Sunday, July 19, 2009

அ ஆ மே நி பள்ளி நினைவுகள் - 2





நூறு ஆண்டுகளுக்கும் மேலாய் தமிழ்நாட்டின் சிறந்த மனிதர்களையும், தலைசிறந்த தறுதலைகளையும் உருவாக்கிய புகழ் வாய்ந்தது எங்கள் அ.ஆ.மே.நி. பள்ளி.

கண்ணனைப் பிரிந்து தனியே டவுன் பள்ளியில் ஆறாம் வகுப்பில், "இவங்க நம்மள விடப் பெரிய ரவுடிங்களா இருப்பாங்களோ" என்று அஞ்சியபடியே மருண்ட விழிகளோடு(?) நுழைந்தேன். வழக்கம்போல் கடைசி பென்ச்.

காலை 9 மணி - முதல் நாள், முதல் வகுப்பு ஆரம்பம். புயலாய் உள்ளே நுழைந்தார் 'காக்காப்பீ'. அவர்தான் எங்கள் வகுப்பாசிரியர். 'கா. கண்ணபிரான்' என்ற அவர் திருநாமம் காலப்போக்கில் மருவி எங்களிடம் 'காக்காப்பீ'யாகி விட்டிருந்தார்.

அட்டெண்டன்ஸ் மட்டும் எடுத்துவிட்டு "தம்பி எல்லாம் சாயந்திரம் 5 மணிக்கு வீட்டுக்கு வந்துருங்க. அதுதான் ஆறாம் வகுப்புக்கு டியூஷன் டைம்" என்று அசால்டாகச் சொல்லிவிட்டு வெளியேறி விட்டார்.

முக்கால்வாசி மாணவர்கள் அன்று மாலை அவர் வீட்டில் ஆஜர், என்னையும் சிலரையும் தவிர்த்து. அப்போதுதான் டியூஷன் செல்லமறுத்த சிவமணி, துளசிதாஸ், ராஜேஷ் போன்ற புரட்சியாளர்களின் நட்பு கிட்டியது. இவர்கள் அனைவரும் என்னையும் கண்ணனையும் விடப் பல மடங்கு சேட்டையர்கள்.

மாலை ஐந்து மணிக்கு எல்லோரும் நல்ல பிள்ளைகளாய் டியூஷன் சென்றால், நாங்கள் மட்டும் வீட்டில் டியூஷன் செல்வதாகச் சொல்லிவிட்டு கல்பனா கிரவுண்டுக்குச் சென்று கபடி, கிரிக்கெட் என்று கட்டவிழ்ந்து திரிந்தோம்.

ஒரு நாள் யாரோ ஒரு புண்ணியவான் எங்களின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு " பையன் பெரிய விளையாட்டு வீரனா வருவான் போலிருக்கு" என்று போகிற போக்கில் வீட்டில் போட்டுக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்.

"உலகம் பிறந்தது எனக்காக.." என்று உற்சாகமாய்ப் பாடிக்கொண்டே வீடு திரும்பிய என்னை ஏனோ அன்று பயங்கரப் பாசத்துடன் வரவேற்றார் அம்மா. ஹூம் அப்போதே சுதாரித்திருக்க வேண்டும். விளையாடிய களைப்பில் நன்றாக சாப்பிட்டுவிட்டு "அம்மா நான் தூங்கப் போறேன்" என்றேன்.

"ஒரு நிமிஷம் இங்க வா சாமி" பக்கத்து அறையிலிருந்து அம்மா.

உள்ளே நுழைந்ததுதான் தாமதம், கதவுகள் இழுத்து சாத்தப்பட்டன. பொறிக்குள் சிக்கிய எலியானதை உணர்வதற்குள்

"இனிமே கல்பனா கிரவுண்டுல பொறுக்கப் போவையா? போவையா? எம் மானத்த வாங்குவையா? வாங்குவையா?" என்று அழக்கூட இடைவெளியின்றி சரமாரியாக அடிகள் விழ ஆரம்பித்தன.

"நாளையிலிருந்து அஞ்சு மணிக்கு ஹிந்தி டியூஷன் போற, நானே வந்து டியூஷன் மிஸ்சுகிட்ட சொல்லிட்டுப் போறேன். ஒரு நாள் கட்டடிச்சாலும் கொன்னே போடுவேன்"

"ஹிந்தியா????"

"ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹத்தாதா" என்று மிஸ் காட்டுக்கத்து கத்தினாலும் ஏனோ இந்தி மட்டும் இன்று வரை ஏறவேயில்லை. இப்பொழுதும் இங்கே டாக்ஸியில் ஏறியவுடன் டிரைவர்கள் என்ன பேசினாலும் ஹாஞ்ஜி, ஹாஞ்ஜி என்று சிரித்துக்கொண்டே தலை ஆட்டுவதோடு சரி.

