
அரை நாள் அலுவலகம் முடிந்து நண்பன் வீடு வந்து சேரும்போது மதியம் ஒரு மணி ஆகி விட்டிருந்தது. மூன்று மணிக்கு இறுதிப்போட்டி துவங்கிவிடும் என்பதால் மதிய உணவைத் தவிர்த்து விட்டு போக்குவரத்து நெரிசலைக் கடந்து சர்க்யூட்டை சென்றடைந்த போது மணி 2:30. பார்க்கிங் ஏரியாவில் இருந்து எங்கள் கேலரிக்கு ஒரு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். மண்டையைப் பிளந்த வெயிலில் அங்கிருந்த செயற்கை மழையில் நனைந்துவிட்டு ஓட்டமும் நடையுமாக கேலரியை நெருங்கும்பொழுது அனைத்து கார்களும் ஒன்றாய் கிளம்பிய சத்தம் காதைப்பிளந்தது.
துவக்கத்தை தவற விட்ட ஆதங்கத்தோடு அரங்கத்தினுள் நுழைந்த எங்களை எழுந்து நின்று ஆரவாரித்துக்கொண்டிருந்த சில அரபு, வெள்ளை ரசிகர்கள், "டாய் சாவு கிராக்கி, கஸ்மாலம், பன்னாடை, மறைக்காதீங்கடா நவருங்கடா" என்று அவர்கள் மொழியில், ஏதோ ரஜினி படத்தின் அறிமுக காட்சியின் இடையே லேட்டாய் நுழைந்தவர்களைப் பார்த்து சவுண்டு விடுவது போல கூவி வரவேற்றனர். நாங்கள் அரண்டு போய் பம்பிக் குனிந்தபடியே எங்கள் இருக்கைகளை அடைந்தால் அந்த இடத்தை காமிராக்காரர்கள் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களிடம் டிக்கெட்டை காண்பித்து சண்டையிட்டு அமர்வதற்குள் ஒரு Lap முடிந்து விட்டிருந்தது. பேய் பிடித்தாற்போல ஓடும் கார்களைப் பார்த்துக்கொண்டே இருக்கையை நோக்கி நகர்ந்த போது ஒரு கருப்புப் பெண்மணியின் காலை மிதித்து விட்டதால் வெகுண்ட அவர், "பீச்சாங்கய்ய உம்மூஞ்சியில வெக்க" என்பது போல் ஏதோ கத்திக்கொண்டே பின்புறத்தில் விட்ட குத்தில் பொறி கலங்கியிருந்த எனக்கு சுய நினைவு வந்த போது அடுத்த Lapம் முடிந்திருந்தது. பிற்பாடு போட்டி முடிந்தபின் அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டதும், It's OK என்று நட்புடன் ஒரு போட்டோவுக்கும் சம்மதித்தார்.

எங்களை 'வரவேற்ற' ரசிகர்கள்
என் பொறியைக் கலக்கியவர்
இங்கே 'Lap' என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு - F1 போட்டியில் கடக்க வேண்டிய மொத்த தூரம் ஏறக்குறைய ~ 190 மைல் (305 கிமீ). இதில் ஒரு Lap என்பது ஒரு முறை சர்க்யூட்டை சுற்றி வரும் தொலைவு (சுற்றளவு). சுற்றி முடிக்க வேண்டிய Lapகளின் எண்ணிக்கை அந்தந்த சர்க்யூட்டின் நீளத்தைப் பொறுத்தது. பஹ்ரைன் ஓடுதளத்தின் நீளம்/சுற்றளவு 5.41 கிமீ ஆதலால் ஓட்டுனர்கள் மொத்தம் 57 Lapகள் சுற்றி வர வேண்டும்.
