Monday, July 27, 2009

பா(வே)லைத் திணை...



இலக்கின்றி அலைந்து திரிகிறது மனது. இந்தப் பாலையில் நானும் அந்த ஒற்றைக் கழுகும்தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் நான் அச்சத்துடனும் அது ஆவலுடனும்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் கானல் நீர் தானே தவிர எங்கும் ஒரு சொட்டு நீரையும் காணோம்.

கையிலிருக்கும் குடுவையைப் பலமுறை கவிழ்த்துப் பார்த்து விட்டேன், வழிந்த வியர்வையின் இறுதிச் சொட்டு வரை நக்கியும் மேற்கொண்டு நகர உடலில் வலு இல்லை.

மீதமுள்ள ஒரே திரவம், என் உடலில் ஓடும் குருதிதான் என்றாலும் இந்த நொடி வரை நர மாமிசம் உண்ணும் ஆர்வம் எனக்கில்லை. ஆனால் எந்த நொடியிலும் எதுவும் நிகழலாம் இங்கு.

சந்தித்த பலரும் சந்திக்க விரும்பிய பலரும் எதிரே வந்து போனபடி இருந்தனர்.

"ஜூ ஜூ ஜூ குட்டிம்மா இங்க பாரு காக்கா"

"டேய் என்னோட பென்சிலக் குட்றா"

"காலைல இருந்து காட்டுக்கத்து கத்துறேன், வீட்டுக்கு ஒத்தாசையா ஒரு வேலை செய்யறியா? எப்போ பாத்தாலும் அந்த கிரிக்கெட் பேட்டோட எவங்கூடவாவது பொறுக்கப் போறது, என்ன எழவுதான் அதுல இருக்குன்னு தெரியல"

"ச்சே என்ன முக்கு முக்குனாலும் இந்த 'Differential Calculus' மட்டும் மண்டையில ஏற மாட்டேங்குது"

"டேய் நேத்து பஸ் ஸ்டாப்புல அவ என்னத் திரும்பிப் பாத்தா தெரியுமா?"

"ச்சே சனிக்கிழமை கூட காலேஜா? ஏண்டா இந்த இன்ஜினியரிங்க காலேஜ்ல சேந்தோம்னு இருக்கு, அவனவன் ஆர்ட்ஸ் காலேஜுல சேந்து என்னமா ஊர் மேயறானுக"

"டேய் நாளைக்கி படையப்பா ரிலீசாமா, உனக்கு ரசிகர் மன்ற டிக்கெட் வேணுமா? எரனூறு ரூவாதான்"

"மச்சான் வேணாண்டா விட்டுரு, அவ என்னோட ஆளு"

"ஒரு ரவுண்டு மச்சி அதுக்கப்புறம் உனக்கே அந்த டேஸ்டு புடிச்சுரும்"

"உங்கூடப் படிச்சவனெல்லாம் ஒழுங்கா வேலைக்குப் போயி சம்பாரிச்சுட்டு புள்ள குட்டின்னு இருக்கான், இன்னும் எத்தன வருஷமா அரியர் பேப்பரே எழுதீட்டு இருப்ப?"

"ஆத்தா.... நான் பாசாயிட்டேன்"

"சாரி சார் உங்க வயசுக்கு இந்த வேலை சரிப்பட்டு வராது"

"சார் நாளக்கி பொள்ளாச்சி டீமோட பெட் மேட்ச், நீங்கதான் அம்பயரா இருக்கணும்"

"தம்பி மொத மொறையா வேலக்கிப் போகற, போற எடத்துல பாத்து எல்லாத்தையும் அனுசரிச்சு நடந்துக்க"

"என்னங்க இவ்வளவு வயசாச்சு ஒரு சின்ன சர்க்யூட்ட கரெக்டா அசெம்பிள் பண்ணத் தெரியலயா?"

"நாளைலருந்து காலைல எட்டு மணிக்கு ஆஃபீஸ்ல இருக்கணும், இனிமே Flexible Timing எல்லாம் நம்ம ஆஃபீஸ்ல கெடயாது. கம்பெனி நஷ்டத்துல ஓடறதால இனிமே டீ, காபி உள்பட எல்லா சலுகையும் கட் "

"சார் நான் போன மாசம்தான் சார் வேலக்கி சேந்தேன் அதுக்குள்ள தூக்கறிங்களே, ப்ளீஸ் சார் இத நம்பிதான் சார் என்னோட எதிர்காலமே இருக்கு"


"சாரிங்க நானே எத்தன நாளக்கி இங்க உக்காந்திருப்பேன்னு தெரியல, நீங்க வேற ஏதாவது ட்ரை பண்ணுங்களேன்"

புலன்கள் அனைத்தும் செயலிழந்திருந்தன ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை இன்னும் உயிரை இருப்பித்திருந்தது.

வெகு தொலைவில் புள்ளியாய் ஒரு உருவம் நெருங்க, நெருங்க, நெருங்க...

ஆம், யாரோ என்னைக் காக்க தண்ணீரோடு வருகிறார்கள்.

தேவனே, மீட்பரே, ஆதியே, அந்தமே, பரம்பொருளே..

அந்தக் குடுவையிலிருந்த தண்ணீர் என் முகத்தில் அறையப்பட்டது.

"தம்பி, மணி பத்தாச்சு எந்திரி இன்னுமா பகல் கனவு கண்டுட்டு இருக்க? இன்னக்கி புதங்கெழமெ, 'Hindu Opportunities'ல ஏதாவது வேலை வந்துருக்கான்னு பாரு"


Sunday, July 19, 2009

அ ஆ மே நி பள்ளி நினைவுகள் - 2





நூறு ஆண்டுகளுக்கும் மேலாய் தமிழ்நாட்டின் சிறந்த மனிதர்களையும், தலைசிறந்த தறுதலைகளையும் உருவாக்கிய புகழ் வாய்ந்தது எங்கள் அ.ஆ.மே.நி. பள்ளி.

