"ஒரு வாரம் விடுப்பு வேண்டும் தாவூத், மணிலா செல்கிறேன்" அறையினுள் நுழைந்த மேரியின் கலங்கிய கண்களை நோக்கியதுமே எனக்குள்ளும் ஏதோ கலங்கியது.
"என்ன விஷயம்?"
"என் மூத்த மகள் நேற்று இரவு கத்தியால் மணிக்கட்டை கீறிக் கொண்டாளாம். மருத்துவமனையில் இருப்பதாய் அம்மா தொலைபேசினாள்"
"அவள் கல்லூரியில் பயில்கிறாளல்லவா? என்ன காரணமென்று தெரிந்ததா?"
"காதல் தோல்வியாம்..... இப்பொழுது மூன்று மாதம் வேறு" தொடர்ந்து உரையாட இயலாமல் வார்த்தைகள் வருத்தமாய் வெளிவந்தன.
"ஓ... காதல்.." பெருமூச்சுடன் மனமின்றி அவளுக்கு விடை கொடுத்தேன்.
அறையை விட்டு அவள் அகன்றதும் ஏதோ ஒரு வெறுமை உள்ளத்தில் படர்ந்தது.
---------------
மேரிக்கு நாற்பத்தைந்து வயதுதான் ஆகிறது. என்னை விட நான்கு வயது இளையவள். நிறுவனத்தின் பல முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்தல், வாடிக்கையாளர்களுடனான என்னுடைய சந்திப்புகளைத் திட்டமிடுதல் மற்றும் மனித வள மேம்பாட்டு துறையையும் இணைத்து கவனிக்க ஒரு அனுபவமுள்ள ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன்.
பெரும்பாலும் இந்தியர்கள் இருந்த என் அலுவலகத்தில் ஏனோ இந்தப் பணிக்கும் ஒரு இந்தியரையே நியமிக்க மனம் ஒப்பவில்லை. முதல் காரணம் அவர்களின் ஒற்றுமையின்மை, மற்றொன்று அவர்களின் பொறாமை உணர்வு.
நூறு கோடி மக்கள் நூறு மொழிகளைப் பேசிக்கொண்டு ஒரே நாடு என்று என்னதான் பெருமையாக சொல்லி திரிந்தாலும், வட இந்தியன், மலையாளி, தமிழன், தெலுங்கன் என்று பல குழுக்களாகத் தான் பணியிலும் இருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்கு ஏற்படும் பொறாமை, இவர்கள் இருவரையும் வெறுக்கும் மலையாளி, தென்னிந்தியர்களின் மீதான வட இந்தியர்களின் பொறாமை என இவர்களின் தனிப்பட்ட குணங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுப் படுத்தினாலும், இவ்வளவு குறைந்த ஊதியத்திற்கு இந்தியர்களையும் பிலிப்பினோக்களையும் விட்டால் படித்த வேறு நாட்டவர் கிடைப்பதில்லை.
ஆனால் இந்த பிலிப்பினோக்களின் குணம் இந்தியர்களைப் போன்றதல்ல. அவர்கள் நாட்டிலும் பல மொழிகள் இருந்தாலும் இங்கே அவர்களிடம் இருப்பது போன்ற ஒற்றுமையை வேறு எந்த இனத்திலும் காண முடியாது.
வந்து குவிந்திருந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து சல்லடை போட்டு சிலவற்றை தேர்வு செய்தேன். அவற்றில் மேரியின் அனுபவங்களும் பின்புலமும் நேர்காணலில் அவளின் நேர்மையான அணுகுமுறையும் என்னைக் கவர்ந்ததால் அவளையே இப்பணிக்கு நியமித்தேன்.
என் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் விதமாக அவளின் சுறுசுறுப்பு, அரவணைப்பான, அக்கறையான பேச்சு, எப்போதுமே மலர்ந்த முகமென அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் அவளைப் பிடித்துவிட்டது.
ஒரு வங்கியின் உயர் பதவியில் பல ஆண்டுகள் பணி புரிந்தவள், விவாகரத்தாகி பிலிப்பைன்சில் சுயமாய் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவள், வியாபாரத்தில் திடீரென ஏற்பட்ட கடன்களால் மூன்று பிள்ளைகளையும் அவள் வயதான அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு இங்கிருந்து மாதாமாதம் அவர்கள் கல்விச் செலவிற்குப் பணம் அனுப்புகிறாள்.
"இந்த ஆண்டு என் மூத்த மகள் பட்டதாரியானதும் அவளையும் இங்கு அமீரகத்துக்கு அழைத்து வந்து விடுவேன். எங்கள் ஊரில் வெளிநாட்டு பிலிப்பினோக்களுக்கு தான் மரியாதை அதிகம்" என்று அவ்வப்போது புலம்புவாள்.
இன்று என்னவென்றால் அந்த மகள் கையை அறுத்துக் கொண்டு நிற்கிறாள்.
