Saturday, June 20, 2009

கல்லை மட்டும் கண்டேன்...

எங்கள் கோவை மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நீர் நிலைகள், ஓடைகள் அல்லது வாய்க்கால்களின் அருகே கட்டாயம் ஒரு ஆலமரம் அல்லது அரச மரத்தின் அடியில் இவர் குடியிருப்பார்.

வேலைக்குச் செல்வோர், வீட்டிலிருப்போர், பள்ளி செல்லும் பிள்ளைகள் என அனைவருக்கும் இவர் ஏதேனும் ஒரு வகையில் மிகுந்த நெருக்கம். எனக்கும் எங்கள் ஊர் PAP வாய்க்காலின் அருகே அமர்ந்துள்ள இந்த பிள்ளையார் மிகவும் நெருங்கிய தோழனாக இருந்தார். பள்ளி நாட்களில் பரீட்சைக்கு செல்லும் முன் இவர்தான் எங்களை ஆசீர்வதிப்பார், பாஸ் ஆனால் கொழுக்கட்டை, பொங்கல் போன்ற நிபந்தனைகளோடு.

கோடைக்கால விடுமுறை வந்தால் பிள்ளையார் உட்பட எங்கள் அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் கிளம்பி விடும். கோயில் மேடையைச் சுற்றி கட்டம் போட்டு குண்டு, எதிரே உள்ள 41/2 அடி வாய்க்காலில் நீச்சல், தொட்டு விளையாட்டு, பாலத்தின் மேலிருந்து டைவ் என நாள் முழுதும் எங்கள் ஆட்டத்தில் பங்கு பெறாத ஒரு நண்பனைப் போல் உடனிருப்பார்.

மார்கழி மாதமும், வினாயகர் சதுர்த்தியின் போதும் இவர் தான் எங்கள் ஊரின் ஹீரோ. அதிகாலயிலேயே ஊரிலிருந்த அக்காக்களெல்லாம் இவர் கோவில் முன்பு போட்டி போட்டுக்கொண்டு வண்ணக்கோலங்கள், சாணிப்புள்ளார், அதன் மேல் பூசணிப்பூ, எருக்கம்பூ மாலை என்று அமர்க்களப்படுத்தி இவரை மகிழ்விப்பார்கள்.

வினாயகர் சதுர்த்தியின் போது, 2 - 3 நாட்கள் பகல் முழுதும் குழாய் ஸ்பீக்கர்கள் "பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்" என்று இவர் புகழை விடாமல் பாடிக்கொண்டே இருக்கும். மாலை நேரங்களில் யாரேனும் பெரியவர்கள் கோவிலின் அருகே இருந்த சிறிய மைதானத்தில் போடப்பட்ட பந்தலில் மைக் வைத்து அவர் பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்களும் அவ்வப்போது அவர் சொல்லும் கதைகளுக்காகவும் அவர் ஓய்வெடுக்கும் இடைவெளியில் 'ஹலோ, ஹலோ மைக் டெஸ்டிங் 123' சொல்லவும் போட்டி போட்டுக்கொண்டு தரையில் முதல் வரிசையில் அமர்வோம். அப்போது ஒரு முறை ஒரு பெரியவர் சொன்ன கதை இது.

நாத்திகன் (அப்படித்தான் அவர் சொன்னார்) ஒருவன் தன் நாயை அழைத்துக்கொண்டு நாள்தோறும் வாய்க்கால் மேட்டிற்கு வாக்கிங் வருவானாம். தினமும் அங்கு பூசை செய்து கொண்டிருந்த சாமியாரை நோக்கி ஒரு நாள் 'உங்கள் பிள்ளையாரை விட என் நாய்தான் சிறந்தது' என்று வம்புக்கு இழுத்தானாம். சாமியாரோ நம் தலைவர் தான் சிறந்தவர் என்று வாதிட, நாத்திகனும், "சரி ஒரு போட்டி வைத்துக்கொள்வோம், என் நாயை தூக்கி நான் இந்த வாய்க்கலில் போடுகிறேன், நீ உன் பிள்ளையாரத் தூக்கிப் போடு. யார் மேலே நீந்தி வருகிறார்களோ அவரே பெரியவர்" என்று சொன்னானாம்.

அதற்கு நம் சாமியாரோ, "நீ உன் நாயை தூக்கி என் பிள்ளையார் மேல் போடு, நான் என் பிள்ளையாரை தூக்கி உன் நாய் மேலே போடுகிறேன். யாருக்கு அடிபடவில்லையோ, அவர்தான் சிறந்தவர்" என்று அவர் சொன்னதாய்க் கேட்ட கூட்டம், கைதட்டி ஆர்ப்பரித்தது. என் மனத்திலும் பிள்ளையாரின் இமேஜ் பயங்கரமாக உயர்ந்தது. 'கல்லால் அடித்தால் எந்த உயிரினத்திற்கும் வலிக்கும்' என்ற உண்மை அப்போது எனக்கு உறைக்க மறுத்து பிள்ளையாரின் மகிமை பெரிதாகத் தெரிந்தது.