கண்ணனைப் பிரிந்து தனியே டவுன் பள்ளியில் ஆறாம் வகுப்பில், "இவங்க நம்மள விடப் பெரிய ரவுடிங்களா இருப்பாங்களோ" என்று அஞ்சியபடியே மருண்ட விழிகளோடு(?) நுழைந்தேன். வழக்கம்போல் கடைசி பென்ச்.

காலை 9 மணி - முதல் நாள், முதல் வகுப்பு ஆரம்பம். புயலாய் உள்ளே நுழைந்தார் 'காக்காப்பீ'. அவர்தான் எங்கள் வகுப்பாசிரியர். 'கா. கண்ணபிரான்' என்ற அவர் திருநாமம் காலப்போக்கில் மருவி எங்களிடம் 'காக்காப்பீ'யாகி விட்டிருந்தார்.

அட்டெண்டன்ஸ் மட்டும் எடுத்துவிட்டு "தம்பி எல்லாம் சாயந்திரம் 5 மணிக்கு வீட்டுக்கு வந்துருங்க. அதுதான் ஆறாம் வகுப்புக்கு டியூஷன் டைம்" என்று அசால்டாகச் சொல்லிவிட்டு வெளியேறி விட்டார்.

முக்கால்வாசி மாணவர்கள் அன்று மாலை அவர் வீட்டில் ஆஜர், என்னையும் சிலரையும் தவிர்த்து. அப்போதுதான் டியூஷன் செல்லமறுத்த சிவமணி, துளசிதாஸ், ராஜேஷ் போன்ற புரட்சியாளர்களின் நட்பு கிட்டியது. இவர்கள் அனைவரும் என்னையும் கண்ணனையும் விடப் பல மடங்கு சேட்டையர்கள்.

மாலை ஐந்து மணிக்கு எல்லோரும் நல்ல பிள்ளைகளாய் டியூஷன் சென்றால், நாங்கள் மட்டும் வீட்டில் டியூஷன் செல்வதாகச் சொல்லிவிட்டு கல்பனா கிரவுண்டுக்குச் சென்று கபடி, கிரிக்கெட் என்று கட்டவிழ்ந்து திரிந்தோம்.

ஒரு நாள் யாரோ ஒரு புண்ணியவான் எங்களின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு " பையன் பெரிய விளையாட்டு வீரனா வருவான் போலிருக்கு" என்று போகிற போக்கில் வீட்டில் போட்டுக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்.

"உலகம் பிறந்தது எனக்காக.." என்று உற்சாகமாய்ப் பாடிக்கொண்டே வீடு திரும்பிய என்னை ஏனோ அன்று பயங்கரப் பாசத்துடன் வரவேற்றார் அம்மா. ஹூம் அப்போதே சுதாரித்திருக்க வேண்டும். விளையாடிய களைப்பில் நன்றாக சாப்பிட்டுவிட்டு "அம்மா நான் தூங்கப் போறேன்" என்றேன்.

"ஒரு நிமிஷம் இங்க வா சாமி" பக்கத்து அறையிலிருந்து அம்மா.

உள்ளே நுழைந்ததுதான் தாமதம், கதவுகள் இழுத்து சாத்தப்பட்டன. பொறிக்குள் சிக்கிய எலியானதை உணர்வதற்குள்

"இனிமே கல்பனா கிரவுண்டுல பொறுக்கப் போவையா? போவையா? எம் மானத்த வாங்குவையா? வாங்குவையா?" என்று அழக்கூட இடைவெளியின்றி சரமாரியாக அடிகள் விழ ஆரம்பித்தன.

"நாளையிலிருந்து அஞ்சு மணிக்கு ஹிந்தி டியூஷன் போற, நானே வந்து டியூஷன் மிஸ்சுகிட்ட சொல்லிட்டுப் போறேன். ஒரு நாள் கட்டடிச்சாலும் கொன்னே போடுவேன்"

"ஹிந்தியா????"

"ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹத்தாதா" என்று மிஸ் காட்டுக்கத்து கத்தினாலும் ஏனோ இந்தி மட்டும் இன்று வரை ஏறவேயில்லை. இப்பொழுதும் இங்கே டாக்ஸியில் ஏறியவுடன் டிரைவர்கள் என்ன பேசினாலும் ஹாஞ்ஜி, ஹாஞ்ஜி என்று சிரித்துக்கொண்டே தலை ஆட்டுவதோடு சரி.

முக்கி முக்கி ப்ராத்மிக் தேர்வில் 35 மதிப்பெண் பெற்றவுடன் சொல்லிவிட்டேன், " அம்மா எனக்கு ஹிந்தி வேணாம்மா. நான் க்ளாஸ் மாஸ்டர்கிட்ட டூசனே போயிக்கறேன்."

காக்காப்பீ டூசனில்தான் நன்றாய்ப் படிக்கும் அஸ்வின், பாலமுரளி, குமரேஷ், காட்டான்(விஜயகுமார்), கணபதி போன்ற பலருக்கும் நண்பனானேன். இதே போல் ஏழாம் வகுப்பில் வந்து சேர்ந்த லோகான் என்கிற லோகநாதன், என்று இவர்களின் தொடர்பினால்தான் தறுதலை ஆகாமல் பத்தாம் வகுப்பு வரை என்னால் தாக்குப் பிடிக்க முடிந்தது.



படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் வாசிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்து இருந்ததால், உடுமலையிலும் கோவை மாவட்டத்திலும் நடந்த பல்வேறு வினாடி-வினா போட்டிகளில் கலந்துகொண்டு அஸ்வின், கணபதி, நாகா என்ற எங்கள் கவர்மெண்ட் ஸ்கூல் Quiz டீம் அந்த ஏரியாவில் பிரபலமானது.