-----------
இதோ, நேற்றோடு லெபனானிலிருந்து இந்த நாட்டுக்கு வந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது. இஸ்ரேலிய குண்டு வீச்சில் இறந்த பெற்றோரையும் மூத்த சகோதரனையும் அடக்கம் செய்து விட்டுத் தனியனாய் நான் நேசித்த பனி மலைகளையும், அலைந்து திரிந்த பெய்ரூட் நகரத் தெருக்களையும் விட்டுப் பிரியும் போதுதான் கடைசியாக வாழ்வில் அழுதது. ஆனால் இங்கு வந்த பின்னர் இந்த நிறுவனம் தான் என் உயிரும் உறவுமாகிப் போனது.
மாற்றம் ஒன்றுதானே மானுட வாழ்வின் மகத்தான தத்துவம்? மேரியின் வரவுக்குப் பின்னர் என் வாழ்விலும் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பணியில் அவளின் நேர்த்தி, சக ஊழியர்களிடத்து அன்பு, பொறுமை, பரிவு என அவளின் ஒவ்வொரு குணமும் என்னை சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
"என்ன விதமான உணர்வு இது? ஒருவேளை காதலோ? சரிதான், ஐம்பது வயதில் இது தேவையா? ஆனால் காதல் என்றாலே அன்புதானே, அன்புக்கு வயது உண்டா என்ன?"
பல நாட்கள் என்னுடன் நானே புரிந்த விவாதத்திற்குப் பிறகு முடிவு செய்தேன், இனி மீதமுள்ள நாட்கள் நாம் இணைந்து வாழலாமா என அவளிடம் கேட்டு விடலாம் என்று.
-----------------
மாலை பணி முடிந்து கிளம்பும் போது மேரியை அழைத்தேன்.
"இன்றிரவு என்னுடன் டின்னருக்கு வருகிறாயா மேரி?"
"ஓ, நிச்சயம் தாவூத். ஏதேனும் விசேஷமா?"
"ஆம் விசேஷம்தான், இன்றோடு இந்த நாட்டுக்கு வந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது, அதற்காக ஒரு சிறிய விருந்து"
உலகின் ஒரே ஏழு நட்சத்திர விடுதியின் இருபத்தி ஏழாவது தளத்தில் உள்ள உணவகத்தில் முன்பதிவு செய்திருந்த இருக்கையில் அமர்ந்தோம்.
வெளியே அரபிக் கடலில் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜூமைரா தீவு கட்டிடக்கலையின் பெருமையைப் பறைசாற்றியபடி அற்புதமாய் மின்னிக் கொண்டிருந்தது.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் நிசப்தமாய் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டே திடீரென நினைவுக்கு வந்தவன் போல்,
"அந்த டெலிகாம் ஆடிட்டிங் ஃபைலை க்ளையண்டுக்கு அனுப்பி விட்டாயா மேரி?"
"ஹூம்.. இங்கும் அலுவலக நினைப்பு தானா? நேற்றே அனுப்பி விட்டேன் தாவூத். வேறு ஏதேனும் பேசலாமா?"
அவளே ஆரம்பித்தாள். "ஆமாம், நீங்கள் ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை?"
எப்படித் துவங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தால் இப்படி நேரடியாகத் தாக்குகிறாளே.
சட்டென்று பதிலளித்தேன் "உன் போன்ற ஒரு பெண்ணை இருபது ஆண்டுகள் முன்னர் சந்தித்திருந்தால் நிச்சயம் திருமணம் செய்திருப்பேன்"
"ஹா, ஹா உலகின் அழகான பெண்கள் எல்லாம் லெபனானில்தான் பிறக்கிறார்கள், நீங்கள் என்னவென்றால் ஒரு சப்பை முகம் கொண்ட பிலிப்பினோவை திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்கிறீர்களே?"
"ஒரு வேளை அந்த வயதில் உடல் அழகை மட்டும்தான் விரும்பியிருப்பேனோ என்னவோ? ஆனால் இப்போது உன் உள்ளத்தையும் அதிலுள்ள எல்லையற்ற அன்பை மட்டும்தான் காதலிக்கிறேன் மேரி"
ஒரு நிமிடம் துணுக்குற்றாள். "என்ன சொல்கிறீர்கள் தாவூத்?"
"நிஜம்தான் மேரி, நான் உன்னைக் காதலிக்கத் துவங்கிவிட்டேன் என்று எண்ணுகிறேன். நாம் ஏன் வாழ்வின் மீதமுள்ள நாட்களை ஒன்றாய் கழிக்கக் கூடாது?"
"ஆனால் தாவூத்... நான வயதானவள் மூன்று வயது வந்த குழந்தைகளின் தாய். இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை" அவள் குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது.
"இதில் தவறொன்றும் இருப்பதாய் தெரியவில்லை மேரி, நானும் வயதானவன் தானே? முதுமையில் நாம் இருவரும் ஏன் துணையின்றித் தனிமையில் உழல வேண்டும்? உன்னைப் பற்றி எனக்கு முழுமையாய் தெரியும். அத்துடன் உன் பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல தகப்பனாய் இருப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது"
"நான் சற்று யோசிக்க வேண்டும்.... நாளை காலை என் முடிவை சொல்கிறேனே தாவூத்?"
