA'வால் முடிவு செய்யப்படும்.

பார்க்க மட்டுமே. ஒன்றும் சொல்வதற்கில்லை

இந்தியாவில் இது வரை 'F1 Circuit'கள் இல்லை. ஆனால் நம் 'அஜய் புல்லையா' மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முயற்சியால், வரும் 2011ம் ஆண்டு டெல்லி அருகே உள்ள 'நோய்டா'வில் தயாராகும் ஓடு தளத்தில் ஃபார்முலா ஒன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிப் பந்தயம் வரும் நவம்பர் மாதம் அமீரகத்தின் அபுதாபியில் முதன்முறையாக நடைபெற உள்ளது. பாக்கெட் வீங்கிய நண்பர்கள் யாரேனும் இங்கு இருந்தால், நேரில் கண்டு களிக்கலாம்.

விளக்குகளால் மின்னும் பேரீச்சை மரங்கள்

ஒரு வழியாக நெரிசலில் இருந்து வெளியேறி Circuit செல்லும் சாலையை பிடித்தோம். வழியெங்கும் இருந்த அனைத்து பேரீச்சை மரங்களும் வண்ண விளக்குகளால் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மைதானத்தின் அருகே தேடிப்பிடித்து ஒரு இடத்தில் காரை நிறுத்தினோம். அங்கே தற்காலிகமாக பல F1 சம்பந்தமான கடைகள் முளைத்து இருந்தன. அங்கு இருந்த பொருட்களையும் பெண்களையும் பார்வை இட்டுகொண்டே எதையும் வாங்காமல் அருகில் இருந்த 'Gulf Air' ஸ்டாலில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த F1 காருடன் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, சில மணி நேரங்களில் 'மனாமா'வில் இருந்த சங்கீதா உணவகத்தை நோக்கித் திரும்பினோம். மனாமா, பஹ்ரைன் நாட்டின் தலைநகரம்.

'Manama Fountain'

இரவு உணவை சங்கீதாவில் முடித்துக்கொண்டு அருகில் இருந்த மற்றுமொரு கடற்கரையை அடைந்தோம். மறு நாள் அலுவலக தினமாதலால், கரையில் இருந்த வெகு சிலரோடு கடலும் அமைதியாக இருந்தது. மணலில் அமர்ந்து சில மணித்துளிகள் உரையாடிக் கொண்டிருந்தோம். மறுநாள் அரை தினம் மட்டுமே விடுப்பு எடுத்திருந்த பஹ்ரைன் நண்பனின் வற்புறுத்தலால், தூரத்தில் இரவு விளக்குகளின் ஒளியில் 123 மீட்டர் உயரத்திற்கு தண்ணீரை அழகாக தெளித்துக் கொண்டிருந்த 'Manama Fountain'ஐ பார்த்துக்கொண்டே மெதுவாகக் கிளம்ப ஆரம்பித்தோம்.

பஹ்ரைன் F1 - முதல் பாகம்

on Friday, June 12, 2009

மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகவும் சுதந்திரமான கண்டிப்பு குறைந்த இஸ்லாமிய நாடு பஹ்ரைன். மேற்கத்திய கலாச்சாரமும், இஸ்லாமியப் பழமைவாதமும் சரிசமமாக உள்ள இங்கு கடந்த 2004ம் ஆண்டு ஃபார்முலா ஒன் பந்தயங்களை நடத்தும் ஓடுதளம் 'F1 Circuit' திறக்கப் பட்டது.

ஃபார்முலா ஒன் பந்தயங்களைப் பற்றி எனக்கு 'அ' னா, 'ஆ' வன்னா கூடத் தெரியாது. ஆனாலும், தொலைக்காட்சியில் அந்தக் கார்களின் ஒலியைக் கேட்டலே உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகமும் வேகமும் வந்து விடும். அலுவலகப் பணி காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் பஹ்ரைன் செல்ல நேர்ந்தது. அதே சமயத்தில் அங்கு F1 நடக்கவிருப்பதை அறிந்ததும், அதனை நேரில் காண வேண்டுமென்று மனம் துடிக்க ஆரம்பித்தது. உடனே பஹ்ரைனில் இருக்கும் நண்பனின் உதவியுடன், அமீரக நண்பர்கள் சிலருக்கும் சேர்த்து 26ம் தேதி ஞாயிறு அன்று நடக்கவிருந்த இறுதிப் போட்டிக்கு முன்பதிவு செய்தோம்.