ஒன்பதாம் வகுப்பில் காக்காப்பீயுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அவரை எதிர்த்து SNPயின் போட்டி டூசனில் சேர்ந்தது, அங்கு உடன் படித்த 3D கார்த்தி, S.ராஜேஷ் மற்றும் மகேஷின் கணிதத் திறமையைக் கண்டு வியந்தது, அவர்களைப் பார்த்து எனக்கும் படிக்க வேண்டுமென ஆர்வம் வந்தது, ஆனால் சுட்டுப் போட்டாலும் சயின்ஸ் மட்டும் வேப்பங்காயாய் கசந்தது, பத்தாம் வகுப்புத்தேர்வில் யாருமே எதிர்பாராத வகையில் நானும் நானூறு மதிப்பெண்களுக்கு மேல்பெற்றது எனப் பள்ளி நினைவுகளை எழுதும்போதே "வாழ்க்கை ஓர் வட்டம் போலே முடிந்த இடத்தில் தொடங்காதா?" என்று வைரமுத்துவின் வரிகளைப் போல் மனம் ஏங்குகிறது.

பத்தாம் வகுப்பு முடிந்தபின் மற்றுமொரு பிரிவு. நல்ல மதிப்பெண் பெற்ற அனைவரும் ப்ளஸ் ஒன் சேருவதற்கு தனியார் பள்ளிகளுக்குச் சென்று விட்டனர். சயின்ஸில் மதிப்பெண் குறைவு என்பதால் அங்கெல்லாம் எனக்கு ஃபர்ஸ்ட் க்ரூப் (பயாலஜி) மறுக்கப்பட்டது.

நானும் கணபதியும் மட்டும் இங்கேயே மீண்டும் பதினொன்றாம் வகுப்பில் இணைந்தோம். புதிதாய் எங்களுடன் இணைந்து நண்பர்களான வாசிம், சிவா(சிவக்குமார்), மகேஷ், S.ராஜேஷ், ரஹமத்துல்லா, ஹூம் நினைத்தாலே Nostalgic feel என்னை எழுத விடாமல் தடுக்கிறது. சரி, அதை விடுங்கள். இன்னொரு முறை தொடரும் போட்டு விடுவேனோ என்று எனக்கே அச்சமாக இருக்கிறது.

மீண்டும் யாருமே எதிர்பாராத வண்ணம் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்று, நான்கு ஆண்டுகள் மின்னணுப்பொறியியல் முடித்து, வேலையில் சேர்ந்து பல ஊர்கள் சுற்றி, இன்று ஓரளவு நண்பர்களாலும் உறவினர்களாலும் மதிக்கப் படுகிறேனென்றால், அதற்கு என் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம்.

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மேல் என் மதிப்பு உயர்ந்தது அந்த இரண்டு ஆண்டுகளில்தான். கெமிஸ்ட்ரி - MS என்கிற M.சுப்ரமணியன் சார், ஃபிஸிக்ஸ் முருகேசன் சார், பயாலஜி முத்துக்குமார் சாரும், நளாயினி மேடமும் என இவர்கள் அனைவருமே அந்தத் துறையில் கோவை மாவட்டத்தின் மூத்த ஆசிரியர்கள். பல வெற்றுக் கற்களையும் விலையுயர்ந்த சிற்பங்களாய் மாற்றிய தெய்வங்கள்.

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியுடன் தொடர்பதிவுகளின் விதிப்படி, பள்ளி நினைவுகளைத் தொடர இருவரை அழைக்கிறேன். நேரமிருப்பின் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1. கதிர் அண்ணன் - இவரின் மௌனங்கள் கசியும் நேரங்களில் எல்லாம் மனம் பாரமாய் பல மணித்துளிகள் செயலற்று இருந்திருக்கிறேன்.

2. ப்ரபாகர் - எளிமையான, அருமையான நடையுடன் கூடிய இடுகைகளுக்கு சொந்தக்காரர். ஒவ்வொன்றும் மறந்து போன பழைய ஊர் நினைவுகளைக் கிளறிக் கொண்டே உள்ளன.

Friday, July 17, 2009

அண்ணா சாலையில் அம்மணமாய் - பதிவுலகம்

மூன்று நாட்களாய் ஒருவன் அண்ணா சாலையில் அம்மணமாய் ஓடிக்கொண்டிருக்கிறான். செல்லும் வழியெல்லாம் எதிர்படுவோரின் மீது சேற்றையும் வாரி இறைக்கின்றான். அனைத்து ஊடகங்களிலும் அவனைப் பற்றித்தான் பேச்சு, ஒரே நாளில் உலகப் பிரபலமாகிறான். நோக்கம் நிறைவேறியபின்,

"நான் துணியில்லாமலா ஓடினேன்? அய்யோ எனக்குத் தெரியவில்லையே, எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்" என்று பேட்டி கொடுக்கிறான்.

அனானி, அதர் ஆப்ஷனை எடுக்கச் சொல்லி இரண்டு நாட்களாய் எல்லோரும் அவரின் இடுகைகளில் கதறுகின்றனர். இன்று காலையில் எதுவுமே தெரியாதவர் போல "நண்பர் நர்சிம்முக்கு ஒரு அவசர கடிதம்" என்று எழுதி, நீக்கி விட்டேன் என்கிறார். அனானிப் பின்னூட்டமிடும் ஆப்ஷனை மட்டும்தான் நீக்கியுள்ளார். ஆனால் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அனானிகள் எழுதிய ஆபாசப் பின்னூட்டங்கள் நீக்கப்படவில்லை. மாறாக அதே இடுகையில் அதனைக் கோடிட்டுக் காட்டுகிறார். யாரைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை, மாய்ந்து மாய்ந்து ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் இடுகை எழுதத் தெரிகிறது, அதில் விழும் பின்னூடங்களை முதல் பக்கத்திலேயே ஓட்டிவிடத் தெரிகிறது, ஆனால் அனானி பற்றித் தெரியாது என்கிறார். வலைப்பதிவுகள் எழுதுவது எத்தனை பேருக்கு சோறு போடுகிறது என்று தெரியவில்லை ஆனால் 'Cheap Publicity'யை வேண்டி சேறு இறைப்போர்தான் இங்கு மிக அதிகம்.