முக்கி முக்கி ப்ராத்மிக் தேர்வில் 35 மதிப்பெண் பெற்றவுடன் சொல்லிவிட்டேன், " அம்மா எனக்கு ஹிந்தி வேணாம்மா. நான் க்ளாஸ் மாஸ்டர்கிட்ட டூசனே போயிக்கறேன்."

காக்காப்பீ டூசனில்தான் நன்றாய்ப் படிக்கும் அஸ்வின், பாலமுரளி, குமரேஷ், காட்டான்(விஜயகுமார்), கணபதி போன்ற பலருக்கும் நண்பனானேன். இதே போல் ஏழாம் வகுப்பில் வந்து சேர்ந்த லோகான் என்கிற லோகநாதன், என்று இவர்களின் தொடர்பினால்தான் தறுதலை ஆகாமல் பத்தாம் வகுப்பு வரை என்னால் தாக்குப் பிடிக்க முடிந்தது.



படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் வாசிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்து இருந்ததால், உடுமலையிலும் கோவை மாவட்டத்திலும் நடந்த பல்வேறு வினாடி-வினா போட்டிகளில் கலந்துகொண்டு அஸ்வின், கணபதி, நாகா என்ற எங்கள் கவர்மெண்ட் ஸ்கூல் Quiz டீம் அந்த ஏரியாவில் பிரபலமானது.

ஒன்பதாம் வகுப்பில் காக்காப்பீயுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அவரை எதிர்த்து SNPயின் போட்டி டூசனில் சேர்ந்தது, அங்கு உடன் படித்த 3D கார்த்தி, S.ராஜேஷ் மற்றும் மகேஷின் கணிதத் திறமையைக் கண்டு வியந்தது, அவர்களைப் பார்த்து எனக்கும் படிக்க வேண்டுமென ஆர்வம் வந்தது, ஆனால் சுட்டுப் போட்டாலும் சயின்ஸ் மட்டும் வேப்பங்காயாய் கசந்தது, பத்தாம் வகுப்புத்தேர்வில் யாருமே எதிர்பாராத வகையில் நானும் நானூறு மதிப்பெண்களுக்கு மேல்பெற்றது எனப் பள்ளி நினைவுகளை எழுதும்போதே "வாழ்க்கை ஓர் வட்டம் போலே முடிந்த இடத்தில் தொடங்காதா?" என்று வைரமுத்துவின் வரிகளைப் போல் மனம் ஏங்குகிறது.

பத்தாம் வகுப்பு முடிந்தபின் மற்றுமொரு பிரிவு. நல்ல மதிப்பெண் பெற்ற அனைவரும் ப்ளஸ் ஒன் சேருவதற்கு தனியார் பள்ளிகளுக்குச் சென்று விட்டனர். சயின்ஸில் மதிப்பெண் குறைவு என்பதால் அங்கெல்லாம் எனக்கு ஃபர்ஸ்ட் க்ரூப் (பயாலஜி) மறுக்கப்பட்டது.

நானும் கணபதியும் மட்டும் இங்கேயே மீண்டும் பதினொன்றாம் வகுப்பில் இணைந்தோம். புதிதாய் எங்களுடன் இணைந்து நண்பர்களான வாசிம், சிவா(சிவக்குமார்), மகேஷ், S.ராஜேஷ், ரஹமத்துல்லா, ஹூம் நினைத்தாலே Nostalgic feel என்னை எழுத விடாமல் தடுக்கிறது. சரி, அதை விடுங்கள். இன்னொரு முறை தொடரும் போட்டு விடுவேனோ என்று எனக்கே அச்சமாக இருக்கிறது.

மீண்டும் யாருமே எதிர்பாராத வண்ணம் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்று, நான்கு ஆண்டுகள் மின்னணுப்பொறியியல் முடித்து, வேலையில் சேர்ந்து பல ஊர்கள் சுற்றி, இன்று ஓரளவு நண்பர்களாலும் உறவினர்களாலும் மதிக்கப் படுகிறேனென்றால், அதற்கு என் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம்.

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மேல் என் மதிப்பு உயர்ந்தது அந்த இரண்டு ஆண்டுகளில்தான். கெமிஸ்ட்ரி - MS என்கிற M.சுப்ரமணியன் சார், ஃபிஸிக்ஸ் முருகேசன் சார், பயாலஜி முத்துக்குமார் சாரும், நளாயினி மேடமும் என இவர்கள் அனைவருமே அந்தத் துறையில் கோவை மாவட்டத்தின் மூத்த ஆசிரியர்கள். பல வெற்றுக் கற்களையும் விலையுயர்ந்த சிற்பங்களாய் மாற்றிய தெய்வங்கள்.

