இருபத்து நான்கு மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த அந்த முச்சந்தியில் முளைத்த முதல் டீக்கடை 'நண்பர்கள் தேநீர் விடுதி'தான். எங்கள் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளியிருந்த அந்தக்கடையின் முதலாளி நடராஜனுக்குத் தன் கடையை விட தமிழின் மேல் அவ்வளவு ஆர்வம். தினமும் காலை ஐந்து மணிக்கு டவுனிலிருந்து முதலில் வரும் 11ம் நம்பர் பஸ்ஸில் அவர் கடைக்கு தினமணி, தினத்தந்தி, தினமலர், என்று மூன்று பேப்பர்களும் வந்து விடும். கடைக்கு வரும் யாரேனும் அவரிடம்
"என்னங்கண்ணா தினத்தந்தி மட்டும் போதுங்களே" என்றால்,
"டேளேய் நானென்ன போண்டா மடிக்கறதுக்கு மட்டும்தான் பேப்பர் வாங்கறன்னு நெனச்சீங்களா?" என்று சற்றே சூடாவார்.
வாடிக்கையாளர்களை கோபிக்கக் கூடாதென்று உடனே "அதொண்ணுமில்ல கண்ணு, நம்முளுக்கு ஒரு சேதிய ஒருத்தன்கிட்ட கேக்கரதவிட நாலு பேர்த்துகிட்ட கேட்டதான் அதோட உண்மெ நெலவரந்தெரியும் அதுக்காகத்தான்" என்று சூடான டீயை நீட்டிக்கொண்டே சொல்வார்.
தினமும் மாலையில் பள்ளி முடிந்ததும் நேராக அவர் கடைக்குத்தான் ஓடுவேன். தினத்தந்தியில் சிந்துபாத் இன்று லைலாவைக் கண்டுபிடித்து விடுவானா என்று தெரிந்து கொண்டு ஒவ்வொரு பேப்பராகப் புரட்டிக்கொண்டிருப்பேன். எனக்குப் பிடிக்கும் என்பதால் வெள்ளிக்கிழமையானால் சிறுவர் மலரையும் தங்க மலரையும் அவராகவே வீட்டில் வந்து அப்பாவிடம் கொடுத்துவிட்டுச் செல்வார்.
அந்த ஊரில் முதல் முதலில் டேப் ரெக்கார்டரில் பாட்டுப் போட ஆரம்பித்ததும் அவர் கடையில்தான். தினமும் காலை நாலரை மணிக்கெல்லாம் மருதகாசியின் இந்தப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில்
"சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே"
என்று ஒலிக்கத் துவங்கி துவங்கி இரவு பத்தரை மணி வரை சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகனாதன், TMS, P.சுசீலா, P.B ஸ்ரீனிவாஸ், ஜிக்கி, என்று பல பொக்கிஷங்களின் குரலில் பாடிக்கொண்டேயிருக்கும். ஆனால் பரீட்சை சமயங்களில் மட்டும் அதிகாலையில் அவர் கடையில் பாட்டுச்சத்தம் கேட்காது. அப்பா அவரிடம் சொல்லியிருப்பார் போலும்.
மேலே மூணாறு மலையிலிருந்து மரமேற்றி வரும் பெரும்பாலான லாரி டிரைவர்களின் இரவு உணவு, நண்பர்கள் தேனீர் விடுதியின் புரோட்டாவும் சால்னாவும்தான். எப்போதேனும் எனக்கும் புரோட்டா தின்ன ஆசை வந்தால் சால்னா வாங்க எவர் சில்வர் டம்ளருடன் அவர் கடையில் போய்
"அண்ணா ரெண்டு புரோட்டா" என்று பெரிய மனிதன் போல் கூவுவேன்.
இரண்டு ரூபாயை நீட்டினால் "காசு வேணாண்டா" என்பார்.
"அப்பா திட்டுவாருங்கண்ணா", "அப்படியா, சரி ஒருரூவா போதும்" என்று பாதிக்காசுதான் வாங்குவார்.
ஆறாம் வகுப்புப் படிக்க டவுனுக்கு சென்றதிலிருந்து, பள்ளிக்கு அருகிலேயே பொது நூலகத்தில் எல்லா பேப்பரையும் படித்து விடுவதால் அவர் கடைக்கு செல்வது வெகுவாகக் குறைந்து விட்டது. பின் பள்ளியிலிருந்து கல்லூரி, நண்பர்கள் என்று வாழ்க்கை வேறு கோணத்தில் பயணிக்க, நடராஜன் என் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியிருந்தார். எப்பொழுதாவது எதிரே பார்த்தால்,
"நல்லாப் படிக்கறயா தம்பி?"