ஆனால்,

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ்மூன்றுந் தா"

என்று வேண்டிய என் இன மக்கள் கொத்துக் கொத்தாய் மடிந்த போதும் வெறும் பாலுக்கும் தேனுக்கும் காத்திருக்கும் இந்தப் பிள்ளையார் கல் மட்டுமல்ல, அதன் உறவுக் கற்கள் எவற்றைக் கண்டாலும் இப்போது எரிச்சல் தான் வருகிறது. 'நம்பினோர்க்கு கடவுள், நம்பாதவர்க்கு கல்' என்றால், நம்பியவர் நம்பாதவர் என அனைவருக்கும் மரணம் தான் இவர்/இது கொடுக்கும் பரிசு போலும்.

குறிப்பு :- 'அதை' நம்பிய ஒருவனின் ஆதங்கமே தவிர, எவர் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதற்கல்ல இந்தப்பதிவு.

9 comments:

  1. //நம்பியவர் நம்பாதவர் என அனைவருக்கும் மரணம் தான் இவர்/இது கொடுக்கும் பரிசு போலும்//

    ஐய்யய்யோ.. இதெல்லாம் அரசியல்வாதியதான் கேட்கனும். அரசமரத்தடியில இருக்கறவர கேட்க கூடாது.

    ReplyDelete
  2. நல்லா எழுதி இருக்கீங்க..

    ReplyDelete
  3. அப்படி பார்த்தால் நம் உலகில் நடக்கும் ஒவ்வொரு துன்பியல் நிகழ்வுகளுக்கும் கடவுளின் நிலை குறித்து வருத்தப்பட வேண்டி இருக்கும்..

    ReplyDelete
  4. நன்றாக எழதியிருக்கிறீர்கள் ... இந்த சிக்கல் / இன அழிவு கடவுள் உண்டாகியதா, ?.. துன்பங்கள் வரும் பொழுது கடவுளின் நினைப்பு சாதரணமாக கூடும் , நீங்கள் கடுவுளிடம் உள்ள நெருக்கத்தினால், தற்சமயம் கோபத்தில் உள்ளீர்... காலம் மாறும், காட்ச்சிகள் மாறலாம் ...

    ReplyDelete
  5. நல்லா எழுதியிருக்கீங்க

    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நன்றி நண்பர்களே, மிகுந்த மன உளைச்சலில் எழுதிய பதிவு இது. மேற்கொண்டு விவாதிக்க விரும்பவில்லை.

    ReplyDelete
  7. அந்த கதை மிகவும் சரி!!!
    நாயை விட பிள்ளையார் சிறந்தவர்தான்!!

    ReplyDelete
  8. புத்திசாலிகளுடன் பழகினால் சீக்கிரம் பைத்தியம் பிடித்து விடும். திறமைசாலிகளுடன் பழகினால் தூக்கம் தூரமாகிவிடும். நேற்று இரவு முழுமையான ஆர்குட் புகைப்பட அணிவகுப்பை பார்த்து விட்டு படுத்த நேரம் அதிகாலை மூன்று.


    கண்ணாடிக்குள் முகங்களை திணிக்காதது, எடுத்த அத்தனை கோணங்கள், அதற்குள்ளும் பெயர் காண தொழில் நுட்பம். ஆகா ஒத்துப் போனதற்கான காரணம் புரிகின்றது?


    பிள்ளையார் பல பேருக்கு பிடிக்காத பிள்ளையாக ஆகி இருப்பது ஆச்சரியமில்லை. அதிலும் அந்த பசங்க கதாநாயகி அப்படி என்ன தான் சொல்லிட்டாக? நீக்கி விட்டு மறுபடியும் பரிதாபப்பட்டு போட்டீகளோ?


    எதார்த்தமாய் தொடர்ந்தவன். இயல்பாய் ஒன்றியவன். முடிந்த போது மகிழ்ந்து போனவன் மனதில் உருவாகும் ஆயிரம் கேள்விகள் நீங்கள் எழுப்பா விட்டாலும் எல்லோருடைய மனதிலும் உறுத்திக்கொண்டே தான் இருக்கும்.


    உண்மைகள் என்பது எப்போதும் உண்மையாகத்தான் இருக்கும். அது நான் என்னை காத்துக்கொண்டுருக்கும் திகிலூட்டும் நம்பிக்கைகளாக இருந்தாலும்-?


    அது தான் நிதர்சனம். அது தான் உங்கள் வெற்றியும் கூட?


    ஜோதிஜி

    திருப்பூர் தேவியர் இல்லம்.

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...