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியுடன் தொடர்பதிவுகளின் விதிப்படி, பள்ளி நினைவுகளைத் தொடர இருவரை அழைக்கிறேன். நேரமிருப்பின் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1. கதிர் அண்ணன் - இவரின் மௌனங்கள் கசியும் நேரங்களில் எல்லாம் மனம் பாரமாய் பல மணித்துளிகள் செயலற்று இருந்திருக்கிறேன்.

2. ப்ரபாகர் - எளிமையான, அருமையான நடையுடன் கூடிய இடுகைகளுக்கு சொந்தக்காரர். ஒவ்வொன்றும் மறந்து போன பழைய ஊர் நினைவுகளைக் கிளறிக் கொண்டே உள்ளன.

28 comments:

  1. நண்பர் நாகா
    ரொம்ப நல்ல பதிவுங்க
    கலக்கிட்டீங்க.
    கதிர் அண்ணன்,பிரபாகர் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்.

    படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் வாசிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்து இருந்ததால்

    அனுபத்தில் கண்டதுங்க..

    ReplyDelete
  2. நல்ல பதிவு..

    //
    "ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹத்தாதா" என்று மிஸ் காட்டுக்கத்து கத்தினாலும் ஏனோ இந்தி மட்டும் இன்று வரை ஏறவேயில்லை. இப்பொழுதும் இங்கே டாக்ஸியில் ஏறியவுடன் டிரைவர்கள் என்ன பேசினாலும் ஹாஞ்ஜி, ஹாஞ்ஜி என்று சிரித்துக்கொண்டே தலை ஆட்டுவதோடு சரி.
    //

    நானும் இந்தி வகுப்பிற்குப் போனேன்.. ஒரு நாள் மிஸ்ஸு தொடைல கிள்ளிட்டீங்கன்னு போகமாட்டேன்னு சொல்லீட்டேன்..

    MS நல்ல அடிப்பாராமே? நீங்க எப்படி?

    ReplyDelete
  3. அட, நல்லாருக்கு. நீங்க போட்ட ஆட்டத்த இன்னும் சொல்லிருக்கலாம்.

    ReplyDelete
  4. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கார்த்திகேயன். மாலை வருகிறீர்கள் தானே?

    ReplyDelete
  5. //நூறு ஆண்டுகளுக்கும் மேலாய் தமிழ்நாட்டின் சிறந்த மனிதர்களையும், தலைசிறந்த தறுதலைகளையும் உருவாக்கிய புகழ் வாய்ந்தது எங்கள் அ.ஆ.மே.நி. பள்ளி.//
    அங்கு படித்த நானும் சொல்கிறேன். நூறு சதவிகிதம் உண்மை.


    நாகா...அது நளாயினி மேடம் தானே..

    ReplyDelete
  6. //MS நல்ல அடிப்பாராமே? நீங்க எப்படி//

    ஆமாம் செந்தில். மோதிரக்கையால் குட்டுபட்ட மாதிரி, MS கையால் மொத்து வாங்கின முதுகு இது

    ReplyDelete
  7. //pappu said...
    அட, நல்லாருக்கு. நீங்க போட்ட ஆட்டத்த இன்னும் சொல்லிருக்கலாம்//

    முதல் வருகைக்கு நன்றி பப்பு. இதை எழுதறதுக்கே நாக்கு தள்ளுது.. இன்னும் சொல்லலாம் அதுக்குத்தான் நெறய நாள் இருக்கே

    ReplyDelete
  8. சுட்டியதற்கு நன்றி சிதம்பரம், மாற்றி விட்டேன்.

    ReplyDelete
  9. நாகா... அருமையான நினைவுகள், ஆனால் விரைந்து முடித்து விட்டீர்களோ என நினைக்கிறேன்.
    //"ஒரு நிமிஷம் இங்க வா சாமி" பக்கத்து அறையிலிருந்து அம்மா.//

    சூப்பர் நாகா எல்லா அம்மாவுமே பட்டாசு கிளப்பறதுக்கு முன்ன இப்படித்தான் பாசம் காட்டுறாங்க.. இந்த இடம் வாய் விட்டு சிரித்தேன்

    //இன்று ஓரளவு நண்பர்களாலும் உறவினர்களாலும் மதிக்கப் படுகிறேனென்றால், அதற்கு என் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம்.//
    இதயம் தொடும் வரிகள்.

    //பள்ளி நினைவுகளைத் தொடர இருவரை அழைக்கிறேன். நேரமிருப்பின் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். //

    நிச்சயமாக.... நீண்ட நாளாக எழுத ஆசைதான், ஆனாலும் ஒரு தயக்கம்... உங்கள் நம்பிக்கை அந்த தயக்கத்தை உடைக்கிறது. சில பதிவுகளுக்குப் பின் விரைவில் எழுதுகிறேன்..