சக்திவேல் - நான்சென்ஸ்

Thursday, July 16, 2009

அ ஆ.. மே நி பள்ளி நினைவுகள்



பயப்படாதீங்க, இது S.J. சூர்யா படிச்ச பள்ளிக்கூடம் இல்ல, நான் படிச்ச அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி - உடுமலைப்பேட்டை. வெறும் அமேநி (மேனியல்ல) பள்ளியாத்தான் ஒரு காலத்துல இருந்தது. ஆனா என்னோட துரதிர்ஷ்டம் பாருங்க, நான் அங்க போயி ஆறாப்பு சேந்த உடனே புள்ளைங்களுக்குத் தனியா ஒரு அபெமேநி பள்ளிய எங்கூருல ஆரம்பிச்சுட்டாங்க. அது ஒண்ணுதான் கொற, மத்தபடி வாழ்க்கைக்கு? தேவையான எல்லா விஷயத்தயும் அங்கதான் கத்துகிட்டேன். அது சரி, அது என்ன மாதிரியான வாழ்க்கைக் கல்வின்னு பாக்கறதுக்கு முன்னாடி அஞ்சாவது வரைக்கும் என்ன கிழிச்சோம்னு பாப்போமா?

ஒழுங்கா பால்வாடிக்குப் போயி பக்கத்துல உக்காந்துட்டு இருந்த பய்யனுங்களயும் புள்ளைங்களயும் கிள்ளி வெச்சு, பொராண்டிவுட்டு வாராவாரம் குடுக்கற பல்பொடி, அப்பப்போ குடுக்கற எம்ஜியாரு செருப்புன்னு வாங்கிட்டு பயங்கர சந்தோஷமா வாழ்க்கை போயிட்டு இருந்தப்போ எங்கம்மாவுக்கு திடீருன்னு என்னய இங்கிலீசு மீடியத்துல சேக்கோணும்னு ஆச வந்துருச்சு. பால்வாடியில கூடப் படிச்சவனெல்லாம் நேரா ஒண்ணாப்பு போயிட்டானுக, ஆனா என்னய மட்டும் நாலரை வயசுல கொண்டு போயி குறிச்சிக்கோட்டை RVG ஸ்கூல்ல 'எல்கேஜி'ல சேத்து விட்டாங்க.



"பைய்யன் மாடு மாதிரி வளந்துட்டானே, மத்த கொழந்தைங்க எல்லாம் பயந்துருமே" - ஹெட் மிஸ்சு.

"அப்படின்னா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டார்டுல சேத்துக்ககோங்க" - இது எங்கப்பா.

"ம்ஹூம் ABCD தெரியாதவனெல்லாம் எல்கேஜி படிக்கத்தான் லாயக்கு"ன்னு என்னோட அப்பாவியான மூஞ்சியப் பாத்து போனாப் போகுதுன்னு லாஸ்டு பென்ச்சுல ஒரு எடத்த ஒதுக்குனாங்க. அங்கதான் உக்காந்துட்டு இருந்தான் கண்ணன்.



வூட்ல இருந்து ஸ்கூலுக்குப் போக வர பஸ்ஸுக்கு 40+40 = 80 காசு. எங்கம்மா குடுக்கற ஒர்ருபாயில மிச்சமாகுற இருவது காசுக்கு எலந்த வட, எலந்தப்பழம், மாங்கா ஊறுகாயத் தவிர வேற எதுவும் கெடைக்காது. ஆனா கண்ணனவுங்க வூட்டுல அவனுக்கு தெனமும் ரெண்டு ரூவா குடுப்பாங்க. மிச்சக் காசுக்கு அவன் தினமும் கோன் கேக், சாக்லெட்னு வாங்கித் திம்பான். அப்பிடி ஒரு நாள் எலந்த வடய தின்னுகிட்டே அவன 'பே'ன்னு பாத்தேன்.

"என்றா, உனக்கும் கோன் கேக் வேணுமா?"

"ஆமா"

"செரி, இன்னைலருந்து ஒரு நாளு நீ எனக்கு வாங்கித்தா, அடுத்த நாளு நான் உனக்கு வாங்கித் தருவேன்னு" சொன்னான். நான் இருவது காசுக்கு கை நெறயக் கெடைக்கற எலந்தப் பழத்துல பாதி அவனுக்குத் தருவேன். அவன், அவனோட அந்த ஒர்ருவாய சேத்து வெச்சு அடுத்த நாளு ரெண்டு கோன் கேக்கா வாங்கி எனக்கும் ஒண்ணு தருவான். அன்னயில இருந்து கண்ணந்தான் எனக்கு எல்லாத்துலயும் கூட்டாளி. அஞ்சாப்பு வரைக்கும் நாங்க பண்ணாத சேட்டையில்ல.

முன்னாடி இருக்கற பசங்க மேல சாக்பீஸ் வீசறது, ஜோப்புக்குள்ள நெடக்கள்ளயப் போட்டுட்டு வந்து க்ளாஸ் நடக்கும்போது திங்கறது, முன்னாடி உக்காந்துருக்குற புள்ளைகளோட ஜடையக் கட்டி வெக்கறது, மிஸ்சு அந்தப் பக்கம் திரும்பும்போது சத்தமாப் புருக்கு விடறது, ஊரு வேலில இருக்கற ஒடக்காய எல்லாம் தேடிப்போயிக் கொன்னது, நுங்கு வண்டி செஞ்சு அதுக்கு ரேஸ் வெச்சது, வாய்க்கால்ல நீச்சல் பழகறேன்னு வூட்டுக்குத் தெரியாமப் போயி, தண்ணிக்குள்ள இருந்த கண்ணாடி காலக் கிழிச்சு ரத்தம் சொட்டச் சொட்ட அழுதுட்டே வந்தது, அதப்பாத்து எங்கம்மா எங்கூடச் சேந்து அழுகாம எக்ஸ்ட்ராவா ரெண்டு மொத்து மொத்துனது, மாங்காய் அடிக்கலாம்னு நான் வீசுன கல்லு மரத்துல பட்டு கண்ணன் மண்டையிலயே விழுந்தது, இனிமே அவங்கூடச் சேருவயா? சேருவயான்ன்னு அவுங்கம்மா ரோட்டுல வெச்சு அவன அடிச்சது, அத மறந்துட்டு அடுத்த நாளே அவன் எனக்கு கோன் கேக் வாங்கிக் குடுத்தது, 'மச' பந்து வெளயாடும்போது கண்ணன் வீசுன பந்து எம்மூஞ்சியில பட்டு மூஞ்சி பன்னு மாதிரி வீங்குனது, இந்த தடவ, எங்கம்மா அவங்கூடச் சேருவையா?, சேருவையான்னு ரோட்டுல வெச்சு என்னய அடிச்சது,



