சில தினங்களுக்கு பதிவுலகிலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என்று எண்ணிய வேளையில் நண்பர்
செந்தில்வேலன் தமிழகத்தின் பிடித்த, பிடிக்காத தொடர்பதிவுக்கு அழைத்தது மீதமிருந்ததால் அந்தக் கடமையையும் முடித்து விடுகிறேன்.
ஒரு துறையில் ஒரே ஒருவரைத்தான் பிடிக்கும்/பிடிக்காது என்று தேர்வு செய்ய முடியவில்லை, என்வே தொடரின் விதியை மீறி சிலவற்றில் இரண்டு மூன்று என உண்டு.
1) எழுத்தாளர்கள்
பிடித்தவர் - ஜெயகாந்தன். விளிம்பு நிலை மனிதர்களைக் கண்டவுடன் எனக்கு எழுந்த வெறுப்பை கருணையாக மாற்றியது சிங்கத்தின் எழுத்துக்கள்தான். பள்ளி இறுதி மட்டும் கல்லூரி நாட்களிலேயே தீவிரமாக வாசித்திருந்தால் ஒருவேளை என் வாழ்வு தடம் மாறியிருக்கும். ஆனால் அரசியல்வாதிகளின் மீதான வெறுப்பையும் தாண்டி இன்னமும் கொஞ்சமாவது சமூக அக்கறை உள்ளத்தில் இருக்கிறதென்றால் அதற்கு முழுக்காரணம் அவர்தான்.
பிடிக்காதவர் - ஜெயமோகன். என்ன காரணமென்று தெரியவில்லை, ஜெமோவின் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு. கல்லூரி நாட்களில் வாங்கிய 'சங்க சித்திரங்கள்'தான் நான் வாசித்த அவரின் ஒரே புத்தகம் ஆனால் பல முறை முயன்றும் சில பக்கங்களுக்கு மேல் புரட்ட முடியாமல் அப்படியே அட்டாலியில் வீசி விட்டேன். விஷ்ணுபுரத்தை பலரும் சிலாகித்தாலும் மீண்டும் ஒருமுறை அவரை வாசிக்க நேரமும் பொறுமையும் இல்லை.
2) நடிகர்கள்
பிடித்தவர் - அஜீத்குமார். இவர் என்ன நடிக்கிறார் என்று கேட்காதீர்கள், நிஜ வாழ்விலும் நடிக்கத் தெரியாதவர். இவரின் உதவியால் மேலே வந்த இயக்குனர்கள், வெளியே தெரியாமல் செய்யும் பல உதவிகள் என அவரின் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இவ்வளவு தோல்விப்படங்கள் கொடுத்த எந்த நடிகரும் இவர்போல் திரையுலகில் நிலைத்ததில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் துவளாத இவரின் தன்னம்பிக்கை பல நேரங்களில் எனக்கு உற்சாக டானிக்.
பிடிக்காதவர்கள் - காதல் படத்தில் விருச்சிககாந்த் திரைப்பட வாய்ப்பு கேட்கும்போது சொல்வார், "இல்ல சார், மொதல்ல ஹீரோ, அப்புறம் கொஞ்சம் அரசியல், அப்புறம் சி.எம், அப்புறம் டெல்லி". இதேபோல் இன்று நடிக்க ஆரம்பிக்கும் முன்னரே கோட்டைக்கு ஆசைப்படும் தமிழ் சினிமாவின் தளபதிகள் எவரையும் பிடிக்காது.
3) மாவட்ட ஆட்சியர்
பிடித்தவர் - ககன்தீப்சிங் பேடி. "இந்த மாநிலத்தில் பணியில் இணைந்தபோதே நானும் தமிழனாகி விட்டேன்" என்றவர். சுனாமியின் போது கடலூர் மாவட்டத்தில் இவர் ஆற்றிய பணியை யாராலும் மறக்க முடியாது என நினைக்கிறேன். ராதாகிருஷ்ணனையும் பிடிக்கும் என்றாலும் மீடியா வெளிச்சம் எப்போதும் அவர் மீதே இருந்தது. இதே போல் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு, சுப்ரியா சாஹூ(முன்னாள் உதகை ஆட்சியர், தற்போது செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குனர் - டெல்லி) ஆகியோரையும் பிடிக்கும்.
பிடிக்காதவர் - கலைவாணன். ஒரு காலத்தில் எங்கள் கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தார். பல ஊழல் வழக்குகளில் சிக்கி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
4) காவல்துறை அதிகாரி
பிடித்தவர் - சைலேந்திர பாபு. எண்பதுகளின் இறுதியில் வட மாவட்ட கலவரங்களின் போதும், வட சென்னை ஆணையராக இருந்த போதும் இவர் ஆற்றிய சேவைகளை அந்த துறை நண்பர்கள் கூறிய போது வியந்தேன். அதேபோல் அந்தப் பகுதி மக்களும் அவரை மறக்க மாட்டர்கள் என எண்ணுகிறேன். ஆட்சி மாற்றத்தால் தற்போது புகளூர் காகித ஆலை புலனாய்வுத்துறை ஐஜியாக டம்மியாக்கப் பட்டுவிட்டாலும் பல சிவில் சர்வீஸ் மாணவர்களின் ரோல் மாடல் இவர்தான். இவரல்லாமல் விஜயகுமார், ஜாங்கிட், மற்றும் நேர்மையான அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளையும் பிடிக்கும்
பிடிக்காதவர் - வால்டர் தேவாரம்.