    ReplyDelete
  10. ரசித்தேன் தல என்னையும் பள்ளிவாழ்க்கைக்கு அழைத்துச்சென்றதுக்கு

    படங்களுடன் சொல்லப்பட்ட விதம் அருமை

    ReplyDelete
  11. என்னமோ போடா நாகா, கலக்குற நீ!!

    ReplyDelete
  12. ம்ம்..நல்ல நினைவுகள்..அருமையான நடை..அப்புறம் நான் நேரிலியே சொல்லிவிட்டேன்..எப்படி எழுதுகிறிர்கள் என்று..;)

    ReplyDelete
  13. Beautiful story, higher grade writing. this time also 100/100 marks

    ReplyDelete
  14. நாகா,

    உங்களின் பள்ளிப் பதிவை வேலை முடித்து தான் படிக்கவேன்டும் எனும் சபதத்தையும் மீறி காலையிலேயே படித்து இதோ இன்று முழுவதும் கனத்த மனத்துடன் இருக்கப்போகிறேன்... நெகிழ்த்துகிறீர்கள் நண்பரே!

    பிரபாகர்.

    ReplyDelete
  15. அருமையான இடுகை, நாகா.

    வாத்தியார்களுக்கு பட்டப் பெயர் வைக்காத பள்ளிச் சிறுவனை எங்கும் பார்க்க முடியாது.

    நல்ல ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னது பாராட்டுக்குரியது.

    ஹிந்தி வகுப்புக்குப் போன பிறகும் ஹிந்தி மண்டையில ஏறலையா? kuch kuch hota hai, dil chhaata hai, that's all, Hindi is very simple!

    ReplyDelete
  16. ரசித்து படித்தேன் ஒரு சிறு புன்னகையோடு!

    //ஹாஞ்ஜி, ஹாஞ்ஜி என்று சிரித்துக்கொண்டே தலை ஆட்டுவதோடு சரி.//

    நம்ம தோஸ்து!

    ReplyDelete
  17. இனிய சிநேககிதமே...

    என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன்

    http://maaruthal.blogspot.com/2009/07/blog-post_20.html

    ஏற்றுக்கொள் தோழமையே...

    நன்றிகளுடன்
    கதிர்

    ReplyDelete
  18. தல

    கலக்கிட்டிங்க போங்க....இந்தியல மட்டும் இல்ல இந்த அம்மாக்கிட்ட அடி வாங்குறதுல கூட எனக்கு நீங்க ஒரு முன்னோடி ;))

    ReplyDelete
  19. கருத்துக்களுக்கும் விருதுக்கும் நன்றி கதிர் அண்ணே..

    ReplyDelete
  20. விருதுக்கு நன்றி கலை..

    ReplyDelete
  21. முதல் வருகைக்கு நன்றி குசும்பன், கோபிநாத்

    ReplyDelete
  22. நன்றி ஜோ, அபு, ப்ரபாகர்..

    ReplyDelete
  23. அருமை நாகா.....

    நானும் உடுமலை அ.ஆ.மே.நி. பள்ளியில்தான் படித்தேன். நேரம் கிடைக்கும்போது நம்ம திண்ணையில் கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போகவும்.... :)

    இந்தப் பதிவை அறிமுகம் செய்து வைத்த உடுமலை சிதம்பரத்திற்கு நன்றி,,,,

    ReplyDelete
  24. மற்ற இடுகைகளையும் படித்தேன்... அருமையா எழுதறீங்க.... வாழ்த்துகள்!!

    ReplyDelete
  25. சுவார்ஸமாக இருக்கு உங்கள் அ.ஆ.மே.நி. பள்ளி அனுபவங்கள்

    ReplyDelete
  26. வருகைக்கு நன்றி டாக்டர் முருகானந்தன்.

    ReplyDelete
  27. தல என்ன ஒரு ஒற்றும நானும் அதே இச்ச்சூலு தாங்க தல... இப்ப எல்லாம் பில்டிங்க இடிச்சு புதுசு புதுசா கட்டிட்டாங்க .. இப்பவும் அந்த பக்கம் போகும் போது மனசுகுள்ள எதோ பண்ணும்.. பழைய ஞாபகம் வந்து enனா பண்றது கழுத கணக்கா ஆயிட்டோம் அப்புறம் என்ன அப்டீன்னு தோணும் என்ன விளையாட்டு என்ன ஆட்டம் சுமா ரவுண்டு கட்டி கலக்குவோம் அடேங்கப்பா எங்கள எல்லாம் அப்ப ஒண்ணுமே பண்ண முடியாது .. இம்புட்டு பேரு வலை பதிவுல உடுமலை ல இருந்து இருபீங்கனு தெரியாம போய்டுச்சே ...

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...