அய்யய்யோ, 'பசங்க' படத்து வில்லங்களெல்லாம் சும்மா, எப்பிடித்தான் இந்தப் பைய்யன வளக்கறீங்களோன்னு ரெண்டு பேர் வீட்டுலயும் தெனமும் யாராவது புகார் சொல்லீட்டுப் போவாங்க. கண்ணன் அப்பவே பெரிய அரசியல்வாதி, ஸ்கூல்ல இருக்கற ரெண்டு மூணு மிஸ்சுங்க அவனுக்கு அக்கா, அத்தை மொறை வேணும். ஏதாவது பிரச்சினைன்னா 'அக்கா'ன்னு அன்போட கூப்புட்டு அவுங்க மனச எளக்கீருவான்.என்ன ஆட்டம் போட்டாலும் நான் நாலாவது வரைக்கும் க்ளாஸ்ல மொதல் ரேங்க் (சத்தியமா உண்மைங்க) எடுப்பேன். அதுனால, ஸ்கூல்ல நாங்க ரெண்டு பேரும் எதுக்காகவும் கவலப்பட்டதில்ல. அஞ்சாவதுல 'அவ' வந்து சேந்தப்புறம்தான், ரெண்டாவது எடத்துக்குப் போனேன், அதுக்கப்புறம் காலேஜ் முடிக்கற வரைக்கும் 'கழுதை கெட்டாக் குட்டிச் செவுருங்கற' மாதிரி மொத ரேங்க நெனச்சுக் கூட பாக்க முடியல.


அஞ்சாவது கடைசி நாளன்னைக்கி ஃபர்ஸ்ட்டு பீரியட் மிஸ்சு வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாச்சு. அந்த கேப்புல எங்க எதிரி எவனோ என் சட்டையிலும் கண்ணன் சட்டையிலும் மட்டும் முதுகுல பேனா இங்கால 'X' மார்க் போட்டுருந்தான். விடுவமா நாங்க, ரெனால்ட்ஸ் 045 ரீபிளோட ஊக்க மட்டும் எடுத்துட்டு வாயில வெச்சு க்ளாசுல இருந்த எல்லாப் பயலுகளயும் தொரத்தி தொரத்தி அவங்க சட்டைல ஊதி நாறடிச்சோம். மிஸ்ஸு உள்ள நொழயறப்போ க்ளாஸே போர்க்களமா இருக்கு. கையும் களவுமாப் புடிச்சு எங்க ரெண்டு பேர மட்டும் கடைசி நாளன்ன்னைக்கும் கூட, கருணையே இல்லாம வெளில முட்டிங்கால் போட வெச்சாங்க. இப்பிடி இணைபிரியாம எல்லாரயும் மெரட்டீட்டு ரவுடிகளா இருந்த எங்களப் பிரிச்சு என்னய மட்டும் டவுன் பள்ளிக்கூடத்துல் கொண்டு போய் ஆறாவது வகுப்புல சேர்த்தாங்க. அதுதான் நீங்க மேல பார்த்த அ(ஆ)மேநி பள்ளி.


எழுத நேரமில்லாததால ஒரு சின்ன இடைவேளக்குப் பின்னாடி அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போலாமா?

ஒரு வரலாற்றுக் குறிப்பு :- இந்த வருஷம் கண்ணனோட பையன் இங்கிலீசுப் பால்வாடியான ப்ரீ-கேஜில சேந்து எல்லாப் பயலுகளயும் கிள்ளிப் பெடலெடுத்துட்டுருக்கானாம். ஹூம், புலிக்குப் பொறந்தது பூனையாவுமா என்ன?

குறிப்பு 2 :- இது ஒரு தொடர் பதிவு. எழுத அழைப்பு விடுத்து என்னுள் உறங்கிக் கொண்டிருந்த நினைவுகளை எழுப்பிய நண்பர் வினோத்துக்கும் சுந்தரராமன் சாருக்கும் நன்றிகள் பல.

Monday, July 13, 2009

செம்ம சாணி மச்சி..:(



கடந்த வாரம் முழுவதும் சரமாரியாகச் சுழன்றடித்து சாணி அள்ளியதில் தமிழ்ப் பதிவுலகில் நடந்த பல பூகம்பங்களில் பங்கெடுக்க முடியவில்லை. சரி நம் பங்குக்கு வலையுலக விஜய் மல்லையா, காக்டெயில் காண்டா மிருகம், நண்பர், பதிவர் ஜோவின் மண்டையை உடைத்து அவரைப் 'பலமுக மன்னன் ஜோ'வாக்கலாம் என்றால், அவரும் மயிரிழையில் தப்பி விட்டார். அந்த மகிழ்ச்சியிலோ என்னவோ துபாய் செல்லவிருந்த என்னையும் தண்ணியனாக்கி, அவரது காரிலேயே சென்னை விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினார்.

'Boarding Card' போடும் இடத்தில் இருந்த ஆபீசர் ஒரு 'fresher' என்று நினைக்கிறேன், தடவு தடவு என்று தடவி பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க வைத்துக் கொன்றார்.

"Sorry Sir, some problem in the system. This is your boarding pass. You can proceed to gate number 6 after immigration"

ஆறாம் எண் கேட்டின் எதிரே இருந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தேன். மூன்று இரவுகளாய் சரியான உறக்கமில்லாதலால், உடல் அசதியும் எரிச்சலுமாய் கண்கள் சற்றே அயர்ந்தன.