"ஒன்றும் அவசரமில்லை மேரி, பொறுமையாய் சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுப்பாய் என்று நம்புகிறேன்"
வீடு திரும்பும்போது காரில் எதுவும் பேசாமல் தீவிரமான யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
"உன் வீடு வந்துவிட்டது மேரி" இறங்கிச் சென்று அவள் புறமிருந்த கதவைத்திறந்து சொன்னேன்.
டிசம்பர் மாதக் குளிர்காற்று உடலெங்கும் ஊசி போல் குத்தியது. இந்தப் பாலையில் இப்படித்தான், கோடைக் காலங்களில் சூரியனின் வெப்பம் உடலை எரிக்கும். குளிர்காலங்களில் உடல் விறைக்குமளவு நடுங்கும்.
"ம்..ம்ம்.." சுய உணர்வுக்கு வந்தவளாய் மெலிதாய்ப் புன்னகைத்துக் கொண்டே கீழிறங்கினாள்.
அவள் முகத்தில் ஏதோ தெளிவு பிறந்தது போலிருந்தது. "எனக்கு சம்மதம் தாவூத், ஆனால் என் அம்மாவிடமும் மூத்த மகளிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன். நிச்சயம் இருவரும் மகிழ்வார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர்கள்தான் நான் எவ்வளவு மறுத்தாலும் அடிக்கடி மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவர். என் பிள்ளைகள் என்னைவிட அன்பும் பொறுப்பும் நிறைந்தவர்கள். உங்களை அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்"
"குட் நைட் தாவூத்" புறங்கையில் ஒரு ஈர முத்தத்தைப் பதித்து விடை பெற்றாள் மேரி.
உயர்திணைகள், அஃறிணைகள் என அருகிலிருந்த அனைத்தும் அழகாய் இருந்த அந்த இரவு விடியவே கூடாதா என பைத்தியகாரத்தனமாய் எண்ணியது மனம்.
-----------------------
விடியலில் ஜன்னலுக்கு வெளியே சிரித்த சூரியன் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது போலிருந்தது. உற்சாகமாய் அலுவலகம் கிளம்பினேன்.
என் அறைக்குள் நுழைந்ததும் எனக்காகவே காத்திருந்தது போல் அழைப்பு மணியடித்தது.
"யெஸ் கம் இன்"
"ஒரு வாரம் விடுப்பு வேண்டும் தாவூத், மணிலா செல்ல வேண்டும்" அறையினுள் நுழைந்த மேரியின் கலங்கிய கண்களை நோக்கியதுமே எனக்குள்ளும் ஏதோ கலங்கியது.
----------------
இன்றோடு அவளைப் பிரிந்து ஒரு வாரம் ஆயிற்று. அவளிடமிருந்து எந்த விதமான தகவலும் இல்லை. அலைபேசியில் அழைத்தால் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாய் திரும்பத் திரும்ப சொல்லிற்று.
வாழ்வில் முதல் முறையாக அவளில்லாத கணங்களில் தனிமையின் கொடூரம் தாக்கத் துவங்கியது. ஹூம் அவளும் கணவனின் பிரிவுக்குப் பின்னர் இப்படித்தானே தவித்திருப்பாள்? இனி எதற்கும் கலங்காத வண்ணம் அவளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே மின்னஞ்சலை திறந்த போது இன்ப அதிர்ச்சி, மேரி ஏதோ செய்தி அனுப்பியிருக்கிறாள். உள்ளமெங்கும் பொங்கிய உற்சாகத்தோடு அதனை திறந்தேன்.
"அன்புள்ள தாவூத்,
இவ்வளவு நாட்கள் உங்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். மணிலாவுக்கு வந்த தினத்திலிருந்தே இங்கு நடக்கும் பல நிகழ்வுகளில் எனக்கு மகிழ்வு இல்லை. இந்த ஓராண்டில் என் பிள்ளைகளைப் பிரிந்து வெகு தொலைவு வந்து விட்டதாய் உணர்கிறேன். பணம் மட்டும் தானா வாழ்க்கை? அதற்காக ஏன் என் செல்லங்களைப் பிரிய வேண்டும்? ஒரு வேளை நான் உடன் இருந்திருந்தால் என் மகள் இப்படித் தவறான முடிவு எடுத்திருக்க மாட்டாளோ?
இனி வரும் நாட்களை அவர்களுக்காகவே கழிப்பதாய் முடிவு செய்து விட்டேன். உலகம் மிகவும் சிறியது தாவூத். என்றேனும் ஒரு நாள் அவர்களுக்கு நான் பாரமாய் மாறியதாய் உணர்ந்தால் நிச்சயம் உங்களைத் தேடி வருவேன். அப்போதும் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்,
-மேரி"
எவ்வளவு முயன்றும் விழிகளில் ஈரம் படர்வதை தவிர்க்க இயலவில்லை. ஏனோ லெபனானின் பனி மலைகளும், பெய்ரூட்டின் தெருக்களும் மீண்டும் நினைவுக்கு வந்தன.
--------------------
I am forever walking upon these shores,
Between the sand and the foam,
The high tide will erase my foot-prints,
And the wind will blow away the foam.
But the sea and the shore will remain Forever.
-Khalil Gibran