"படிக்கறங்கண்ணா, கடை எப்பிடிப் போகுதுங்க?"
"எங்கெ தம்பி முன்ன மாதிரி எல்லாம் இல்ல, ஊருக்குள்ள பத்து கடக்கி மேல வந்துருச்சு. பத்தாததுக்கு கேரளாக்காரன் வேற பேக்கரியோட டீக்கட வெச்சுருக்கான். எல்லாப் பயலுவளும் அங்க தான் போறானுக" என்று சலித்துக் கொண்டே சொல்வார்.
பிற்பாடு வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு அலைந்ததில் அவரை சுத்தமாக மறந்து விட்டிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் பேய் மழையில் மும்பை நகரத்தோடு நானும் முடங்கியிருந்த ஒரு இரவில் அப்பா அழைத்தார்,
"என்ன கண்ணு அங்க மழைல ஒண்ணும் பிரச்சன இல்லயே?"
"இல்லப்பா நாங்கெல்லாம் வீட்டுக்குள்ளாரதான் இருக்கோம் வெளிய எங்கயும் போகல."
"சரி சாமி பாத்து எல்லாரும் சூதானமா இருந்துக்கோங்க, அப்புறம் நம்ம டீக்கட நடராசு இன்னக்கி காலைல ஒடம்பு முடியாம போய்ச் சேந்துட்டாரு. ஆஸ்பத்திரியில இருக்கும்போது போய் பாத்தப்போ உன்னய கேட்டாரு. முடிஞ்சா ஊருக்கு வரும்போது அவுங்க வூட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துரு."
"ஓ..."
மேலே என்ன பேசினார் என்று எதுவும் காதில் விழவில்லை.
"வெச்சுருட்டுமா?"
"சரிங்கப்பா"
சீர்காழியின் அந்த கணீர்க்குரல் காதுகளுக்குள் திரும்பத் திரும்ப 'சமரசம் உலாவும் இடமே' என்று ஒலிக்க, வெறுமையான மனத்தில் ஏனோ அந்த நள்ளிரவிலும் புரோட்டா சாப்பிட வேண்டுமெனத் தோன்றியது.
அருமை. வாழ்வில் நம்மாள் மறக்க இயலாத மனிதர்களில் சிலர் உண்டு. அதை அழகாக படம் பிடித்துக் காண்பித்துள்ளீர்கள்.
ReplyDeleteபள்ளபாளைத்தில் இருந்த கடையை சொல்றீங்களா?. கருத்தும் எழுத்துநடையும் மனதை நெகிழ செய்வதாக இருக்கிறது....
ReplyDeleteபள்ளபாளையம் என்றதும் நினைவிற்கு வருகிறது. முன்னாள் துனைவேந்தர் பொன்னுசாமி எழுதிய படுகளம் நாவல். பள்ளபாளையத்தை கதைக்களமாக கொண்ட நாவல்
ReplyDeletehttp://udumalai.com/prd_details.php?prd_id=3839
This comment has been removed by the author.
ReplyDeleteநடராசு அண்ணன் கண்ணுலயே நிக்கறார்..
ReplyDeleteஅருமை.. அழகாக எழுதியிருக்கீங்க.. நாம வந்த பாதையையும் சந்தித்த மனிதர்களையும் மறக்கக் கூடாது.. நீங்க மறக்கலைங்கறது நல்லது. நம்ம ஊரு வட்டார மொழில கலக்கியிருக்கீங்க..
//அருமை. வாழ்வில் நம்மாள் மறக்க இயலாத மனிதர்களில் சிலர் உண்டு. அதை அழகாக படம் பிடித்துக் காண்பித்துள்ளீர்கள்.//
ReplyDeleteநன்றி ஆசானே..
//பள்ளபாளையம் என்றதும் நினைவிற்கு வருகிறது. முன்னாள் துனைவேந்தர் பொன்னுசாமி எழுதிய படுகளம் நாவல். பள்ளபாளையத்தை கதைக்களமாக கொண்ட நாவல்
ReplyDeletehttp://udumalai.com/prd_details.php?prd_id=3839
வருகைக்கு நன்றி சிதம்பரம், இம்முறை ஊருக்கு வரும்போது இந்த நாவலை வாங்கி விடுகிறேன்.