நீருக்குப் பதிலாக எருமை மற்றும் மாட்டுச் சாணம் நிரம்பியவொரு குளத்தில் ஏகாந்தமாய் நீந்திக் கொண்டிருந்தபோது, தூரத்தில் ஊறிக்கொண்டிருந்த இரண்டு எருமைகள் மெதுவாக என் அருகில் வந்து வளைந்த கொம்புகளால் ஓங்கி முட்டின. அச்சத்தில் வியர்த்து விறுவிறுத்து விழித்துப் பார்த்தேன்.

"இங்க இருக்காரு" என்று இரண்டு விமான நிலையப் பணியாளர்கள் என்னைத் தட்டி எழுப்பியபடியே வயர்லெஸ்ஸில் யாருக்கோ தகவல் தந்து கொண்டிருந்தனர்.

பேய் முழி முழித்து "What?" என்றேன்.

"Sir, your flight is waiting for you" என்றனர். சற்றே சுய நினைவிற்கு வந்தவுடன்தான் தெரிந்தது, நிலையத்திலிருந்த அனைத்து ஒலி பெருக்கிகளிலும் என் பெயரைப் பல மொழிகளில் நாசப்படுத்திக் கொண்டிருந்தனர்.

மெதுவாக எழுந்து 'Departure gate 6'ஐ நோக்கி நடந்தேன். சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான கண்களும் என் மேலே தான். ஒரே நாளில் பிரபலமாகிவிட்ட பதிவர் போன்ற பெருமிதத்தோடு விமானத்தினுள் நுழைந்தேன். பயணிகள் அனைவரும் ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே அருகிலிருந்தவர்களிடம் என்னைப் பற்றி வசை மாரி பொழிந்து கொண்டிருந்தனர். வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே இருக்கையைத் தேடிச் சென்றால், அங்கே ஒருவர் extra பத்து திர்ஹாம்கள் கொடுத்து நான் முன்பதிவு செய்திருந்த என்னுடைய ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

"Sir, that's my seat"

"இல்ல இதுதான் உங்க சீட்" என்று நடு இருக்கையைக் காண்பித்தார். ஏற்கனவே இருந்த எரிச்சலில் மேலும் சூடானேன்.

"யோவ், என்னய்யா நெனச்சுட்டிருக்கீங்க? உங்க சீட் நம்பர் என்னன்னு சரியாப் பாருங்க" என்று போட்ட கூப்பாட்டில், மீண்டும் எல்லோரும் என்னை நோக்க ஆரம்பித்தனர்.

"Sir, the flight is already delayed by 15 minutes because of you" என்று என் புகழ் பரப்பிக்கொண்டே ஓடி வந்தாள் விமானப் பணிப்பெண்.

என்னுடைய டிக்கெட்டை வாங்கிப்பார்த்து, அந்த மனிதரிடம் எடுத்து விளக்கி மாற்றி உட்கார வைக்க மேலும் பத்து நிமிடம் செலவானது.

"வர்றதே லேட்டு, இதுல இவன் சீட்டாம்" என்று முனகியபடியே கொலைவெறியோடு என்னைப் பார்த்தார் அவர்.

தூக்கம் சுத்தமாய்த் தொலைந்து, பயணித்த நான்கு மணி நேரமும் நரகம் போலக் கழிந்தது. என்னையும் மீறிக் கண்கள் அயர்ந்த போது ஷார்ஜாவில் தரையிறங்கும் அறிவிப்போடு விமானம் குலுங்கி, வயிற்றைக் கலக்கி என்னை மீண்டும் தட்டி எழுப்பியது. சீக்கிரம் வீட்டுக்குப் போகவேண்டும் என்று எல்லோரையும் முந்திக் கொண்டு ஓடினேன்.

"இந்த அவசரத்த நேத்து நைட்டு காமிக்கலாமல்ல" என்று அருகிலிருந்தவர் மற்றொருவரிடம் சொன்னது காதில் விழுந்தது.

ஆத்திரத்தையும் மூத்திரத்தையும் அடக்கிக்கொண்டே ஓடிச்சென்று குடியேற்றச் சோதனையை முதல் ஆளாக முடித்தேன்.பின்புறம் வரிசையில் காத்துக் கொண்டிருந்த சக பயணிகள் அனைவரின் கண்களும் இப்போது பொறாமையில் மீண்டும் என் மீதே மொய்த்தன.

அருகிலிருந்த Rest Roomல் டவுன்லோட் செய்துவிட்டு என் மூட்டையை எடுக்க ஓடினேன். அந்தோ! அனைவரின் சாபமும் பலித்ததோ என்னவோ, என்னோடு மற்றொருவரின் Luggage தவிர எல்லோருடையதும் வந்தது. காலை ஐந்தரை மணியாதலால், Baggage Complaints கவுண்டரில் ஒரு பயலையும் காணவில்லை. எல்லோரும் காலைக்கடன் கழிக்கச் சென்று விட்டனர் போலும்.

உடலும் மனமும் மிகவும் சோர்ந்து போய், தலையில் கைவைத்துக் கொண்டு கவுண்டர் எதிரிலேயே தரையில் உட்கார்ந்து விட்டேன். ஏதோ போராட்டம் செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒரு விமான நிலைய அலுவலர் "Yalla Habibi, what happened?" என்று ஓடோடி வந்தார். அவரிடம் நிலைமையை விளக்கிக் கூற, அவர் வேறு யார் யாரையோ அழைத்து என் மூட்டையைக் கொண்டு வந்து சேர்த்தார்.