ஞாயிற்றுக்கிழமை அலுவலக தினமானதால், அன்று வரப்போகும் வயிற்றுப் போக்கு விடுமுறையை முன்னிட்டு, வியாழனன்று மாலையே அமீரகத்து நண்பர்கள் பஹ்ரைன் கிளம்பி வந்தனர். "பாட்டிலுடன் வந்தால்தான் வீட்டினுள் விடுவேன்" என்ற நண்பனின் நிபந்தனைக்கு பயந்து மூன்று பாட்டில்களும் (பூஸ்ட் தாங்க) உடன் வந்தன.

பஹ்ரைன் உலக வர்த்தக மையம்

கோடையின் தாக்கம் ஏற்கனவே துவங்கி விட்டதால், இரவுகளில் பூஸ்ட் குடித்துக்கொண்டே பழைய நினைவுகளை அசை போடுவது என்றும், பகலில் தூங்கி விட்டு, மாலையில் வெளியில் எங்காவது செல்லாம் என்றும் முடிவானது. வியாழன் இரவு, கல்லூரி நாட்களைப் பற்றி ஆரம்பித்த விவாதம் காதல், திருமணம் என்று பிதற்றலும், பிளிறலுமாக எங்கெங்கோ சுற்றி வெள்ளி அதிகாலை வரை நீண்டது.


எப்போது உறங்கினோம் என்று நினைவில்லை, ஆனால் ஒவ்வொருவராக விழித்து மாலைக் கடன்களை முடித்த போது மணி 4. அருகில் இருந்த அரபு உணவகத்தில் மீதமிருந்த மதிய உணவை முடித்துக் கொண்டு பஹ்ரைனையும், சௌதியையும் இணைக்கும் 'King Fahd Causeway'யை நோக்கிப் பயணமானோம். இது கடலின் நடுவே 18 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட, 28 கிலோ மீட்டர் நீள நான்கு வழிச்சாலை.

King Fahd Causeway - செயற்கைக் கோள் புகைப்படம்

'Causeway'ன் ஒரு பகுதி

தீவின் இரு எல்லைகளிலும் ஒரு கண்காணிப்பு கோபுரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் மேலிருந்து பார்த்தால், பாலத்தின் மறு பகுதியும் சௌதி நாட்டின் 'கோபர்' நகரமும் இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் அற்புதமாய் மின்னுகின்றன. சில மணி நேரங்களை அங்கு செலவளித்த பின், மீண்டும் பஹ்ரைனில் உள்ள 'Zallaq' கடற்கரை நோக்கித் திரும்பினோம்.

'Zallaq' கடற்கரை

இங்கு கடலினுள் மணலைக் கொட்டி, ஆழத்தைக் குறைத்துள்ளதால் 100 மீட்டர் தூரம் வரை கடலில் உள்ளே நடந்தே செல்லலாம். இங்கும் சில மணித் துளிகள் செலவழித்து விட்டு வரும் வழியில் Boost குடிக்கத் தேவையான உணவுப் பொருட்களுடன் வீடு திரும்பிய போது, இரவு மணி 10.

F1 அனுபவங்கள் அடுத்த பாகத்தில்..

இது கொலையல்ல, வதம்..!

on Wednesday, June 10, 2009

வலைப்பதிவுகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மேய்ந்து கொண்டும் முகர்ந்து கொண்டும் இருந்த எனக்கு, எழுதலாம் என்ற எண்ணம் வந்தாலே ஏதோ கொலை செய்யத் தயாராவது போன்ற பயமும் படபடப்பும் ஆட்கொண்டு விடும். போதாக்குறைக்கு அடிக்கடி கனவில் வேறு கீழே உள்ள உருவம் வந்து "இது கொலையல்ல, வதம்" என்று பயமுறுத்திச் செல்லும்.இருப்பினும் திரு. சுந்தரராமன், அய்யனார் மற்றும் அமீரக வலைப்பதிவர்களின் ஊக்குவிப்போடு இன்று முதல் உங்களை 'வதம்' செய்ய இந்த வலைப்பூவைத் துவங்குகிறேன். வாழ்வுப் புத்தகத்தின் 10,000 பக்கங்களுக்கு மேல் வாசித்து விட்ட நான், என் நினைவில் உள்ள சில பக்கங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். கருத்துக்களையும், விமர்சனங்களையும் நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,

- நாகா