வருகைக்கு நன்றி செந்தில்
ReplyDeleteநெகிழ்ச்சி
ReplyDeleteAAdi adangum Vaazhkayadaa
ReplyDeleteAAradi nilame sondhamadaa
Mudhalil namakellam Thottilada
KaNN moodinaal kaalilaa kattilada
Pirandhom enbathey mugavurayaam
Peasinoom enbathey thaai mozhiyaam
Marandhom enbathey nithirayaam
MaranaM enbathey mudiyurayaam
Siripavan kavalayai marakindraan
Theemaigal seibavan azugindraan
Irupom endrey ninaipavan kaNNgalai
Irandhavan allavoa thirakindraan
Vagupaar athu poL Vaazvadhillai
Vandhavar yaarumey nilaipathillai
Thogupaar silar athai suvaipadhillai
Thodanguvaar silar athai mudipathilai
வருகைக்கு நன்றி கதிர்
ReplyDeleteபாரதி.. முதல் வருகைக்கு நன்றி. தமிழில் தட்டச்சலாமே?
ReplyDeleteநான் இன்னும் படிக்கலை... சராங்கமாக் கிளம்பி விழாவுக்கு போகணும்...ஊட்டுக்கு வந்தப்பொறம் வந்து கலந்துக்குறஞ் செரியா கண்ணூ?
ReplyDeleteரொம்பவும் நல்லா இருந்தது உங்களின் நினைவுகள் ... தினத்தந்தி , சிந்து பாத், அதைஎல்லாம் மறக்கவே முடியாது...
ReplyDelete//நான் இன்னும் படிக்கலை... சராங்கமாக் கிளம்பி விழாவுக்கு போகணும்...ஊட்டுக்கு வந்தப்பொறம் வந்து கலந்துக்குறஞ் செரியா கண்ணூ?//
ReplyDeleteமணீண்ணா, இதும் உங்க ஊடுதான், நீங்க எப்ப வேணாலும் வரலாம்..
அது ஒரு கனாக் காலம் said...
ReplyDeleteரொம்பவும் நல்லா இருந்தது உங்களின் நினைவுகள் ... தினத்தந்தி , சிந்து பாத், அதைஎல்லாம் மறக்கவே முடியாது..//
இன்னமும் தினத்தந்தியில் அந்தக்கதை முடியவில்லை என்றே நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி சார்..
What a beautiful blog. I love the colors of the template and the header image :)
ReplyDeleteஅருமையா எழுத்துநடை..ம்
ReplyDeleteஎங்க வூரு டீகடை குமார் ஞாபகம் வந்துடுச்சு!!
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை..
ReplyDeleteநம்ம வாழ்க்கையிலே யாராவது ஒரு சில பேர் மறக்கமுடியா ஆளா மனதோடு ஒட்டிக்கினு இருப்பாங்க, அவர்களின் இழப்பு மனதை அதிகம் பாதிக்கும்
ReplyDeleteஅழகா வெளிச்சம் போட்டு காட்டிருக்கீங்க
எழுத்து நடை அருமை தொடருங்க நாகா
அருமை..
ReplyDeleteஉணர்வுபூர்வமா எழுதி இருக்கீங்க..
நன்றி அபு, வினோத்..
ReplyDeleteஇதை படிக்கும்போது .... நாம் பணத்துக்காக அல்லது
ReplyDeleteஏதோ ஒரு தேவைக்காக எவ்ளோ இழக்கிறோம் என்று
புரிகின்றது .
மனசை புழியரிங்க தலைவா
உணர்வுபூர்வமா எழுதி இருக்கீங்க,
ReplyDeleteஅருமையான எழுத்துநடை
வருகைக்குக்ம் கருத்துக்கும் நன்றி ரெட்மகி, இதயம்..
ReplyDeleteஅற்புதமான இடுகை நாகா.
ReplyDeleteஅருமையான நடை, ரொம்ப இயல்பா இருக்கு.
சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தால், "ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டது"-ன்னு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்.
வாழ்த்துக்கள்.
ஆக்ச்சுவலி இது ஒரு புனைவுதான் ஜோ. நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு..
ReplyDeleteவாழ்த்துகள் விகடனில் உங்கள் பதிவு...
ReplyDeleteசூப்பர் நாகா...
நன்றி சாரதி, உங்களுக்கும் விகடனுக்கும்..
ReplyDelete