5) கல்வித் தந்தைகள்
பிடித்தவர்கள் - பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மற்றும் பூ.சா. கோவிந்தசாமி நாயுடு அவர்களின் PSG குழுமம். பொறியியல் கல்வி என்றாலே கோவை மாவட்டம்தான் என்று பெயரெடுக்க இந்த இரு பெரியவர்கள்தான் காரணம். வெறும் கல்லூரிகளை மட்டும் திறக்காமல் ஒருங்கிணைந்த தொழிற்சாலைகளையும் நிறுவி வேலைவாய்ப்பையும் பெருக்கிய இந்த இரு பெரும் குழுமங்களால்தான் பல தடைகளையும் தாண்டி கோவை மாவட்டம் இன்னும் தாக்குப் பிடிக்கிறது.
பிடிக்காதவர்கள் - கல்வியை வியாபாரமாக்கிய ஜேப்பியார், எஸ் ஆர் எம் குழுமத்தின் பச்சமுத்து மற்றும் காளான்களாய் முளைத்துள்ள பல பொறியியல் கல்வித் தந்தைகளும்.
6) விஞ்ஞானிகள்
பிடித்தவர்கள் - முன்னாள் இந்திய அணுசக்தி கழகத் தலைவர், பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்த டாக்டர் ஆர். சிதம்பரம் மற்றும் தற்போதைய ப்ரம்மோஸ் செயல் திட்ட இயக்குனர் திரு. சிவதாணுப் பிள்ளை. அப்துல்கலாமுடன் இணைந்து தமிழரின் பெருமையை உலகறியச் செய்ததில் இந்த இருவருக்கும் பெரும் பங்கு உண்டு.
பிடிக்காதவர் - மயில்சாமி அண்ணாதுரை. எங்கள் ஊர்காரர்தான் என்றாலும் சற்றே மீடியா மோகம் பிடித்தவர் என்று தோன்றுகிறது.
7) அரசியல் தலைவர்கள்
பிடித்தவர்கள் - நெடுமாறன் ஐயா உள்பட ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் எல்லா தலைவர்களையும் மதிக்கிறேன. சம காலத்தில் அரசியலில் இறங்கியவர்கள் அனைவரும் பெரிய அளவில் செட்டிலாகிவிட இன்னமும் பொதுவாழ்வில் எளிமையை கடைபிடிக்கும் அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களையும் பிடிக்கும்.
பிடிக்காதவர்கள் - ஜெயலலிதா, ராமதாஸ்.
8) ஆன்மீகத் தலைவர்கள்
பொதுவாகவே இந்தக் கூட்டத்தை எனக்குப் பிடிக்காது. ஆனால் அவ்வப்போது செய்யும் பொதுத் தொண்டுகளால் மனதைக் கவர்ந்த தமிழர் Art of Living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மறைந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பிடிக்காதவர்கள் - பெரிய லிஸ்டே உண்டு, குறிப்பாக கல்கி சாமியார் மற்றும் மேல்மருவத்தூர்காரர்.
9) பத்திரிகையாளர்கள்
பிடித்தவர்கள் - நக்கீரன் ராஜகோபால், மாலன் மற்றும் பா. ராகவன்.
பிடிக்காதவர்கள் - ஹிந்து ராம் மற்றும் அந்துமணி. இவர்கள் இருவரையும் சில வருடங்கள் முன்பு வரை மிகவும் மதித்தேன். ஆனால் கடந்த காலங்களில் இவர்களின் மற்றொரு முகம் வெளியே தெரிய ஆரம்பித்தபோது உடைந்து போனேன். ஹூம், அறிவாளிகள் எல்லோருக்கும் மனிதாபிமானமும் இருக்கும் என்று எண்ணியது எவ்வளவு முட்டாள்தனம்.
10) ஊர் / மனிதர்கள்
பிடித்தது - உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கொங்கு நாட்டின் அனைத்து ஊர்களும். பசுமை நிறைந்த எங்கள் ஏரியா என்பதால் மட்டுமல்ல, கடும் உழைப்பாளிகளும், சக மனிதனை மதிக்கும் பண்பு நிறைந்தவர்களும் நிறையப் பேர் இருப்பதால்.
பிடிக்காதது - சென்னை. காரணம் மேலே சொன்னதுதான். அறிமுகமில்லாதவர்களை, வயதானவர்களைக் கூட ஒருமையில் அழைக்கும் பண்பு. ஒவ்வொரு வார்த்தைக்கும் 'ங்க' போட்டலும் பதில் 'இன்னா?' என்றுதான் பெரும்பாலும் வரும். தற்போது எங்கள் திருப்பூரும் சென்னைபோல் மாறிவருகிறது என கேட்கும் போது வேதனையாய் இருக்கிறது.
எனக்குத் தெரிந்த அனைத்துப் பதிவர்களையும் வேறு பலர் அழைத்து விட்டதால் நண்பர்
ஜோ ஆனந்த் மற்றும்
ஆரூரன் விசுவநாதன் ஆகிய இருவரை மட்டும் தொடர அழைக்கிறேன், ஏற்பார்கள என்ற நம்பிக்கையில்.
அவசியம் ஏற்பட்டால் ஒழிய இன்னும் சில தினங்களுக்கு பதிவெழுதும் உத்தேசமில்லை. அடுத்த வாரம் ஜோர்டான் பயணம் அதற்கடுத்த வாரம் இந்தியா என தொடர்ந்து எஞ்சியுள்ள பணிகள் மலைபோல் கண்முன் நிற்கின்றன, பார்ப்போம்.