"தெய்வமே.. தெய்ய்ய்வமே.. நன்றி சொல்வேன் தெய்ய்வமே.." என்று 'நந்தா' படத்தில் 'லொடுக்கு' பாண்டி பாடுவது போல் அவருக்கு நன்றி கூறி ஷார்ஜா விமான நிலையத்தை விட்டு ஏழு மணியளவில் வெளியே வந்த போதுதான் உறைத்தது, அன்று ஞாயிற்றுக்கிழமை என்று. விதி வலியது என்பார்களே அது இதுதான் போலும். இருபது நிமிடங்களில் வீட்டிலிருக்க வேண்டிய நான், இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரித்துப்போட்ட தேங்காய் நார் போல வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் நுழையும் முன்னரே அலைபேசி அலற ஆரம்பித்தது.

அலுவலகத்திலிருந்து Receptionist - "You are not coming to office today?"

"No, I'm not feeling well" என்று செல்லை அணைத்து விட்டுப் படுக்கையில் விழுந்தேன். மீண்டும் அதே சாணிக்குளம், அதே ஏகாந்தமான நீச்சல், ஆனால் எந்த எருமைகளும் இன்றி நான் மட்டும் தனியே நீந்தத் துவங்கினேன்.


Wednesday, July 8, 2009

ஒரு குறும்பயணம்..


முதன்முதலில் எப்பொழுது, எங்கே பயணிக்கத் துவங்கினேன் என்று நினைவில்லை. ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல் வீட்டை விட்டு எங்காவது பயணிக்கப் போகிறோம் என்றால் மனதில் ஒரு பேருவகை குடிகொண்டு விடும். சிறுவயதில் பேருந்தைக் கண்டவுடன் அம்மாவின் கையை விடுத்து ஓடிச்சென்று படியில் உட்கார்ந்து ஏறி நின்று 'சீக்கிரம் வாம்மா' என்று கத்தியது இன்னும் நினைவில் இருக்கிறது. மாலை பள்ளி முடிந்ததும் அண்ணாச்சி கடையிலிருந்து எடுத்த சணல் கயிற்றின் இரு முனைகளையும் முடிச்சிட்டு ஒரு பேருந்து செய்வேன். அதில் நண்பர்களுடன் நுழைந்து ஓடும்போது நான்தான் ஓட்டுனர், நடத்துனர் எல்லாம். மாரியம்மன் கோவில் திருவிழாவில் அடம்பிடித்து வாங்கிய விசிலை ஊதிக்கொண்டே கால்கள் ஓயும் வரை எங்கள் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்.


நகருக்குப் பேருந்தில் செல்லும்போது எப்பொழுதேனும் 'இரயில் கேட்' மூடியிருந்தால் பயணிகள் அனைவரும் 'போச்சுடா, கேட் போட்டுட்டான்' என்று சலித்துக்கொள்ள, நானோ 'ஐ, கேட் போட்டுட்டாங்க' என்று அப்பாவின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு கீழே இறங்கி, இரயிலின் ஒவ்வொரு பெட்டிகள் கடப்பதையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பேன்.




"அப்பா, நம்முளும் ரயில்ல போலாம்ப்பா"


"கண்டிப்பாப் போலாஞ்சாமி, இப்பொ பஸ்ஸுக்குள்ள ஏறு"


உறவினர்கள் அனைவரும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குளேயே இருந்ததாலும், பள்ளி, கல்லூரி என அனைத்தும் அருகிலிருந்த நகரங்களிலேயே பயின்றதாலும் இரயிலில் செல்லும் வாய்ப்பு கல்லூரி முடியும் வரை கிடைக்கவே இல்லை. ஆனால் தினமும் கல்லூரிக்குச் சென்ற பேருந்துப் பயண அனுபவங்களை வைத்து ஒரு காவியமே எழுதலாம்.


படிப்பு முடிந்து சென்னையில் பணியில் சேருவதற்கு, கோவையிலிருந்து கிளம்பியதுதான் முதல் இரயில் பயணம். கலங்கிய கண்களுடன் கை அசைத்த அம்மாவின் முகம், வீட்டை, உறவினர்களை, நண்பர்களைப் பிரிந்து நீண்ட தூரம் செல்லும் துக்கம், ஏக்கம், எதிர்காலம் குறித்த அச்சம் என எல்லாம் சேர்ந்து அந்த முதல் பயணத்தை மிகுந்த வெறுப்புக்குள்ளாக்கின.




ஆனால் பணி நிமித்தமாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நகரங்களை சுற்றத் துவங்கியதும் என்னுள்ளிருந்த அந்தச் சிறுவன் மீண்டும் பேருவகையோடு பயணிக்கத் துவங்கினான். விதவிதமான உணர்வுகள், மனிதர்கள், வாழ்க்கைகள் என ஒவ்வொரு பயணத்திலும் ஒளிந்திருந்த ஆச்சரியங்களும் அனுபவங்களும் ஏராளம். இதோ இன்றும் ஒரு குறும்பயணம் துவங்குகிறது. துபை - சென்னை - திருச்சி - தஞ்சாவூர் - பழனி - உடுமலை - கோவை - சென்னை - ஷார்ஜா - துபை என மூன்றே நாட்களில் சென்று திரும்ப வேண்டியதை எண்ணிச் சற்றே மன அயர்ச்சி ஏற்பட்டாலும், காதலியைக் காணப்போகும் ஆவல் அதை மறக்கச் செய்கிறது. ஆம், நான் பயணங்களின் காதலன்.

Friday, July 3, 2009

நண்பர்கள் தேநீர் விடுதி


இருபத்து நான்கு மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த அந்த முச்சந்தியில் முளைத்த முதல் டீக்கடை 'நண்பர்கள் தேநீர் விடுதி'தான். எங்கள் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளியிருந்த அந்தக்கடையின் முதலாளி நடராஜனுக்குத் தன் கடையை விட தமிழின் மேல் அவ்வளவு ஆர்வம். தினமும் காலை ஐந்து மணிக்கு டவுனிலிருந்து முதலில் வரும் 11ம் நம்பர் பஸ்ஸில் அவர் கடைக்கு தினமணி, தினத்தந்தி, தினமலர், என்று மூன்று பேப்பர்களும் வந்து விடும். கடைக்கு வரும் யாரேனும் அவரிடம்

"என்னங்கண்ணா தினத்தந்தி மட்டும் போதுங்களே" என்றால்,

"டேளேய் நானென்ன போண்டா மடிக்கறதுக்கு மட்டும்தான் பேப்பர் வாங்கறன்னு நெனச்சீங்களா?" என்று சற்றே சூடாவார்.