இரண்டாவது 'Lap'ன் போது
சீரான வேகத்தில் சென்ற ஒவ்வொரு கார்களின் இடையே குறிப்பிட்ட இடைவெளி விழுந்த பின் கூட்டத்தினர் மெதுவாக அடங்கி இருக்கயில் அமர்ந்தபடியே காணத்துவங்கினர். ஒரு பக்கம் வெயில் கொளுத்தினாலும் காதுகளை கிழித்துக் கொண்டிருந்த அந்த ஒலியால் அனைவரும் உற்சாகமாகவே இருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கடக்கும் கார்களைப் பார்க்க கழுத்தைத் திருப்பி திருப்பி ஏற்பட்ட வலியினைப் போக்க ஆங்காங்கே அமர்ந்திருந்த கன்னிகளையும் பார்த்து எங்கள் கழுத்துக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டி இருந்தது. பறக்கும் கார்களில் எந்தக் கார் முன்னணியில் உள்ளது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் எதிரே இருந்த பெரிய திரையில் சர்க்யூட்டின் பல்வேறு முனைகளில் செல்லும் கார்களையும், Pit Stopல் டயர் மாற்றுவதையும், வீரர்களின் நிலைகளையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு அணியின் கார்கள் கடந்து செல்லும் போதும் அந்தந்த அணியின் ரசிகர்கள் இடிமுழக்கம் போல் கரவொலி எழுப்பினர். எங்களுக்கு எந்த அணியை ஆதரிப்பது என்று குழப்பம் ஏற்பட்டதால், அருகில் இருந்த சிவப்பு ஆடை அணிந்த பெண்கள், 'Ferrari' அணியின் கார் எங்கள் அரங்கத்தை கடந்த போதெல்லாம் போட்ட 'ஓ'வுடன் இணைந்து நாங்களும் விசிலடித்தோம். ஒன்றரை மணி நேரத்தில் அனைத்து வீரர்களும் 57 Lapகளையும் நிறைவு செய்ததும் போட்டி முடிவுக்கு வந்தது. ஹூம், நாங்கள் சப்போர்ட் செய்ததாலோ என்னவோ Ferrariயின் Raikkonen ஆறாவது இடத்தைத்தான் பிடித்தார். முதல் இடத்தை Brawn-Mercedes அணியை சேர்ந்த ப்ரிட்டனின் 'Jenson Button' பிடித்தார்.இந்த சீஸனில் முன்னணியில் இருப்பவரும் இவரே. போட்டியில் கடைசியாக வந்துகொண்டிருந்த நம் மல்லையாவின் இரண்டு 'Force India' கார்களை இரண்டு மூன்று Lapகள் முன்சென்ற கார்களெல்லாம் முந்திச்சென்றது காமெடியாக இருந்தது.
எங்கள் 'Ferrari' ஆதரவாளர்கள்
இரண்டு மணி நேரத்தில் பரிசளிப்பு உட்பட எல்லாம் முடிந்து எங்கள் அரங்கிலிருந்து வெளியேறி 'Main Stand' அருகில் வரும்போது அங்கே பல்வேறு கொண்டாட்டங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாங்களும் ஆங்காங்கே ஆடிக்கொண்டிருந்தவர்களின் நடுவில் புகுந்து 'குத்து' போட்டு ரகளை செய்ததைப் பார்த்த சில அழகிகள் எங்களோடு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆவலோடு துரத்த ஆரம்பித்தனர். எவ்வளவு நேரம் தான் அவர்களிடமிருந்து தப்பி ஓடுவது, போனால் போகட்டும் என்று அவ்ர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அணைத்தபடி சில போஸ்கள் கொடுத்தோம்.
இது போதாதென்று பஹ்ரைன் நாட்டு காவல்துறையும் எங்கள் வண்டியையும் ஓட்டுங்கள் என்று அழைத்தது. நமக்கு தான் இளகிய மனமாயிற்றே, அங்கிருந்த PATROL வாகனத்தில் அமர்ந்து அவர்களையும் மகிழ்வித்தோம். அருகில் நடந்த ஆப்பிரிக்க பழங்குடியினரின் நடனத்துடன் கூடிய இசையைக் கேட்டு எவ்வளவு முயன்றும் கட்டுப்படாமல் எங்கள் உடல் ஆடும்போது அருகிலிருந்த ஒட்டகச்சிவிங்கி மனிதர்களும் 'பீப்பீ' வாசித்தபடியே எங்கள் குத்தாட்டத்தை உற்சாகப்படுத்தினர். அப்போது தோன்றியது, இது போன்ற பல நாட்டவர் பங்கு பெறும் நிகழ்வுகளில் ஏன் நம் ஊர் குத்துப் பாடல்களைப் போட்டு 'ஆடுங்கடா என்ன சுத்தி' என எல்லோரையும் ஆட வைக்கக் கூடாது என்று.
எங்கள் நடனத்திற்கு 'பீப்பீ' வாசித்தவர்கள்
'இதுதாண்டா போலீஸ்'
ஒரு வழியாய் ஆடிக்களைத்து வெளியே வரும்போது, அங்கிருந்த எமனின் வாகனம் போன்ற பைக் ஒன்று எங்களை 'வா வா' என்று அழைத்தது. எமன் வருவதற்குள் அதன் மேலும் ஏறி சில புகைப்படங்களை எடுத்தோம். அடுத்த நாள் அலுவலகம் செல்தி எல்லோர் மனதிலும் லேசாகப் படர, இரவு விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதால், கூட்டம் கலையும் முன்னே எங்கள் காரை எடுத்துக் கிளம்பினோம். அன்றைய இரவு பதினொரு மணி வாக்கில் எங்களோடு F1 நினைவுகளையும் சுமந்துகொண்டு துபாய் நோக்கிப் பறந்தது Emirates விமானம்.
குறிப்பு :- ஒவ்வொரு F1 போட்டியின் முடிவிலும் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் அயற்ச்சியால் 4-5 கிலோ உடல் எடை குறையுமாம். ஆனால் மூன்று நாட்களும் உண்டு உறங்கியிருந்ததால் 4-5 கிலோ எடை எங்களுக்கு ஏறி விட்டிருந்தது.