வாடிக்கையாளர்களை கோபிக்கக் கூடாதென்று உடனே "அதொண்ணுமில்ல கண்ணு, நம்முளுக்கு ஒரு சேதிய ஒருத்தன்கிட்ட கேக்கரதவிட நாலு பேர்த்துகிட்ட கேட்டதான் அதோட உண்மெ நெலவரந்தெரியும் அதுக்காகத்தான்" என்று சூடான டீயை நீட்டிக்கொண்டே சொல்வார்.

தினமும் மாலையில் பள்ளி முடிந்ததும் நேராக அவர் கடைக்குத்தான் ஓடுவேன். தினத்தந்தியில் சிந்துபாத் இன்று லைலாவைக் கண்டுபிடித்து விடுவானா என்று தெரிந்து கொண்டு ஒவ்வொரு பேப்பராகப் புரட்டிக்கொண்டிருப்பேன். எனக்குப் பிடிக்கும் என்பதால் வெள்ளிக்கிழமையானால் சிறுவர் மலரையும் தங்க மலரையும் அவராகவே வீட்டில் வந்து அப்பாவிடம் கொடுத்துவிட்டுச் செல்வார்.

அந்த ஊரில் முதல் முதலில் டேப் ரெக்கார்டரில் பாட்டுப் போட ஆரம்பித்ததும் அவர் கடையில்தான். தினமும் காலை நாலரை மணிக்கெல்லாம் மருதகாசியின் இந்தப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில்

"சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே"

என்று ஒலிக்கத் துவங்கி துவங்கி இரவு பத்தரை மணி வரை சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகனாதன், TMS, P.சுசீலா, P.B ஸ்ரீனிவாஸ், ஜிக்கி, என்று பல பொக்கிஷங்களின் குரலில் பாடிக்கொண்டேயிருக்கும். ஆனால் பரீட்சை சமயங்களில் மட்டும் அதிகாலையில் அவர் கடையில் பாட்டுச்சத்தம் கேட்காது. அப்பா அவரிடம் சொல்லியிருப்பார் போலும்.

மேலே மூணாறு மலையிலிருந்து மரமேற்றி வரும் பெரும்பாலான லாரி டிரைவர்களின் இரவு உணவு, நண்பர்கள் தேனீர் விடுதியின் புரோட்டாவும் சால்னாவும்தான். எப்போதேனும் எனக்கும் புரோட்டா தின்ன ஆசை வந்தால் சால்னா வாங்க எவர் சில்வர் டம்ளருடன் அவர் கடையில் போய்

"அண்ணா ரெண்டு புரோட்டா" என்று பெரிய மனிதன் போல் கூவுவேன்.

இரண்டு ரூபாயை நீட்டினால் "காசு வேணாண்டா" என்பார்.

"அப்பா திட்டுவாருங்கண்ணா", "அப்படியா, சரி ஒருரூவா போதும்" என்று பாதிக்காசுதான் வாங்குவார்.

ஆறாம் வகுப்புப் படிக்க டவுனுக்கு சென்றதிலிருந்து, பள்ளிக்கு அருகிலேயே பொது நூலகத்தில் எல்லா பேப்பரையும் படித்து விடுவதால் அவர் கடைக்கு செல்வது வெகுவாகக் குறைந்து விட்டது. பின் பள்ளியிலிருந்து கல்லூரி, நண்பர்கள் என்று வாழ்க்கை வேறு கோணத்தில் பயணிக்க, நடராஜன் என் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியிருந்தார். எப்பொழுதாவது எதிரே பார்த்தால்,

"நல்லாப் படிக்கறயா தம்பி?"

"படிக்கறங்கண்ணா, கடை எப்பிடிப் போகுதுங்க?"

"எங்கெ தம்பி முன்ன மாதிரி எல்லாம் இல்ல, ஊருக்குள்ள பத்து கடக்கி மேல வந்துருச்சு. பத்தாததுக்கு கேரளாக்காரன் வேற பேக்கரியோட டீக்கட வெச்சுருக்கான். எல்லாப் பயலுவளும் அங்க தான் போறானுக" என்று சலித்துக் கொண்டே சொல்வார்.

பிற்பாடு வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு அலைந்ததில் அவரை சுத்தமாக மறந்து விட்டிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் பேய் மழையில் மும்பை நகரத்தோடு நானும் முடங்கியிருந்த ஒரு இரவில் அப்பா அழைத்தார்,

"என்ன கண்ணு அங்க மழைல ஒண்ணும் பிரச்சன இல்லயே?"

"இல்லப்பா நாங்கெல்லாம் வீட்டுக்குள்ளாரதான் இருக்கோம் வெளிய எங்கயும் போகல."

"சரி சாமி பாத்து எல்லாரும் சூதானமா இருந்துக்கோங்க, அப்புறம் நம்ம டீக்கட நடராசு இன்னக்கி காலைல ஒடம்பு முடியாம போய்ச் சேந்துட்டாரு. ஆஸ்பத்திரியில இருக்கும்போது போய் பாத்தப்போ உன்னய கேட்டாரு. முடிஞ்சா ஊருக்கு வரும்போது அவுங்க வூட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துரு."

"ஓ..."

மேலே என்ன பேசினார் என்று எதுவும் காதில் விழவில்லை.

"வெச்சுருட்டுமா?"

"சரிங்கப்பா"

சீர்காழியின் அந்த கணீர்க்குரல் காதுகளுக்குள் திரும்பத் திரும்ப 'சமரசம் உலாவும் இடமே' என்று ஒலிக்க, வெறுமையான மனத்தில் ஏனோ அந்த நள்ளிரவிலும் புரோட்டா சாப்பிட வேண்டுமெனத் தோன்றியது.

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...